ஹாலிஃபாக்ஸ் — கடந்த 2024ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஹாலிஃபாக்ஸில் உள்ள வோல்மார்ட் அங்காடி ஒன்றில், ஊழியர் ஒருவர் பெரிய பேக்கரி அடுப்பிற்குள் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணையை நோவா ஸ்கோஷியாவின் தொழிலாளர், திறன் மற்றும் குடிவரவுத் திணைக்களம் (Department of Labour, Skills and Immigration) முடிவுக்குக் கொண்டுவந்துள்ளது.
இந்தச் சம்பவத்தில் எந்தவிதமான பாதுகாப்பு விதிமீறல்களும் கண்டறியப்படவில்லை என்று அந்தத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மம்ஃபோர்ட் சாலையில் (Mumford Road) அமைந்துள்ள வோல்மார்ட் அங்காடியின் பணிச்சூழல் மற்றும் விபத்து நடந்த அந்த அடுப்பு குறித்து அதிகாரிகள் விரிவான விசாரணை மேற்கொண்டனர்.
சம்பவத்தின் போது அந்த அடுப்பு முறையாகச் செயல்பட்டுக் கொண்டிருந்தது என்றும், குறித்த பெண் ஊழியரின் மரணத்திற்கு வழிவகுக்கும் வகையில் எந்தவிதமான பாதுகாப்பு விதிமீறல்களும் அங்கு இல்லை என்றும் புலனாய்வாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்த அடுப்பு தொடர்பில் வேறு எந்தப் பரந்த பாதுகாப்பு அச்சுறுத்தல்களும் இல்லை என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வெள்ளிக்கிழமை கருத்து வெளியிட்ட தொழிலாளர், திறன் மற்றும் குடிவரவு அமைச்சர் நோலன் யங், "இந்தத் துயரமான இழப்பை எதிர்கொண்டுள்ள ஊழியரின் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் சக பணியாளர்களின் துயரத்தில் நாமும் பங்கேற்கிறோம்.
என்ன நடந்தது என்பதையும், பாதுகாப்புத் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டனவா என்பதையும் கண்டறிந்து, எதிர்காலத்தில் இத்தகைய சம்பவங்களைத் தடுப்பதே எமது பொறுப்பாகும்" என்று தெரிவித்தார்.
கடந்த 2024 அக்டோபர் 19 அன்று இந்தத் திடீர் மரணம் குறித்து ஹாலிஃபாக்ஸ் பிராந்திய காவல்துறையினர் விசாரணை நடத்தினர். வோல்மார்ட்டின் பேக்கரி பிரிவிலிருந்த பெரிய 'வாக்-இன்' (walk-in) அடுப்பிற்குள் 19 வயதுடைய பெண் ஊழியர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.
நவம்பர் 2024 இல், இந்த மரணத்தில் எந்தவிதமான சந்தேகத்திற்கிடமான சூழலோ அல்லது வன்முறையோ (foul play) இல்லை என்று காவல்துறையினர் உறுதிப்படுத்தினர்.
அவர் எவ்வாறு அடுப்பிற்குள் சென்றார் அல்லது மரணத்திற்கான காரணம் என்ன போன்ற விவரங்களை வெளியிட காவல்துறை மறுத்துவிட்டது. இந்தச் சம்பவத்தில் வேறு எவருக்கும் தொடர்பு இருப்பதாகத் தாங்கள் கருதவில்லை என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மரிடைம் சீக்கிய சமூகம் (Maritime Sikh Society) அந்தப் பெண்ணை குர்சிம்ரன் கவுர் (Gursimran Kaur) என அடையாளம் கண்டிருந்தது. அவர் தனது தாயுடன் சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஹாலிஃபாக்ஸிற்கு இடம்பெயர்ந்து, இருவரும் வோல்மார்ட் அங்காடியில் பணியாற்றி வந்தனர்.
சம்பவம் நடந்த அன்று, தனது மகளை ஒரு மணி நேரத்திற்கும் மேலாகக் காணாததால் தாயார் தேடியபோது, அந்த அடுப்பிற்குள் அவர் சடலமாகக் கிடப்பதைக் கண்டதாகச் சீக்கிய சமூகம் தெரிவித்திருந்தது.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, அந்த வோல்மார்ட் அங்காடி சில மாதங்கள் புதுப்பிப்புப் பணிகளுக்காக மூடப்பட்டிருந்தது. மேலும், அந்த அடுப்பு அங்காடியிலிருந்து அகற்றப்பட்டதாகவும், இது நிறுவனம் நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தி வரும் திட்டமிட்ட மாற்றங்களின் ஒரு பகுதி என்றும் வோல்மார்ட் கனடா பேச்சாளர் தெரிவித்திருந்தார். அந்த அங்காடி 2025 பிப்ரவரி மாதம் மீண்டும் திறக்கப்பட்டது.