ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) அதிபர் ஷேக் முகம்மது பின் சாயித் அல் நஹ்யான் உடன் தொலைபேசி உரையாடல் நடத்தியதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
UAE மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை கடுமையாகக் கண்டிப்பதாகவும், இத்தாக்குதல்களில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“இந்த கடினமான நேரத்தில் UAE-க்கு இந்தியா முழுமையான ஒற்றுமையுடன் நிற்கிறது. பிராந்திய அமைதி, பாதுகாப்பு, நிலைத்தன்மை மற்றும் பதற்றத் தணிப்பை இந்தியா ஆதரிக்கிறது” என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
இரு நாட்களுக்கு UAE பங்குச் சந்தைகள் மூடல்
ஈரானின் ஏவுகணை தாக்குதல்களின் தாக்கம் காரணமாக UAE பங்குச் சந்தைகள் திங்கள் (02) மற்றும் செவ்வாய் (03) ஆகிய இரு நாட்களும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
UAE மூலதன சந்தை ஆணையத்தின் அறிவிப்பின் படி, அபூதாபி பங்குச் சந்தை மற்றும் டுபாய் நிதிச் சந்தை ஆகியவை இந்த இரண்டு நாட்களும் இயங்காது.
“பிராந்திய நிலவரங்களை தொடர்ச்சியாக கண்காணித்து, தேவையான மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என அந்த ஆணையம் தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கில் மிகப்பெரிய பங்குச் சந்தைகளில் முதல் ஐந்து இடங்களில் இடம்பெறும் இந்த இரண்டு சந்தைகளும், பிராந்தியத்தின் மிக உயர்ந்த மதிப்புடைய நிறுவனங்களின் பங்குகளை கொண்டுள்ளன.
ஞாயிற்றுக்கிழமை திறந்திருந்த வளைகுடா நாடுகளின் சந்தைகளில் கடும் சரிவுகள் பதிவானது.
சவுதி அரேபியாவின் முக்கிய குறியீடு 4%க்கு மேல் வீழ்ச்சி,
ஓமான் 3% சரிவு,
எகிப்து 5.44% வீழ்ச்சி ஆகியவை பதிவாகின.
குவைத் பங்குச் சந்தை முழுமையாக வர்த்தகத்தை இடைநிறுத்தியது.
ஈரானிலுள்ள UAE தூதரகம் மூடல் – தூதர் மீள அழைப்பு
ஈரான் மேற்கொண்ட தாக்குதல்களுக்கு பதிலடியாக, ஈரானிலுள்ள தமது தூதரகத்தை மூடுவதோடு, அங்குள்ள தூதரை உடனடியாக திரும்ப அழைக்கவும் UAE தீர்மானித்துள்ளது.
UAE வெளிவிவகார அமைச்சின் மூலோபாய தொடர்பாடல் இயக்குநர் அஃப்ரா அல் ஹமெலி சமூக ஊடகங்களில் வெளியிட்ட அறிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“ஈரான் மேற்கொண்ட வெளிப்படையான ஏவுகணை தாக்குதல்கள், குடியிருப்பு பகுதிகள், விமான நிலையங்கள், துறைமுகங்கள் மற்றும் சேவை மையங்களை குறிவைத்த தாக்குதல்களாகும். இது பாதுகாப்பற்ற பொதுமக்களின் உயிருக்கு கடும் ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது” என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல்களை கடுமையாகக் கண்டிப்பதாகவும், இது அக்ரமிப்பு நடவடிக்கையாகும் எனவும் UAE தெரிவித்துள்ளது.