வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்கப் படைகள் பதவியிலிருந்து அகற்றியதைத் தொடர்ந்து, வாஷிங்டனுக்கும் ஹவானாவுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், கம்யூனிஸ்ட் ஆட்சி நடைபெறும் கியூபாவை ஒரு "நட்பு ரீதியான கையகப்படுத்துதல்" (friendly takeover) மூலம் தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவது குறித்து பரிசீலிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளிக்கிழமை (27) தெரிவித்தார்.
வெனிசுலாவின் வலுவான தலைவராக இருந்த நிக்கோலஸ் மதுரோவை அகற்றியதிலிருந்து, கியூபாவுக்கு எதிரான கடுமையான எரிபொருள் தடையை டிரம்பின் நிர்வாகம் அமல்படுத்தியுள்ளது. இது கியூபாவை பொருளாதாரச் சரிவின் விளிம்பிற்குக் கொண்டு வந்துள்ளது.
"அவர்களிடம் தற்போது பணம் இல்லை, அவர்களிடம் எதுவுமே இல்லை. ஆனால் அவர்கள் எங்களுடன் பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஒருவேளை நாங்கள் கியூபாவை நட்பு ரீதியாகக் கையகப்படுத்தலாம்," என்று வெள்ளிக்கிழமை வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறும்போது டிரம்ப் செய்தியாளர்களிடம் கூறினார்.
"கியூபா அரசாங்கம் எங்களுடன் பேசிக்கொண்டிருக்கிறது, அவர்கள் பெரும் சிக்கலில் உள்ளனர்" என்றும் அவர் குறிப்பிட்டார்.
1959 ஆம் ஆண்டு பிடல் காஸ்ட்ரோவின் புரட்சிக்குப் பிறகு, கியூபா நீண்டகாலமாக அமெரிக்காவின் வர்த்தகத் தடையின் கீழ் உள்ளது. சமீபத்திய ஆண்டுகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டிருந்தாலும், டிரம்ப் தனது இரண்டாவது பதவிக் காலத்தில் அதிபரான பின்னர் மீண்டும் உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. லத்தீன் அமெரிக்கா மீதான வாஷிங்டனின் பிடியை இறுக்க அவர் முயற்சித்து வருகிறார்.
இதற்கிடையில், புளோரிடாவில் பதிவு செய்யப்பட்ட அதிவேகப் படகு ஒன்றில் ஆயுதங்களுடன் கியூபாவிற்குள் நுழைய முயன்ற நபர்கள் மீது, தங்கள் நாட்டின் கடலோரக் காவல்படையினர் தாக்குதல் நடத்தியதாகவும், அதில் நான்கு பேர் கொல்லப்பட்டும் ஆறு பேர் காயமடைந்தும் உள்ளதாகவும் கியூபா அரசாங்கம் புதன்கிழமை தெரிவித்திருந்தது.
அந்தப் படகில் இருந்த அனைவரும் அமெரிக்காவில் வசிக்கும் கியூபர்கள் என்று ஹவானா கூறியுள்ளது. 1960 களில் இருந்து பல அலையாக கியூபர்கள் அமெரிக்காவிற்கு இடம்பெயர்ந்து வருகின்றனர். இந்தச் சம்பவத்தில் ஒரு அமெரிக்கக் குடிமகன் கொல்லப்பட்டதையும், மற்றொருவர் காயமடைந்ததையும் அமெரிக்க அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
கியூபாவின் வடக்குக் கரையிலிருந்து சுமார் ஒரு கடல் மைல் தொலைவில், அந்த அதிவேகப் படகு கடலோரக் காவல்படை கப்பல் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், அந்தப் படகில் துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்கள் கண்டெடுக்கப்பட்டதாகவும் கியூப அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து அமெரிக்க அரசாங்கம் இதுவரை பெரிய அளவில் கருத்து தெரிவிக்கவில்லை. கரீபியன் பயணத்தில் உள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ, வாஷிங்டன் இது குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும், "அதற்கேற்ப பதிலடி கொடுப்போம்" என்றும் கூறியுள்ளார்.