ஈரானின் உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி காமெனீ, டொனால்ட் டிரம்ப் ஆதரித்த இராணுவ நடவடிக்கையில் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் முதல் சீன அதிபர் ஷி ஜின்பிங் வரை உலகின் பல அதிநாயக ஆட்சியாளர்கள் இனி முன்பைப் போல அமைதியாக உறங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஆனால், சர்வதேச ஒப்புதலோ, அமெரிக்க காங்கிரஸின் அனுமதியோ பெறாமல் ஈரானுக்கு எதிராக அமெரிக்கா நேரடியாகப் போரைத் தொடங்கியிருப்பது, வெளிநாட்டு கொள்கை இலக்குகளை அடைவதற்காக தனிப்பட்ட முறையில் இராணுவ சக்தியைப் பயன்படுத்தும் ஒரு ஆபத்தான முன்னுதாரணத்தை உருவாக்கியுள்ளது. இது உலகையே மேலும் பாதுகாப்பற்றதாக மாற்றக்கூடும் என்ற கவலை எழுந்துள்ளது.
ஈரான் – தற்போதைய நிலவரம்:
உச்ச தலைவர் ஆயத்துல்லா காமெனீ உயிரிழந்துள்ளார்
அமெரிக்காவின் மேற்கு கூட்டாளிகளுள் ஒன்றான இங்கிலாந்து உட்பட எந்த நாடும், 86 வயதான அலி காமெனீயின் மரணத்திற்கு இரங்கல் தெரிவிக்கப்போவதில்லை. கடந்த சனிக்கிழமை, தெஹ்ரானில் உள்ள அவரது வளாகத்தின் மீது இஸ்ரேல் மேற்கொண்ட விமானத் தாக்குதலில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களின் ஆரம்ப கட்டத்தில் அவர் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், இந்த நடவடிக்கை – வெனிசுவேலாவின் ஆட்சியாளர் மீது இரண்டு மாதங்களுக்கு முன் அமெரிக்க படைகள் நடத்திய அதிரடி தாக்குதலுக்குப் பிறகு – எந்த ஒரு நாடும் தன் பிரச்சினைகளைத் தீர்க்க மற்றொரு சுயாதீன நாட்டின் மீது குண்டு வீசுவது ஏற்றுக்கொள்ளத்தக்கது என்ற எண்ணத்தை மேலும் ஊக்குவிக்கக்கூடும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
“நாம் தற்போது பெரும் சக்தி அரசியலின் காலகட்டத்தில் வாழ்கிறோம். இது எப்படி இருக்கும் என்பதற்கான தெளிவான உதாரணம் இதுதான்,” என ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் Changing Character of War Centre இயக்குநர் ராப் ஜான்சன் தெரிவித்தார்.
டிரம்ப் எடுத்துள்ள ஈரான் குறித்த இந்த ஆபத்தான முடிவின் விளைவுகள் இன்னும் முழுமையாக வெளிப்படவில்லை. ஆனால், மூன்று விடயங்கள் தற்போது தெளிவாக உள்ளன.
மேற்கத்திய நாடுகளின் விமர்சனங்களுக்கு இடையூறு
முதலாவதாக, இந்த இராணுவ தலையீடு – குறிப்பாக இங்கிலாந்து மற்றும் நட்டோ கூட்டாளிகள் இதனை கடுமையாக கண்டிக்க வாய்ப்பில்லை என்பதால் – மேற்கத்திய நாடுகள் எதிர்காலத்தில் இதுபோன்ற தாக்குதல்களை விமர்சிப்பதை மேலும் கடினமாக்கும்.
உதாரணமாக, உக்ரைன் மீது ரஷ்யா மேற்கொண்ட முழுமையான படையெடுப்பை கண்டித்து பிரித்தானிய பிரதமர் சர் கியர் ஸ்டார்மர், பிரான்ஸ் அதிபர் எமனுவேல் மக்ரோன் மற்றும் ஜெர்மன் தலைமை அமைச்சர் ஃபிரிட்ரிக் மெர்ஸ் ஆகியோர் வெளியிட்ட கடும் விமர்சனங்களை, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் “இரட்டை நிலைப்பாடு” என எளிதில் புறக்கணிக்கக்கூடிய சூழல் உருவாகியுள்ளது.
அதேபோல், சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் மத்திய கிழக்கில் நிகழும் இந்த சம்பவங்களை கூர்ந்து கவனித்து, தைவானை பலத்தால் கைப்பற்றுவதற்கு இனி தன்னிடம் அதிக சுதந்திரம் இருப்பதாக முடிவெடுக்கக்கூடும்.
இராணுவ சக்தியின் அவசியம் மீண்டும் உறுதி
இரண்டாவதாக, உலகத் தலைவர்கள் அனைவரும், தங்கள் ஆட்சியை பாதுகாப்பதற்காக வலுவான இராணுவ சக்தி அவசியம் என்பதை மேலும் தெளிவாக புரிந்துகொண்டுள்ளனர்.
இது குறிப்பாக, உலகின் மிக வலுவான ஆயுதப்படைகளை கொண்ட அமெரிக்காவை எதிர்க்க விரும்பும் நாடுகளுக்கு மிக முக்கியமான செய்தியாகும்.
உலகளாவிய இராணுவப் போட்டி அதிகரிக்கும் அபாயம்
இந்த நடவடிக்கை, உலகின் சக்திவாய்ந்த நாடுகள் மேலும் இராணுவமயமாகும் நிலையை உருவாக்கக்கூடும். அதேவேளை, சிறிய மற்றும் நடுத்தர சக்தி நாடுகள் ஒன்றிணைந்து நெருக்கமான கூட்டணிகளை உருவாக்க வேண்டிய கட்டாய நிலைக்கும் தள்ளப்படலாம்.
இந்த நிலைப்பாடு, கடந்த மாதம் மியூனிக் நகரில் நடைபெற்ற முக்கிய பாதுகாப்பு மாநாட்டில் ஜெர்மன் தலைமை அமைச்சர் ஃபிரிட்ரிக் மெர்ஸ் முன்வைத்த கருத்துகளுடன் ஒத்ததாகும்.
இறுதியாக, மேலும் மிக ஆழமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியதாக கருதப்படுவது, இரண்டாம் உலகப் போரின் சாம்பலிலிருந்து உருவான மற்றும் அனைத்து நாடுகளின் இறையாண்மையையும், அனைத்து மக்களின் மரியாதையையும் பாதுகாக்க ஐக்கிய நாடுகள் சபை (UN) மூலம் பேணப்பட்டு வந்த சர்வதேச விதிமுறைகள் இன்று தெளிவாக சிதைவடைந்து வருவதுதான்.
ஐ.நா.வுக்கு போட்டியாக தன்னிச்சையாக “அமைதி வாரியம்” (Board of Peace) என்ற அமைப்பை டிரம்ப் உருவாக்கியுள்ள நிலையில், பல தசாப்தங்களாக நிலவி வந்த பழைய உலக ஒழுங்கு (Old World Order) இதற்கு முன் இல்லாத அளவுக்கு கடும் சவாலுக்கு உள்ளாகியுள்ளது.
ஈரானில் அடுத்து என்ன?
ஈரானில் அடுத்ததாக என்ன நடக்கும் என்பதை கணிக்குவது மிகவும் கடினமானதாக உள்ளது.
தங்களின் உச்ச தலைவரை இழந்துள்ளதால், ஈரான் அரசு பெரும் அதிர்ச்சியில் உள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு கடும் பழிவாங்கல் தாக்குதலை மேற்கொள்வதாக ஈரான் உறுதியளித்துள்ளது.
ஆனால், இஸ்ரேல் மற்றும் அமெரிக்க படைகள் தங்கியுள்ள வளைகுடா நாடுகளின் மீது ஈரான் ஏவிய ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் தாக்குதல்கள், எதிர்பார்த்த அளவுக்கு தீவிரமாக இல்லை என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
துணிச்சலான, எளிய அறிவிப்புகளை விரும்பும் டிரம்ப், காமெனீ கொல்லப்பட்டதன் மூலம் இந்த இராணுவ நடவடிக்கை வெற்றிகரமாக முடிந்ததாக ஏற்கனவே விளம்பரப்படுத்தி வருகிறார்.