எட்மன்டன் — மத்திய ஆல்பர்ட்டாவில் ஹாக்கிப் பைக்குள் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட எட்டு வயது சிறுமியின் மரணம் தொடர்பான வழக்கில், குற்றவாளியாகக் கருதப்பட்ட ஆஷ்லி ராட்டில்ஸ்நேக் (Ashley Rattlesnake) என்பவருக்கு எட்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவர் மீது சுமத்தப்பட்ட மனிதக்கொலை (manslaughter) குற்றச்சாட்டை அவர் ஒப்புக்கொண்டிருந்தார்.
நீதிமன்றத்தில் அவர் ஏற்கனவே சிறையில் கழித்த காலத்தைக் கருத்தில் கொண்டு, அவருக்கு சுமார் நான்கு ஆண்டுகள் தண்டனைக்காலம் கழிக்கப்படுவதாக நீதிபதி அறிவித்தார்.
நினா நாபோப் (Nina Napope) என்ற எட்டு வயது சிறுமியின் மரணம் தொடர்பான இந்த வழக்கு ஊடகங்களில் பெரும் பேசுபொருளானது. குறிப்பாக, இந்த வழக்கின் சட்டமா அதிபர் திணைக்கள வழக்கறிஞர்களின் செயல்பாட்டை எட்மன்டன் காவல்துறையினர் பகிரங்கமாகக் விமர்சித்திருந்தனர். இச்சிறுமிக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு மிகக் குறைந்த தண்டனை வழங்கப்படுவது நீதியின் மீதான அவமதிப்பாக அமையும் என்றும் காவல்துறை சுட்டிக்காட்டியிருந்தது.
எவ்வாறாயினும், காவல்துறையின் இந்த விமர்சனங்கள் தனது தீர்ப்பைப் பாதிக்கவில்லை என்று கிங்ஸ் பெஞ்ச் நீதிமன்ற நீதிபதி ஜோடி பிரேசர் (Jody Fraser) தெரிவித்துள்ளார்.
2023 ஆம் ஆண்டு, ஆஷ்லி ராட்டில்ஸ்நேக்கின் பாதுகாப்பில் இருந்தபோதுதான் நினா நாபோப் உயிரிழந்த நிலையில், ஒரு லொறியின் பின்புறம் வைக்கப்பட்டிருந்த ஹாக்கிப் பைக்குள் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.