சைப்ரஸில் உள்ள பிரிட்டனின் RAF அக்ரோதிரி விமானத் தளம் ஷாஹெட் ட்ரோனால் தாக்கப்பட்டதாக தகவல்
இராணுவ நடவடிக்கைகளில் தங்களுக்கு எவ்வித ஈடுபாடும் இல்லை என சைப்ரஸ் அரசு
வரையறுக்கப்பட்ட அளவிலான பொருட்சேதம்; உயிரிழப்புகள் இல்லை
அவசியமற்ற பணியாளர்கள் தளத்திலிருந்து வெளியேற்றம்
சைப்ரஸில் அமைந்துள்ள பிரிட்டனின் ராயல் ஏர் ஃபோர்ஸ் (RAF) அக்ரோதிரி விமானத் தளத்தை இலக்காகக் கொண்டு நள்ளிரவில் சந்தேகத்திற்கிடமான ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும், இதனால் குறைந்த அளவிலான சேதமே ஏற்பட்டுள்ளதுடன் எந்த உயிரிழப்புகளும் பதிவாகவில்லை என்றும் சைப்ரஸ் ஜனாதிபதி மற்றும் பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சு திங்கள்கிழமை தெரிவித்துள்ளன.
1986 ஆம் ஆண்டு லிபிய ஆயுதக்குழுவினர் மேற்கொண்ட ராக்கெட் தாக்குதலுக்குப் பின்னர், இந்த பிரிட்டன் இராணுவத் தளம் மீது நடத்தப்பட்ட முதல் தாக்குதல் இதுவாகும். இது தற்போதைய மத்திய கிழக்கு மோதலில் குறிப்பிடத்தக்க அளவிலான தீவிரமாதலைக் காட்டுவதாகவும் ராய்டர்ஸ் செய்தி சேவை குறிப்பிட்டுள்ளது.
இந்த தாக்குதல் ஈரான் தயாரித்ததாகக் கூறப்படும் “ஷாஹெட்” வகை ட்ரோன் மூலம் நடத்தப்பட்டிருக்கலாம் என சைப்ரஸ் ஜனாதிபதி நிகோஸ் கிறிஸ்தொடுலிடிஸ் தெரிவித்துள்ளார்.
“குடியரசின் அனைத்து தகுதி வாய்ந்த சேவைகளும் உச்ச எச்சரிக்கை நிலையில் செயல்பட்டு வருகின்றன. முழுமையான செயல்திறன் தயார் நிலையில் உள்ளன,” என அவர் உரையாற்றியுள்ளார்.
இதனிடையே, தங்களுக்கு எந்தவித இராணுவ நடவடிக்கைகளிலும் தொடர்பில்லை என்றும், சைப்ரஸ் தனது நிலப்பரப்பை தாக்குதல்களுக்குப் பயன்படுத்த அனுமதிக்கவில்லை என்றும் அந்த நாட்டு அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
தாக்குதலின் பின்னர் பாதுகாப்பு காரணங்களுக்காக அவசியமற்ற பணியாளர்கள் விமானத் தளத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாகவும், பாதுகாப்பு ஏற்பாடுகள் மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் மத்திய கிழக்கு மோதல் தற்போது ஐரோப்பியப் பிராந்தியங்களுக்கும் பரவி வரும் அபாயகரமான நிலையை வெளிப்படுத்துவதாக சர்வதேச அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.