ஈரான் - இஸ்ரேல் மோதல்: பல தசாப்தங்களுக்குப் பின் உலக எரிபொருள் சந்தையில் பாரிய நெருக்கடி!

ஈரான் - இஸ்ரேல் மோதல்: பல தசாப்தங்களுக்குப் பின் உலக எரிபொருள் சந்தையில் பாரிய நெருக்கடி!

சர்வதேச செய்திகள்: ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து முன்னெடுத்துள்ள அதிரடித் தாக்குதல்கள் மற்றும் அதற்குப் பதிலடியாக ஈரான் வளைகுடா பிராந்தியத்தில் ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தியுள்ளமை, உலகளாவிய எரிசக்தி சந்தையை பல தசாப்தங்களுக்குப் பிறகு மிகப்பெரிய நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது.

உலகின் முக்கியமான எரிசக்தி உற்பத்திப் பிராந்தியமாக விளங்கும் மத்திய கிழக்கிலிருந்து கச்சா எண்ணெய் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள இந்தத் தடை, உலகளாவிய பொருளாதாரத்தில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.

உலக எண்ணெய் விநியோகத்தில் 20 சதவீத பங்களிப்பை வழங்கும் இப்பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றமும், நிச்சயமற்ற தன்மையும் எரிசக்தி விநியோகத்தை கடுமையாகப் பாதித்துள்ளன.

எண்ணெய் விலை உயர்வு குறித்த அச்சம்:

திங்கட்கிழமை காலை பங்குச் சந்தை வர்த்தகம் தொடங்கும் போது, கச்சா எண்ணெய் விலையில் பாரிய அதிகரிப்பு ஏற்படக்கூடும் என சந்தை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

ஏற்கனவே மத்திய கிழக்கில் நிலவிய போர் பதற்றம் காரணமாக, பிரெண்ட் (Brent) கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 70 டொலர்களாக அதிகரித்திருந்த நிலையில், தற்போது இந்த விலை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தாக்குதல்களின் தாக்கம்:

ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் குவைத் ஆகிய முக்கிய எண்ணெய் ஏற்றுமதி நாடுகளில் சில வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. உலகின் இரண்டாவது மிகப்பெரிய திரவ இயற்கை எரிவாயு (LNG) ஏற்றுமதியாளரான கட்டார், தனது வான்பரப்பை நோக்கி ஏவப்பட்ட ஏவுகணைகளை இடைமறித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

ஈரானின் காக் தீவில் (Kharg Island) வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈரானின் கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் 90 சதவீதம் இந்த முனையத்தின் ஊடாகவே நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

ஹோர்முஸ் நீரிணை நிலைமை:

ஈரானுக்கும் ஓமானுக்கும் இடைப்பட்ட மிக முக்கியமான கடல் மார்க்கமான 'ஹோர்முஸ் நீரிணையில்' (Strait of Hormuz) இதுவரை நேரடித் தடைகள் எதுவும் ஏற்படவில்லை.

இருப்பினும், இப்பிராந்தியத்தில் எண்ணெய் கப்பல்களை இயக்குவது பெரும் ஆபத்தானதாக மாறியுள்ளதால், பல முன்னணி எண்ணெய் நிறுவனங்களும் வர்த்தக நிறுவனங்களும் இப்பகுதியூடான தமது போக்குவரத்தைத் தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளன.

கப்பல் போக்குவரத்திற்கான காப்பீட்டு மற்றும் கட்டணங்கள் (Freight rates) ஏற்கனவே மும்மடங்கு அதிகரித்துள்ளன.

உலகளாவிய விநியோகக் கட்டமைப்பு:

தற்போது அமெரிக்கா, பிரேசில் மற்றும் கனடா போன்ற நாடுகளின் உற்பத்தி அதிகரித்துள்ளமையால், உலகளாவிய எண்ணெய் சந்தையில் போதிய கையிருப்பு உள்ளது.

உலகின் முன்னணி எண்ணெய் ஏற்றுமதி நாடான சவூதி அரேபியா, பெப்ரவரி மாதத்தில் தனது ஏற்றுமதியை நாளொன்றுக்கு 7 மில்லியன் பீப்பாய்களாக அதிகரித்துள்ளது.

மேலும், ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள ஒபெக் பிளஸ் (OPEC+) கூட்டத்தில் உற்பத்தி அதிகரிப்பு குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

எவ்வாறாயினும், ஈரான் தனது தலைமைத்துவத்திற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு, பிராந்தியத்திலுள்ள எண்ணெய் வயல்கள், ஏற்றுமதி முனையங்கள் மற்றும் சுத்திகரிப்பு நிலையங்களை இலக்கு வைத்து பதிலடி கொடுத்தால், உலக எரிசக்தி சந்தை இதுவரை கண்டிராத மிகப்பெரிய வீழ்ச்சியைச் சந்திக்கும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

Radio Logo
Puthiya Kural Radio
Voice of Tamil People – Toronto, Canada
வானொலி