தமிழக ரேஷன் கடைகளில் விரைவில் மாற்றம் ஏற்பட உள்ளதாக தெரிகிறது. ரேஷன் அட்டைதாரர்களின் வசதிகளுக்காகவே, தமிழக அரசு, புதிய நடைமுறையை விரைவில் கொண்டுவரப்போவதாக தகவல் வெளியாகி வருகிறது.
ரேஷன் கடைகளில், பொதுமக்களின் நன்மைக்காகவும், வாழ்வாதாரத்துக்காகவும் மலிவு விலையில் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.. அதேசமயம், ரேஷன்தாரர்களுக்கு குறைவின்றி பொருட்கள் கிடைக்க வேண்டும் என்பதற்காகவும், முறைகேடுகளை தடுப்பதற்காகவும் பல்வேறு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
குறிப்பாக, ரேஷன் பொருட்கள் வழங்கப்படும்போது எடை குறைவாக இருப்பதால், பொது விநியோகத்திட்ட பொருட்களை பாக்கெட்டில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.. முதல்கட்டமாக, சேலம் மாவட்டத்திலும் இது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல, ரேஷன் கடைகளில் கருவிழி பதிவு திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.. ரேஷன் கடைகளில் கண் கருவிழி பதிவு மேற்கொள்ளும் வகையில், முழு நேர ரேஷன் கடைகளுக்கு இயந்திரங்கள் மாற்றி வழங்கப்பட்டுள்ளது.
கண் கருவிழி பதிவு: இப்போது கண் கருவிழி பதிவு இயந்திரம் வாயிலாக, ரேஷன் பொருட்களும் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. விரல் ரேகை மின்னணு பதிவேட்டுக்கு பதிலாக கருவிழி பதிவு மூலம் ரேஷன் பொருட்களை வழங்கப்படுவதால், ரேஷன் விநியோகத்தில் குறைபாடுகளும் களையப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், அடுத்த அதிரடி மேற்கொள்ளப்பட்டுள்ளது.. ரேசன் கடைகளுடன் இணைந்து வங்கி சேவைகளையும் சாதாரண மக்களுக்கு வழங்கும் வகையில் புதியத் திட்டம் ஒன்றை தமிழகத்தில் நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது..
அதாவது, அரசு வழங்கும் ஓய்வூதியங்கள், பொங்கல் பரிசு போன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகள் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக செலுத்தப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது.. அந்தவகையில், பயனாளிகளும் தங்கள் கணக்கில் இருக்கும் பணத்தை டெபிட் கார்டுகள் மூலம் ஏடிஎம்-களிலிருந்து எடுத்துக்கொள்ளலாம்.ஆனால் எத்தனையோ கிராமங்களில், மலைப் பகுதிகளில் ஏடிஎம்கள் வசதிகள் இல்லை. கிராம மக்கள் அனைவருக்குமே வங்கி கணக்குகளும் இருப்பதில்லை.. அதனால், வங்கி சேவைகளை முழுமையாக பெற முடியவில்லை.
அதனால்தான், எளிதில் வங்கி ஏடிஎம்களை அணுக முடியாத கிராமப்புற மக்களுக்கு உதவுவதற்காகவே, ரேசன் கடைகளை டிஜிட்டல் முறையில் பணப்பட்டுவாடா செய்யும் மைக்ரோ ஏடிஎம்களாகவும் மாற்றுவதற்கான பணிகள் ஆரம்பமாகியிருக்கிறதாம்.
இதுகுறித்து கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுப்பையன் சொல்லும்போது, அனைத்து ரேஷன் கடைகளும் மைக்ரோ ஏடிஎம்களாக மாறும்போது ஆதார் எண் அடிப்படையில் 1000 முதல் 2 ஆயிரம் ரூபாய் வரை பரிவர்த்தனை செய்து கொள்ள முடியும். சூப்பர் வசதி: தற்சமயம், 34 லட்சம் பேர் முதியோர் உதவித்தொகை மாதம் ரூ.1000 பெறுகிறார்கள். அவர்களில் 2.7 லட்சம் பேர் வங்கிகள் மற்றும் தபால் நிலையங்கள் வழியாக பணம் பெறுகிறார்கள்.
ஆனால், இணையதள இணைப்புகளில் சிக்கல், பயோமெட்ரிக் கையடக்க கருவிகளில் பயோ மெட்ரிக் அங்கீகாரத்தை பெறுவதில் சிக்கல், போன்ற காரணங்களால், இவைகளில் நடைமுறை சிக்கல்கள் எழுகின்றன. ஆனால், தமிழக அரசு தற்போது மேற்கொள்ளப்போகும் புதிய அதிரடியால், கிராமப்புற மக்கள் அனைவருக்குமே, ரேசன் கடை ஏடிஎம்கள் மூலம் பண சேவையை பெற முடியும்" என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.