இஸ்ரேல் - ஈரான் மோதல்கள்; OPEC+ அமைப்பின் எண்ணெய் விலை தொடர்பில் அவசரத் தீர்மானம்!

இஸ்ரேல் - ஈரான் மோதல்கள்; OPEC+ அமைப்பின் எண்ணெய் விலை தொடர்பில் அவசரத் தீர்மானம்!

அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய படைகள் ஈரான் மீது மேற்கொண்ட தாக்குதல்கள் மற்றும் அதற்கு ஈரான் அளித்த பதில் தாக்குதல்கள் காரணமாக, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் எண்ணெய் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையை தணிப்பதற்காக, OPEC+ அமைப்பு இன்று (01) தனது எண்ணெய் உற்பத்தியை எதிர்பார்த்ததைவிட அதிக அளவில் உயர்த்துவது குறித்து பரிசீலித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி, ஆரம்பத்தில் நாளொன்றுக்கு 137,000 பீப்பாய் அளவிற்கு உற்பத்தியை அதிகரிக்க திட்டமிடப்பட்டிருந்த போதிலும், தற்போதைய அவசர நிலையை கருத்தில் கொண்டு, அதை நாளொன்றுக்கு 411,000 பீப்பாய்களாக அல்லது அதற்கும் அதிகமாக உயர்த்துவது குறித்து இன்று நடைபெறும் கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

உலகளாவிய எண்ணெய் போக்குவரத்தின் 20 சதவீதத்துக்கும் மேற்பட்ட பகுதி நடைபெறும், மூலோபாய ரீதியாக மிக முக்கியமான ஹோர்மூஸ் கடல்சந்தி (Strait of Hormuz) வழியாக கடல் போக்குவரத்தை நிறுத்துமாறு ஈரான் விடுத்த அறிவுறுத்தலைத் தொடர்ந்து, நேற்று (28) முதல் எண்ணெய் மற்றும் எரிவாயு கப்பல் போக்குவரத்து தடைபட்டுள்ளது.

மத்திய கிழக்கில் மோதல்கள் தீவிரமடைந்ததன் பின்னணியில், கடந்த வெள்ளிக்கிழமைக்குள் மூல எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 73 அமெரிக்க டொலர்களாக உயர்ந்தது. இது ஜூலை மாதத்திற்குப் பின்னர் பதிவான அதிகபட்ச விலை என தெரிவிக்கப்படுகிறது.

நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படாவிட்டால், எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 100 அமெரிக்க டொலர்களைத் தாண்டக்கூடும் என முன்னணி வர்த்தக நிறுவனங்களின் ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

ஈரான் மீது நடைபெறும் தாக்குதல்களால் உருவாகக்கூடிய விநியோக பற்றாக்குறையை ஈடு செய்ய, சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் தங்களது உற்பத்தி திறனை ஏற்கனவே உயர்த்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இன்று நடைபெறும் இந்த கூட்டத்தில் சவூதி அரேபியா, ரஷ்யா, ஐக்கிய அரபு அமீரகம், கசகஸ்தான், குவைத், ஈராக், அல்ஜீரியா மற்றும் ஓமான் ஆகிய எட்டு நாடுகள் பங்கேற்கின்றன.

எனினும், சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் தவிர்ந்த பிற நாடுகளுக்கு உற்பத்தியை மேலும் உயர்த்தும் மேலதிக திறன் இல்லாதது, சந்தைக்கு முக்கிய சவாலாக அமைந்துள்ளது.

அவ்வாறிருந்தபோதிலும், தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் கூட OPEC+ அமைப்பு எண்ணெய் உற்பத்தியை அதிகரித்தால், விலை உயர்வை கட்டுப்படுத்தக்கூடிய வாய்ப்பு உள்ளதாக பொருளாதார வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Radio Logo
Puthiya Kural Radio
Voice of Tamil People – Toronto, Canada
வானொலி