அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் ஈரான் மீது இன்று (பிப்ரவரி 28, 2026) நடத்திய கூட்டுத் தாக்குதல்களைத் தொடர்ந்து, மத்திய கிழக்கு பிராந்தியத்தின் வான்பரப்பு பாதுகாப்புக் காரணங்களுக்காக மூடப்பட்டுள்ளது.
இதனால் ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகளுக்கு இடையிலான விமானப் பயணங்கள் பெரும் குழப்பத்திற்குள்ளாகியுள்ளன.
வான்பரப்பு மூடல்:
ஈரான், இஸ்ரேல், ஈராக், ஜோர்தான், கட்டார், பஹ்ரைன், குவைத் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய குறைந்தது எட்டு நாடுகள் தமது வான்பரப்புகளைத் தற்காலிகமாக மூடியுள்ளன. இதன் விளைவாக, வழமையாக இப்பகுதிகள் வழியாகச் செல்லும் ஆயிரக்கணக்கான விமானங்கள் திசைதிருப்பப்பட்டுள்ளன அல்லது இரத்து செய்யப்பட்டுள்ளன.
பிரதான மையங்கள் பாதிப்பு:
உலகின் பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்றான துபாய் சர்வதேச விமான நிலையம் உள்ளிட்ட பல முக்கிய வான்வழித் தளம் அமைந்துள்ள நாடுகளில் விமான நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.
பயண நேர அதிகரிப்பு:
வான்பரப்பு முடக்கத்தால், விமானங்கள் வழமையான பாதைகளைத் தவிர்த்து, நீண்ட மாற்றுப் பாதைகளில் பறக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளன. இதனால் பயண நேரம் 45 நிமிடங்கள் முதல் 120 நிமிடங்கள் வரை அதிகரித்துள்ளதுடன், மேலதிக எரிபொருள் தேவையும் ஏற்பட்டுள்ளதாக விமான போக்குவரத்து ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
விமான நிறுவனங்களின் நடவடிக்கை:
லுஃப்தான்சா (Lufthansa), எயார் பிரான்ஸ் (Air France), கே.எல்.எம் (KLM), விஸ் ஏர் (Wizz Air), மற்றும் இந்தியாவைச் சேர்ந்த ஏர் இந்தியா (Air India), இண்டிகோ (IndiGo) உள்ளிட்ட முன்னணி சர்வதேச விமான நிறுவனங்கள் மத்திய கிழக்கிற்கான தமது சேவைகளை இரத்து செய்துள்ளன அல்லது ஒத்திவைத்துள்ளன.
பாதிக்கப்பட்ட பயணிகள் தமது விமான நிறுவனங்களின் இணையதளங்கள் அல்லது செயலிகள் ஊடாகப் பயண விபரங்களைச் சரிபார்த்துக்கொள்ளுமாறும், விமான நிலையங்களுக்குச் செல்வதைத் தவிர்த்துக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.