ஈரான் உயர் தலைவர் அயதுல்லா அலி கமேனி பலி: ஈரான் உறுதி; நாடளாவிய ரீதியில் துக்க பிரகடனம்!

ஈரான் உயர் தலைவர் அயதுல்லா அலி கமேனி பலி: ஈரான் உறுதி; நாடளாவிய ரீதியில் துக்க பிரகடனம்!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து ஈரான் மீது முன்னெடுத்த அதிரடி வான்வழித் தாக்குதலில், ஈரானின் உயர் தலைவர்

அயதுல்லா அலி காமனேய் உயிரிழந்துவிட்டதை ஈரானிய அரச ஊடகங்கள் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளன.

தலைநகர் தெஹ்ரானில் உள்ள அவரது அலுவலகக் கட்டடத்தின் மீது நடத்தப்பட்ட துல்லியமான தாக்குதலில் அவர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மரணச் செய்தியை ஈரானிய அரச தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளர் மிகுந்த துயரத்துடன் வாசித்தார்.

அவர் தனது அறிவிப்பில், "ஈரானின் மகா தேசத்தின் தலைவர், இஸ்லாமிய உம்மத்தின் வழிகாட்டி, உயர் மேன்மை கொண்ட இமாம் காமனேய் அவர்கள் 'ஷஹாதத்' (தியாக மரணம்) அடைந்து, சொர்க்கத்தை அடைந்துவிட்டார்" எனத் தெரிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் துக்க பிரகடனம்:

இந்தத் துயரச் சம்பவத்தைத் தொடர்ந்து, ஈரானில் 40 நாட்கள் பொது துக்க காலமாகவும், நாடு தழுவிய ரீதியில் 7 நாட்கள் பொது விடுமுறையாகவும் அரசாங்கம் அறிவித்துள்ளது.

தாக்குதலின் பின்னணி:

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், காமனேயின் மரணத்தை முதன்முதலில் அறிவித்த சில மணித்தியாலங்களுக்குப் பின்னரே ஈரானிய ஊடகங்கள் இதனை உறுதிப்படுத்தின. இந்தத் தாக்குதல் நடவடிக்கை, ஈரான் தனது அணு ஆயுத மற்றும் ஏவுகணைத் திட்டங்களைக் கைவிட வேண்டும் என்ற நோக்கத்துடன் முன்னெடுக்கப்பட்டதாக அமெரிக்கத் தரப்பு தெரிவித்துள்ளது.

இந்தத் தாக்குதலில் காமனேயுடன் அவரது குடும்ப உறுப்பினர்கள் சிலரும், ஈரான் நாட்டின் உயர்மட்ட பாதுகாப்புத் தலைவர்களும் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகர காவலர் படை (IRGC), இந்தத் தாக்குதலுக்குப் பதிலடியாக, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராகப் பாரியதொரு ஆக்கிரமிப்புத் தாக்குதலை முன்னெடுக்கப்போவதாக எச்சரித்துள்ளது.

இந்தச் சம்பவம் மத்திய கிழக்கில் பெரும் அரசியல் மற்றும் இராணுவ நெருக்கடியை உருவாக்கியுள்ளதுடன், ஈரானின் எதிர்காலத் தலைமைத்துவம் குறித்த கேள்விகளையும் எழுப்பியுள்ளது.

 

ஈரான் உயர் தலைவர் உயிரிழப்பு: நாட்டின் போக்கை மாற்றும் ஒரு திருப்புமுனை - ரெசா பஹ்லவி!

தெஹ்ரான்: ஈரானின் உயர் தலைவரான அயதுல்லா அலி காமனேயின் உயிரிழப்பைத் தொடர்ந்து, ஈரானின் முன்னாள் ஷாவின் (மன்னர்) புதல்வரான ரெசா பஹ்லவி விசேட அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். இந்த மரணம் ஈரானின் வரலாற்றில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வாஷிங்டன் போஸ்ட் ஊடகத்திற்காக அவர் எழுதிய கட்டுரையில், ஈரானிய மக்களுக்கு "உங்கள் சுதந்திரத்திற்கான நேரம் நெருங்கிவிட்டது" என அறிவித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு நன்றி தெரிவித்துள்ளார்.

அத்தோடு, கடந்த அரை நூற்றாண்டாக ஈரானின் இஸ்லாமிய குடியரசு அண்டை நாடுகளின் இறைமையைப் பாதிப்பது, உலகளாவிய மோதல்களைத் தூண்டுவது மற்றும் அணு ஆயுதங்களைத் தயாரிப்பதிலேயே குறியாக இருந்தது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறிப்பாக, கடந்த ஜனவரி மாதம் போராட்டக்காரர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட அடக்குமுறைகளின் போது ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டமை இந்த ஆட்சியின் "மிகக் கொடூரமான குற்றங்களில் ஒன்று" எனவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

நாட்டின் எதிர்காலம் குறித்த பஹ்லவியின் கருத்து:

ஈரானின் எதிர்காலப் பாதையானது, பொதுவாக்கெடுப்பு மூலம் அங்கீகரிக்கப்பட்ட புதிய அரசியலமைப்பைக் கொண்டிருக்க வேண்டும் எனவும், அதனைத் தொடர்ந்து சர்வதேச மேற்பார்வையின் கீழ் சுதந்திரமான தேர்தல்கள் நடைபெற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

"வரலாறு எப்போதுமே தனது திருப்புமுனைகளை முன்கூட்டியே அறிவிப்பதில்லை. ஆனால், துணிச்சல், தலைமைத்துவம் மற்றும் ஒற்றுமை ஆகியவை ஒரு தேசத்தின் போக்கை மாற்றக்கூடிய தருணங்கள் எழவே செய்கின்றன" என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஈரானின் தற்போதைய நிலை: தாக்குதல்கள் தீவிரம்

கடந்த 24 மணித்தியாலங்களாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது அதிரடித் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றன. தெஹ்ரான் நகரம் அதிகளவில் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ள நிலையில், இராணுவ தளங்கள் மற்றும் புலனாய்வுத் தலைமையகங்களும் இலக்கு வைக்கப்பட்டுள்ளன.

இதற்குப் பதிலடியாக, இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை முன்னெடுத்துள்ளது.

ஈரானின் மூத்த தளபதிகள் பலி: ஈரான் ஊடகங்கள் உறுதி

ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவலர் படையின் (IRGC) தலைமைத் தளபதி மொஹமட் பக்பூர் மற்றும் பாதுகாப்பு சபையின் செயலாளர் அலி ஷம்கானி ஆகியோர் அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டதை ஈரானின் உத்தியோகபூர்வ செய்தி நிறுவனமான IRNA உறுதிப்படுத்தியுள்ளது.

இதற்கு முன்னதாக, ஏழு முக்கிய பாதுகாப்புத் தலைவர்கள் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் அறிவித்திருந்தன. மொஹமட் பக்பூர், 2025 ஜூன் மாதம் இடம்பெற்ற 12 நாள் ஈரான்-இஸ்ரேல் போரின் போது கொல்லப்பட்ட தனது முன்னோடிக்குப் பிறகு பதவியேற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல், உயர் தலைவரின் ஆலோசகராக இருந்த அலி ஷம்கானியும் குறித்த போரின் போதே காயமடைந்திருந்தார். இவர்கள் இருவர் மீதும் அமெரிக்க திறைசேரி திணைக்களம் ஏற்கனவே தடைகளை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Radio Logo
Puthiya Kural Radio
Voice of Tamil People – Toronto, Canada
வானொலி