சனிக்கிழமை அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது பெரும் அளவிலான தாக்குதலை மேற்கொண்டன. இதனைத் தொடர்ந்து, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், 1979 முதல் நாட்டை ஆட்சி செய்து வரும் இஸ்லாமிய தலைமையிடமிருந்து தங்களது விதியை கைப்பற்றுமாறு ஈரான் மக்களைக் கேட்டுக் கொண்டார்.
இதற்குப் பதிலடியாக, ஈரான் இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க இராணுவ தளங்களை இலக்காகக் கொண்டு ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களைப் பாய்ச்சியது.
ஈரானின் உயரிய தலைவர் ஆயத்துல்லா அலி காமெனையின் அலுவலகங்களைச் சுற்றியுள்ள பகுதிகள் முதல் தாக்குதல்களில் தாக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தலைநகர் தெஹ்ரானில் புகை எழுந்ததை காண முடிந்ததாக ஈரான் ஊடகங்கள் தெரிவித்தன. 86 வயதான அவர் அந்த நேரத்தில் அலுவலகத்தில் இருந்தாரா என்பது உடனடியாகத் தெரியவில்லை.
அமெரிக்க நடவடிக்கைக்கு கனடாவின் ஆதரவு
“ஈரான் அணுஆயுதம் பெறுவதைத் தடுக்கவும், அதன் ஆட்சியின் மூலம் உலக அமைதிக்கும் பாதுகாப்புக்கும் ஏற்படும் அச்சுறுத்தல்களைத் தவிர்க்கவும் அமெரிக்கா எடுத்த நடவடிக்கைக்கு கனடா ஆதரவு வழங்குகிறது” என பிரதமர் மார்க் கார்னி மற்றும் வெளிவிவகார அமைச்சர் அனிதா ஆனந்த் வெளியிட்ட கூட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கில் நிலவும் நிலையற்ற தன்மைக்கும் பயங்கரவாதத்திற்கும் ஈரானின் இஸ்லாமிய குடியரசே பிரதான காரணம் என கனடா குற்றம் சாட்டியுள்ளது.
மேலும், 256 ஈரானிய நிறுவனங்களுக்கும் 222 தனிநபர்களுக்கும் ஏற்கனவே கனடா தடைகள் விதித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இஸ்ரேலின் பாதுகாப்பு உரிமையை கனடா மீண்டும் உறுதிப்படுத்துவதாகவும் அறிக்கை கூறுகிறது.
பொய்லிவ்ரே ஆதரவு
கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவர் பியர் பொய்லிவ்ரே, ஈரானின் மத இராணுவ ஆட்சியை முறியடித்து, தங்களது இறையாண்மையைப் பாதுகாப்பதற்காக அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் கூட்டணி நாடுகள் மேற்கொண்ட நடவடிக்கைக்கு தாம் ஆதரவு தெரிவிப்பதாக சமூக ஊடகமான X இல் பதிவிட்டுள்ளார்.
தாக்குதலை கண்டிக்கும் NDP
NDP கட்சியின் வெளிநாட்டு விவகார விமர்சகர் அலெக்சாண்டர் புலெரிஸ், ஈரான் மீது நடத்தப்பட்ட குண்டுவீச்சை கடுமையாகக் கண்டிப்பதாக தெரிவித்தார். இது முழுப் பிராந்தியத்தையும் பெரிய போர் நிலைக்கு இழுத்துச் செல்லக்கூடும் என அவர் எச்சரித்தார்.
ஈரானின் அணுத் திட்டம் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச அணுசக்தி முகமை வழியாகவே கையாளப்பட வேண்டும் எனவும், கனடா அரசின் ஆதரவு முடிவை NDP “கடுமையாக கண்டிக்கிறது” எனவும் கூறினார்.
ஏர் கனடா விமான சேவை ரத்து
தாக்குதல் காரணமாக துபாய்க்கும் துபாயிலிருந்து கனடாவுக்கும் செல்லும் விமான சேவைகளை ஏர் கனடா நிறுவனம் ரத்து செய்துள்ளது. நிலைமையை தொடர்ந்து கண்காணித்து சேவை அட்டவணை மாற்றப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
டொராண்டோவில் பாதுகாப்பு பலப்படுத்தல்
டொராண்டோ நகரில் உள்ள தூதரக அலுவலகங்கள் மற்றும் வழிபாட்டு தலங்களைச் சுற்றி கூடுதல் காவல் பாதுகாப்பு வழங்கப்படும் என போலீசார் தெரிவித்தனர். சமூக பாதுகாப்பை உறுதி செய்வதே இதன் நோக்கம் என கூறப்பட்டுள்ளது.
ரிச்ச்மண்ட் ஹில்லில் நடைபெறவுள்ள பெரிய போராட்டத்தை முன்னிட்டு, யார்க் பிராந்திய போலீசார் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர்.
இஸ்ரேல் மீது ஈரான் தொடர்ந்து ஏவுகணை தாக்குதல்
ஈரானில் இருந்து “பதினக்கணக்கான” ஏவுகணைகள் இஸ்ரேல் நோக்கி பாய்ச்சப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது. பெரும்பாலானவை தடுக்கப்பட்டாலும், தாக்குதல்கள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. பொதுமக்கள் பாதுகாப்பு அறிவுறுத்தல்களை கடைப்பிடிக்க வேண்டும் என இராணுவத் தளபதி எச்சரித்துள்ளார்.
ஈரானில் உயிரிழப்புகள்
ஈரானின் தென்மேற்கு பகுதியில் நடைபெற்ற அமெரிக்க–இஸ்ரேல் தாக்குதல்களில் குறைந்தது 15 பேர் உயிரிழந்துள்ளதாக அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அப்பிராந்திய ஆளுநர் கூறியுள்ளார்.
ஐ.நா. உடனடி நடவடிக்கை கோரல்
ஈரானின் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்சி, சர்வதேச அமைதிக்கும் பாதுகாப்புக்கும் ஏற்பட்டுள்ள இந்த மீறலுக்கு உடனடி நடவடிக்கை எடுக்குமாறு ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு பேரவையிடம் கோரிக்கை விடுத்துள்ளார். அவசர கூட்டம் நடைபெறவுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம் அவசர கூட்டம்
மத்திய கிழக்குப் போர்நிலையைப் பற்றி விவாதிக்க ஐரோப்பிய ஒன்றியம் திங்கட்கிழமை அவசர பாதுகாப்புக் கூட்டம் நடத்தவுள்ளதாக ஐரோப்பிய ஆணைக்குழு தலைவர் உர்சுலா வான் டெர் லெயன் அறிவித்துள்ளார்.
போரை உடனடியாக நிறுத்த வேண்டும் – ஐ.நா.
அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் மேற்கொண்ட தாக்குதல்கள் உலக அமைதிக்கும் பாதுகாப்புக்கும் தீவிர அச்சுறுத்தலாகும் என ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டேரஸ் தெரிவித்துள்ளார். உடனடி போர் நிறுத்தமும் பதற்றத் தணிப்பும் அவசியம் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
சவுதி இளவரசருடன் எகிப்து தலைவர் தொலைபேசி உரையாடல்
எகிப்து ஜனாதிபதி அப்துல்-பத்தாஹ் எல்-சிசி, சவுதி அரேபிய இளவரசர் முகம்மது பின் சல்மானுடன் தொலைபேசி மூலம் கலந்துரையாடினார்.
இந்த உரையாடலில், சவுதி அரேபியாவுடன் தனது ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தியதுடன், பிராந்தியத்தில் நிலவும் பதற்றத்தை “கட்டுப்படுத்தும் முயற்சிகளை தீவிரப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும்” அவர் வலியுறுத்தினார்.
“தொடர்ச்சியான இராணுவ பதற்றம், பிராந்திய மக்களுக்கு மேலும் துன்பத்தை மட்டுமே ஏற்படுத்துவதுடன், அபிவிருத்தி வாய்ப்புகளையும் பாதிக்கும்,” என எல்-சிசி தெரிவித்துள்ளார்.
ஈரான் மீது அமெரிக்க தாக்குதலை கடுமையாக கண்டிக்கும் முன்னணி டெமோகிராட்
விர்ஜீனியா மாநிலத்தைச் சேர்ந்த அமெரிக்க செனட்டர் டிம் கேய்ன், “ஈரானில் அமெரிக்க தலையீடும், மத்திய கிழக்கில் முடிவில்லாத போர்களும் கடந்த பல தசாப்தங்களாக நீடித்த நிலையில், அதிலிருந்து ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எதையும் கற்றுக்கொண்டாரா?” என கேள்வி எழுப்பினார்.
“பல மாதங்களாக, அமெரிக்க மக்கள் அதிகமான போரை அல்ல; குறைந்த விலைகளையே விரும்புகின்றனர். குறிப்பாக, அரசியலமைப்பின்படி காங்கிரஸின் அனுமதி பெறப்படாத போர்களை அவர்கள் விரும்பவில்லை,” என அவர் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டார்.
“இந்த தாக்குதல்கள் மிகப்பெரிய தவறு. இது எங்கள் படைவீரர்களின் மற்றும் வெளிநாட்டு தூதரகங்களில் பணியாற்றுவோரின் உயிர்களை காவு கொள்ளாதிருக்க நான் பிரார்த்திக்கிறேன்,” என்றும் அவர் கூறினார்.
மேலும், ஈரான் மீது தாக்குதல் நடத்த அனுமதி வழங்குவது அல்லது அதை கட்டுப்படுத்துவது குறித்து உடனடியாக அமெரிக்க செனட் அவையில் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
பல நாடுகளுடன் எகிப்து ஆலோசனை
மத்திய கிழக்கில் அதிகரித்துள்ள இராணுவ பதற்றம் தொடர்பாக, சவுதி அரேபியா, துருக்கி, ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட பல பிராந்திய மற்றும் ஐரோப்பிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களுடன் எகிப்தின் வெளிவிவகார அமைச்சர் பத்ர் அப்துல்லத்தி கலந்துரையாடினார்.
இந்த பதற்றம் மத்திய கிழக்கின் பாதுகாப்புக்கும் நிலைத்தன்மைக்கும் “மிக மோசமான விளைவுகளை” ஏற்படுத்தும் என அவர் எச்சரித்தார். முழுமையான போர் நிலையைத் தவிர்க்க அரசியல் மற்றும் தூதரக தீர்வுகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
தாக்குதலுக்கு முன் அமெரிக்க காங்கிரஸுக்கு தகவல்
சட்டப்படி, ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படுவதற்கு முன்பே அமெரிக்க காங்கிரஸுக்கு தகவல் வழங்கப்பட்டதாக, சம்பந்தப்பட்ட விவகாரங்களை நன்கு அறிந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.
அறிவிப்புகளில் பாலிஸ்டிக் ஏவுகணைகள் குறித்த குறிப்புகள் இருந்த போதிலும், தாக்குதலின் பரப்பளவும் இலக்குகளும் இவ்வளவு விரிவானதாக இருக்கும் என குறிப்பிடப்படவில்லை.
அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் மார்கோ ரூபியோ, முக்கிய சட்டமன்ற உறுப்பினர்களை தனிப்பட்ட முறையில் தொடர்பு கொண்டு பேசியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான் தாக்குதலை சவுதி அரேபியா முறியடித்ததாக அறிவிப்பு
சவுதி அரேபிய தலைநகரையும் கிழக்கு மாகாணத்தையும் இலக்காகக் கொண்டு ஈரான் தாக்குதல் நடத்தியதாகவும், அதை வெற்றிகரமாக முறியடித்ததாகவும் சவுதி அரசு தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலை “வெளிப்படையானதும், கோழைத்தனமானதும்” என சவுதி அரேபியா கடுமையாக விமர்சித்துள்ளது.
“அமெரிக்கா தன்னிச்சையான போரில் நுழைகிறது” – சட்டமன்ற உறுப்பினர்
ஈரான் விவகாரத்தில் விளக்கமளிக்கப்பட்ட அமெரிக்க மூத்த சட்டமன்ற உறுப்பினர் ஜிம் ஹைம்ஸ், அமெரிக்கா “தன்னிச்சையாகத் தேர்ந்தெடுத்த போரில்” நுழைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
“இந்த தாக்குதல்களுக்கு முன்பும் பின்னும் நிர்வாகத்திடமிருந்து நான் கேட்ட அனைத்தும், இது தெளிவான முடிவில்லாத ஒரு போர் என்பதையே காட்டுகிறது,” என அவர் கூறினார்.
பேச்சுவார்த்தைக்கு திரும்புமாறு சீனா அழைப்பு
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களைப் பற்றி சீனா “மிகுந்த கவலை” வெளியிட்டுள்ளது.
உடனடியாக இராணுவ நடவடிக்கைகளை நிறுத்தி, பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டும் என சீனா வலியுறுத்தியுள்ளது.
உக்ரைன் ஆதரவு
உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி, ஈரான் மீது அமெரிக்க தலைமையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களுக்கு ஆதரவு தெரிவித்தார்.
ரஷ்யாவுக்கு ஷாஹெட் ட்ரோன்கள் வழங்கியதன் மூலம் ஈரான் “புடின் அரசின் துணை குற்றவாளி” என அவர் குற்றம் சாட்டினார்.
ஓமான் வேண்டுகோள்
ஈரான் விவகாரத்தில் அமெரிக்கா மேலும் சிக்கிக்கொள்ள வேண்டாம் என ஓமான் வெளிவிவகார அமைச்சர் பத்ர் அல்-புசைதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தெஹ்ரானை விட்டு வெளியேறும் மக்களுக்கு நெடுஞ்சாலை ஒருவழி போக்குவரத்தாக மாற்றம்
தலைநகர் தெஹ்ரானை விட்டு வடக்குப் பகுதிகளுக்கு செல்லும் மக்களுக்காக, முக்கிய நெடுஞ்சாலை ஒருவழிப் பாதையாக மாற்றப்பட்டுள்ளதாக ஈரான் அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கு முழுவதும் விமான சேவைகள் பாதிப்பு
ஈரான் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் காரணமாக, மத்திய கிழக்கு முழுவதும் விமான சேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
இஸ்ரேல், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் கத்தார் ஆகிய நாடுகள் தங்களது வான்வெளியை மூடியுள்ளன.
ஈரான் தலைமைத்துவ உறுப்பினர்களும் இலக்காகினர்
இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களின் இலக்குகளில், ஈரான் தலைமையக உறுப்பினர்களும் அடங்கியிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தாக்குதல்கள் வெற்றியடைந்தனவா என்பது தொடர்பில் அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் இதுவரை இல்லை.
ரஷ்யா கண்டனம்
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களை, “ஐக்கிய நாடுகள் சபை உறுப்பினராக உள்ள ஒரு சுயாதீன நாட்டின் மீது முன்திட்டமிடப்பட்டதும் காரணமற்றதும் ஆன ஆயுதத் தாக்குதல்” என ரஷ்ய வெளிவிவகார அமைச்சகம் சனிக்கிழமை கடுமையாகக் கண்டித்துள்ளது.
இராணுவ நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட்டு, தூதரக முயற்சிகளுக்கு திரும்ப வேண்டும் எனவும் அது வலியுறுத்தியுள்ளது.
டெலிகிராம் ஊடாக வெளியிட்ட அறிக்கையில், ஈரானின் அணுத் திட்டம் குறித்து கவலை காட்டுவதை முன்னிறுத்தி, உண்மையில் ஆட்சி மாற்றத்தை நோக்கி வாஷிங்டனும் டெல் அவீவும் செயல்படுகின்றன என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல்கள், பிராந்தியத்தில் “மனிதாபிமான, பொருளாதார மற்றும் கூடுமானால் கதிரியக்க பேரழிவை” ஏற்படுத்தக்கூடும் என்றும், மத்திய கிழக்கை “கட்டுப்பாடற்ற பதற்றத்தின் பள்ளத்தில்” தள்ளிவிடும் என்றும் ரஷ்யா எச்சரித்துள்ளது.
பிரித்தானிய பிரதமர் அவசர கூட்டம்
பிரித்தானிய பிரதமர் கியர் ஸ்டார்மர், சனிக்கிழமை காலை அரசின் அவசரக் குழுக் கூட்டத்துக்குத் தலைமை தாங்கினார். அடுத்த சில மணிநேரங்களில் கூட்டணி நாடுகளுடன் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“மத்திய கிழக்கில் பரந்தளவிலான போர் நிலை உருவாகக் கூடாது என்பதே எங்கள் நிலைப்பாடு,” என பிரித்தானிய அரசு பேச்சாளர் கூறியுள்ளார்.
பிரித்தானியா நேரடியாக பங்கேற்கவில்லை
அத்துடன், இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்துக்கான பயணங்களை முற்றாகத் தவிர்க்குமாறு தனது குடிமக்களுக்கு பிரித்தானிய வெளிவிவகார அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது. மத்திய கிழக்கின் பிற நாடுகளில் உள்ள பிரித்தானியர்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடையுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
அத்தியாவசிய பொருட்களை குவிக்கும் ஈரான் மக்கள்
தெஹ்ரானின் வடக்கு பகுதிகளில் உள்ள சூப்பர் மார்க்கெட்களில், ரொட்டி மற்றும் குடிநீர் வாங்கும் மக்களின் கூட்டம் அதிகரித்துள்ளது. இருப்பினும், விநியோகம் குறைவாக இருப்பதால், ரொட்டி, முட்டை, பாட்டிலில் குடிநீர், பால் உள்ளிட்ட பொருட்கள் சில கடைகளில் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.
நகரம் முழுவதும் உள்ள எரிபொருள் நிலையங்களிலும் நீண்ட வரிசைகள் காணப்படுகின்றன.
சோலேமானி நெடுஞ்சாலையில் மேற்கு–கிழக்கு திசையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் நிலவுவதை அரசு தொலைக்காட்சி காட்சிகள் காட்டின.
ஈரான் மீது தாக்குதலை பாகிஸ்தான் கண்டனம்
ஈரான் மீது மேற்கொள்ளப்பட்ட “நியாயமற்ற தாக்குதல்களை” பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் இஷாக் தார் கடுமையாகக் கண்டித்துள்ளார்.
ஈரான் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்சியுடன் தொலைபேசி உரையாடிய அவர், உடனடியாக பதற்றம் குறைக்கப்பட்டு, தூதரக பேச்சுவார்த்தைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியதாக பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஈரானிய தாக்குதலை குவைத் முறியடித்ததாக அறிவிப்பு
ஈரான் மேற்கொண்ட “கொடூரமான தாக்குதலை” தங்களது வான்பாதுகாப்பு அமைப்புகள் வெற்றிகரமாக முறியடித்ததாக குவைத் தேசிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
தங்களது பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் முழு உரிமையும் குவைத்துக்கு உள்ளதாக வெளிவிவகார அமைச்சகம் கூறியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, குவைத் ஏர்வேஸ் நிறுவனம் தற்காலிகமாக விமான சேவைகளை இடைநிறுத்தியுள்ளது.
ஈராகில் அமெரிக்க இராணுவத் தளத்தருகே புகையும் வெடிப்பும்
ஈராகின் வடக்கு குர்திஷ் தன்னாட்சிப் பகுதியின் தலைநகரான இர்பிலில் உள்ள விமான நிலையத்தருகே அமைந்த அமெரிக்க இராணுவத் தளத்தின் அருகில் புகை எழுந்ததாகவும், பல வெடிப்புச் சத்தங்கள் கேட்கப்பட்டதாகவும் செய்தியாளர்கள் தெரிவித்தனர்.
ஏவுகணைகள் வான்பாதுகாப்பு அமைப்புகள் மூலம் தடுக்கப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் கூறின. இதுகுறித்து ஈராக் அரசு அல்லது அமெரிக்க தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியாகவில்லை.
கட்டுப்பாடு மற்றும் தூதரக முயற்சிக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் அழைப்பு
ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றத்தை கட்டுப்படுத்தி, அணுப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தூதரக முயற்சிகளில் ஈடுபட வேண்டுமென கூட்டு அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
“அணுப் பாதுகாப்பை உறுதி செய்வதும், பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் எந்த நடவடிக்கையையும் தவிர்ப்பதும் மிக முக்கியமானது,” என ஐரோப்பிய ஆணைக்குழு தலைவர் உர்சுலா வான் டெர் லெயன் மற்றும் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அன்டோனியோ கோஸ்டா தெரிவித்துள்ளனர்.
ஈரான் தாக்குதல்களை சவுதி அரேபியா கடுமையாக கண்டனம்
ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், கத்தார், குவைத் மற்றும் ஜோர்டான் மீது ஈரான் நடத்திய தாக்குதல்களை, அந்த நாடுகளின் இறையாண்மையை மீறிய செயல் என சவுதி அரேபியா கடுமையாகக் கண்டித்துள்ளது.
ஈரான் முழுவதும் இலக்குகளைத் தாக்கும் அமெரிக்கா–இஸ்ரேல் படைகள்
ஈரான் முழுவதும் பல நகரங்கள் மற்றும் முக்கிய தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாக ஈரான் அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
தலைநகர் தெஹ்ரானில் ஏற்பட்ட வெடிப்புகளால் வானில் புகை மேகங்கள் எழுந்துள்ளன. இஸ்ஃபஹான், ஷிராஸ், தப்ரீஸ் உள்ளிட்ட முக்கிய நகரங்களிலும் வெடிப்புச் சத்தங்கள் கேட்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரான்ஸ் குடிமக்களுக்கு அவசர எச்சரிக்கை
மத்திய கிழக்கில் உள்ள தனது குடிமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும் என பிரான்ஸ் அரசு அறிவுறுத்தியுள்ளது.
“இது முழுமையான போர் நிலை. தற்போது பேச்சுவார்த்தைக்கான நேரம் அல்ல,” என பாதுகாப்புத் துறை துணை அமைச்சர் அலிஸ் ரூஃபோ தெரிவித்துள்ளார்.
ஈரான் மீது தாக்குதல்களை வரவேற்கும் இஸ்ரேல் ஜனாதிபதி
ஈரான் மீது அமெரிக்கா–இஸ்ரேல் இணைந்து மேற்கொண்ட தாக்குதல்களை இஸ்ரேல் ஜனாதிபதி இசாக் ஹெர்சோக் வரவேற்றுள்ளார்.
இந்த நடவடிக்கை “முழு மத்திய கிழக்குக்கும், உலகத்திற்கும் ஒரு வரலாற்றுச் மாற்றத்தையும் சிறந்த எதிர்காலத்தையும் கொண்டு வரும்” என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
காமெனையின் இருப்பிடம் தெரியவில்லை
ஈரானின் உயரிய தலைவர் ஆயத்துல்லா அலி காமெனை, தாக்குதலுக்கு முன்பாக சில நாட்களாக பொதுமக்கள் முன்னிலையில் தோன்றவில்லை. தாக்குதலுக்குப் பிறகும் அவர் எங்கு உள்ளார் என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை.
ஜூன் மாதத்தில் நடைபெற்ற 12 நாள் போரின்போது, அவர் தெஹ்ரானில் உள்ள தனது வளாகத்திலிருந்து பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டதாக நம்பப்படுகிறது.
ஈரானின் இரண்டாவது தாக்குதல் அலையை கட்டுப்படுத்தியதாக கத்தார்
ஈரான் மேற்கொண்ட இரண்டாவது தாக்குதல் அலையை வெற்றிகரமாக முறியடித்ததாக கத்தார் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதல்களை, கத்தார் வெளிவிவகார அமைச்சகம் தனது இறையாண்மையை “வெளிப்படையாக மீறிய செயல்” என கடுமையாகக் கண்டித்துள்ளது. ஈரானுடன் உரையாடலை வலியுறுத்தி வந்த நாடுகளில் கத்தார் முக்கியமான ஒன்றாக இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிரியா வான்வெளி மூடல்
சிரியாவின் சிவில் விமான போக்குவரத்து அதிகாரிகள், தெற்கு சிரியா வான்வெளியை சனிக்கிழமை மூடியதாக அறிவித்துள்ளனர்.
இதனையடுத்து, லூஃப்தான்சா, ஏர் பிரான்ஸ், டிரான்ஸாவியா, கத்தார் ஏர்வேஸ், பெகாசஸ் உள்ளிட்ட பல விமான நிறுவனங்கள் லெபனானுக்கான அனைத்து விமான சேவைகளையும் ரத்து செய்துள்ளன.
எமிரேட்ஸ் விமான சேவைகள் பாதிப்பு
உலகின் முக்கிய நீண்ட தூர விமான நிறுவனங்களில் ஒன்றான எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ், ஐக்கிய அரபு அமீரக வான்வெளி மூடப்பட்டதன் காரணமாக பல விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
துபாய் சர்வதேச விமான நிலையத்தை மையமாகக் கொண்ட இந்த நிறுவனம், உள்ளூர் அதிகாரிகளுடன் இணைந்து நடவடிக்கைகளை சீரமைத்து வருவதாகவும், பயணிகள் தங்களது விமான நிலையை இணையத்தில் சரிபார்க்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.
தாக்குதல்கள் தொடரும் – தகவல்
ஈரான் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல் பல மாதங்களாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து திட்டமிட்டு செயல்படுத்தப்பட்டதாகவும், வரும் சில நாட்களுக்கும் இந்த தாக்குதல்கள் தொடரக்கூடும் எனவும், இராணுவத் திட்டங்களை நன்கு அறிந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.
பெண்கள் பள்ளியில் 5 மாணவிகள் உயிரிழப்பு – ஈரான்
தெற்கு ஈரானில் உள்ள ஒரு பெண்கள் பள்ளியில் மேற்கொள்ளப்பட்ட அமெரிக்கா–இஸ்ரேல் வான்தாக்குதலில் ஐந்து மாணவிகள் உயிரிழந்ததாக ஈரான் அரசு அறிவித்துள்ளது.
ஹார்மோஸ்கான் மாகாணத்தின் மினாப் நகரில் இந்த தாக்குதல் நடைபெற்றதாக அரசு செய்தி நிறுவனம் IRNA தெரிவித்துள்ளது. அங்கு ஈரான் புரட்சிப் பாதுகாப்புப் படையின் தளம் அமைந்துள்ளது.
இஸ்ரேலில் ஒருவர் காயம்
ஈரானின் ஏவுகணை தாக்குதலால் வடக்கு இஸ்ரேலில் ஒருவர் லேசான காயம் அடைந்ததாக தேசிய மீட்பு சேவை MADA தெரிவித்துள்ளது.
20 மாடிகள் கொண்ட குடியிருப்பு கட்டிடத்தின் மேல்மாடி ஒன்று நேரடி தாக்குதலுக்கு உள்ளானதாக தீயணைப்பு மற்றும் மீட்பு சேவைகள் தெரிவித்தன.
அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக ஈரான் உறுதி
ஈரான் புரட்சிப் பாதுகாப்புப் படை, தனது பதிலடி நடவடிக்கையாக, பஹ்ரைன், கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்களைத் தாக்கியதாக உறுதிப்படுத்தியுள்ளது.
“உண்மையான வாக்குறுதி – 4” எனப் பெயரிடப்பட்ட முதல் கட்ட தாக்குதலில், பஹ்ரைனில் உள்ள அமெரிக்க 5வது கடற்படைக் கட்டளைத் தளம் உள்ளிட்ட பல இடங்கள் இலக்காக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பஹ்ரைன் கடும் கண்டனம்
அமெரிக்க 5வது கடற்படைக் கட்டளைத் தளத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலை, தமது இறையாண்மையை வெளிப்படையாக மீறிய செயல் என பஹ்ரைன் கடுமையாகக் கண்டித்துள்ளது.
கத்தார் ஏர்வேஸ் விமான சேவைகள் இடைநிறுத்தம்
கத்தார் வான்வெளி மூடப்பட்டுள்ளதால், தோஹா மையத்தில் இருந்து செயல்படும் கத்தார் ஏர்வேஸ் தற்காலிகமாக விமான சேவைகளை இடைநிறுத்தியுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஒருவர் உயிரிழப்பு
ஈரான் ஏவுகணை தாக்குதலின் சிதறலால் (shrapnel) ஐக்கிய அரபு அமீரக தலைநகரில் ஒருவர் உயிரிழந்ததாக துபாய் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பரந்த போரும், எரிசக்தி விலை உயர்வும் ஏற்படலாம் – எச்சரிக்கை
அமெரிக்கா–இஸ்ரேல் தாக்குதலுக்குப் பிறகு, இந்த மோதல் முழு மத்திய கிழக்கிலும் பரவக்கூடும் என கிரைசிஸ் குழுமத்தின் ஈரான் திட்ட இயக்குநர் அலி வைஸ் எச்சரித்துள்ளார்.
ஹோர்முஸ் நீரிணை வழியாக உலக எண்ணெய் விநியோகத்தின் ஐந்தில் ஒரு பங்கு செல்லுவதால், அங்கு இடையூறு ஏற்பட்டால் உலகளாவிய எரிசக்தி விலை கடுமையாக உயரக்கூடும் என அவர் கூறியுள்ளார்.
உலகப் பாதுகாப்புக்கு ஈரான் அச்சுறுத்தல் – ஐரோப்பிய ஒன்றியம்
மத்திய கிழக்கில் நிலவும் மோதலை “மிக ஆபத்தான நிலை” என ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிநாட்டு கொள்கைத் தலைவர் காஜா கலாஸ் வர்ணித்துள்ளார்.
ஈரானின் அணுத் திட்டம், ஏவுகணை திட்டம் மற்றும் தீவிரவாத அமைப்புகளுக்கான ஆதரவு உலகப் பாதுகாப்புக்கு கடும் அச்சுறுத்தல் என அவர் தெரிவித்துள்ளார்.
டர்கிஷ் ஏர்லைன்ஸ் விமான சேவைகள் இடைநிறுத்தம்
லெபனான், சிரியா, ஈராக், ஈரான் மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளுக்கான விமான சேவைகளை மார்ச் 2 வரை டர்கிஷ் ஏர்லைன்ஸ் இடைநிறுத்தியுள்ளது.
கத்தார், குவைத், பஹ்ரைன், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமான் ஆகிய நாடுகளுக்கான சேவைகள் பிப்ரவரி 28 வரை நிறுத்தப்பட்டுள்ளன.
அமெரிக்க 5வது கடற்படை – முக்கிய பங்கு
மத்திய கிழக்கின் எண்ணெய் போக்குவரத்து பாதைகளை பாதுகாக்கும் முக்கிய பொறுப்பை அமெரிக்க கடற்படையின் 5வது படை ஏற்றுள்ளது.
ஈராகில் ஈரான் ஆதரவு பெற்ற மிலீஷியா தலைமையகம் மீது ட்ரோன் தாக்குதல்
ஈராக் தலைநகர் பாக்தாத் தென்மேற்கில் உள்ள ஜுர்ஃப் அல்-சகர் பகுதியில், ஈரான் ஆதரவு பெற்ற கதாயிப் ஹெஸ்புல்லா மிலீஷியா தலைமையகத்தை ட்ரோன் தாக்குதல் தாக்கியதில் குறைந்தது இரண்டு பேர் உயிரிழந்து, நால்வர் காயமடைந்துள்ளனர்.
அமெரிக்கா - இஸ்ரேல் தரப்பிலிருந்து உடனடி கருத்து இல்லை
இந்த சம்பவம் தொடர்பாக அமெரிக்கா அல்லது இஸ்ரேல் தரப்பிலிருந்து உடனடியாக எந்தவொரு அதிகாரப்பூர்வ கருத்தும் வெளியிடப்படவில்லை.
சனிக்கிழமை ஈரான் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களுக்கு முன்பாக, ஈரான் தாக்குதலுக்குள்ளானால் தாமும் போரில் இணைவோம் என அந்தக் குழு எச்சரித்திருந்தது.
அமெரிக்க தளங்களை இலக்காக்குவோம் – ஈரான்
ஈராக் வெளிவிவகார அமைச்சர் ஃபுவாத் ஹுசைன், ஈரான் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்சியிடமிருந்து தொலைபேசி அழைப்பு பெற்றதாக தெரிவித்தார்.
அந்த உரையாடலில், தற்காப்பு நடவடிக்கையாக பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்களை இலக்காகக் கொண்டு தாக்குதல் நடத்துவோம் என அராக்சி கூறியதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“இந்த தாக்குதல்கள் சம்பந்தப்பட்ட நாடுகளை இலக்காக்கவில்லை; இராணுவத் தளங்களையே மட்டும் குறிவைத்துள்ளன,” எனவும், பதற்றம் குறைக்கப்பட வேண்டும் என ஹுசைன் வலியுறுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெஹ்ரானில் வெடிப்பு – புகை மேகங்கள்
ஈரான் தலைநகர் தெஹ்ரானில் சனிக்கிழமை ஏற்பட்ட வெடிப்புக்குப் பிறகு, நகர வானில் புகை மேகங்கள் எழுந்ததை காண முடிந்தது.
ஈரான் ஏவுகணை திட்டம் தீவிரமடைந்துள்ளது – இஸ்ரேல்
ஊடகவியலாளர்களுடன் நடைபெற்ற விளக்க கூட்டத்தில், இஸ்ரேல் பாதுகாப்புப் படை (IDF) அதிகாரி ஒருவர், ஈரானின் ஏவுகணை தயாரிப்பு திட்டத்தில் “கடுமையான வேகமடைதல்” காணப்படுவதாக தெரிவித்தார்.
மாதந்தோறும் பல டஜன் பாலிஸ்டிக் ஏவுகணைகள் தயாரிக்க ஈரான் தொடங்கியுள்ளதாகவும், இஸ்ரேலில் இதுவரை குறிப்பிடத்தக்க சேதம் ஏற்படவில்லை எனவும் அவர் கூறினார்.
தாக்குதல்களுக்கு ஈரான் பதிலடி – உறுதி
ஈரான் உயர் தேசிய பாதுகாப்பு கவுன்சில், “இந்த பகைமைச் செயல்களுக்கு தீர்மானமான பதிலடி நடவடிக்கை” ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளது.
இலக்காகக் கொள்ளப்பட்ட பகுதிகளில் இல்லாத இடங்களுக்கு மக்கள் பயணம் செய்யுமாறும், அத்தியாவசியப் பொருட்களின் விநியோகத்தை உறுதி செய்ய முன்கூட்டியே ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டுள்ள போதிலும், வங்கிகள் வழக்கம்போல் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் தாக்குதல்களைப் பற்றி முன்கூட்டியே அறிவிக்கப்பட்டது – ஜெர்மனி
ஈரான் மீது இஸ்ரேல் மேற்கொண்ட இராணுவத் தாக்குதல்கள் குறித்து முன்கூட்டியே தங்களுக்கு தகவல் வழங்கப்பட்டதாக ஜெர்மன் அரசு சனிக்கிழமை தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய கூட்டாளிகளுடன் நெருங்கிய ஆலோசனைகள் நடைபெற்று வருவதாகவும், நெருக்கடி மேலாண்மை குழு மதியம் கூடி நிலைமையை ஆய்வு செய்யவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
ஈரான்–ஈராக் மிலீஷியா கூட்டுத் திட்டம் – தகவல்
ஈராகில் செயல்படும் ஈரான் ஆதரவு பெற்ற இரண்டு மிலீஷியா அமைப்புகளின் அதிகாரிகள், ஈரான் தாக்குதலுக்குள்ளானால் எவ்வாறு பதிலளிப்பது என்பது குறித்து இரண்டு மாதங்களுக்கு முன்பு கூட்டம் நடைபெற்றதாக தெரிவித்துள்ளனர்.
இந்த திட்டத்தின் கீழ், ஈராகின் வடக்கு குர்திஷ் தன்னாட்சி பிரதேசத்திலும், அண்டை நாடான ஜோர்டானிலும் உள்ள அமெரிக்க படைகளின் நலன்களை இலக்காக்க தீர்மானிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
சேதமடைந்த கட்டிடப் படங்கள் வெளியீடு – இஸ்ரேல் ஊடகம்
வடக்கு இஸ்ரேலில் உள்ள குடியிருப்பு கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட சேதத்தின் படங்களை இஸ்ரேல் ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. இது தடுப்பு ஏவுகணை சிதறலால் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இராணுவத் தளங்களுக்கு அருகிலுள்ள ஈரானியர்களை வெளியேறுமாறு இஸ்ரேல் எச்சரிக்கை
ஈரானில் ஆயுத உற்பத்தி நிலையங்கள் மற்றும் இராணுவத் தளங்களுக்கு அருகிலுள்ள பகுதிகளை உடனடியாக காலி செய்யுமாறு இஸ்ரேல் இராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.