இலங்கையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரங்கள் தொடர்பில், எவ்வித அரசியல் தலையீடுகளுமின்றிச் சட்டத்தின் அடிப்படையில் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.
நோர்வே நாடாளுமன்றத்தில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற விசேட விவாதத்தின்போது, அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சர் எஸ்பென் பார்த் ஐடே இலங்கையின் நிலைவரம் குறித்து ஆழ்ந்த கவலையை வெளியிட்டிருந்தார்.
குறிப்பாக, வடக்கு - கிழக்கில் நிலஅபகரிப்பு, இராணுவமயமாக்கல், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் மற்றும் செம்மணி புதைகுழி விவகாரத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான புதிய அரசு வெளிப்படையான விசாரணைகளை நடத்த வேண்டும் என அவர் வலியுறுத்தியிருந்தார்.
இதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார ஊடகங்களுக்கு விசேட விளக்கமளித்துள்ளார். யுத்தம் முடிவடைந்த காலத்தில் இருந்தே இத்தகைய வாய்ச் சவடால் பேச்சுக்களை நீதி அமைச்சராகவும் அரசாங்கங்களின் பொறுப்பான தலைவர்களாகவும் இருந்தவர்கள் பலர் கூறி வந்திருக்கிறார்கள். அதைக் கேட்டுக் காது புளித்து விட்டது.
அதே உபதேசத்தைத்தான் இப்போ தைய நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்காரவும் முன்வைத்திருக்கிறார். யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற யுத்தக் குற்றங்கள், மனித குலத்துக்கு எதிரான கொடூரங்கள், அடிப்படை மனித உரிமை மீறல்கள் போன்றவை தொடர்பில் சர்வதேச நியமங்களுக்கு அமைவான நீதி விசாரணைகள் உரிய முறைப்படி நடக்க வேண்டும் என்று யுத்தம் முடிவடைந்த காலத்தில் இருந்தே
ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலின் தீர்மானங்கள் மேல் தீர்மானங்கள் ஊடாக சர்வதேசம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது.
இந்த விடயத்தில் குற்றச்சாட்டு இலங்கைப் படைகள் மீது நேரடியாக சுமத்தப்படுவது மறுக்கப்படக்கூடியது அல்ல. ஆனால் இலங்கை இராணுவத்தினருக்கோ, ஏனைய படையினருக்கோ எதிராக விசாரணைகளே நடத்த மாட்டோம் என்பதில் விடாப்பிடியாக அடம்பிடித்துக் கொண்டிருக்கும் ஜே.வி.பி. உட்பட்ட தரப்பினர் அரசு தலைவர்களாக இருந்து கொண்டு, சட்டத்தின் அடிப்படையிலான முறையான விசாரணைகள் நடைபெறும் என்று திரும்பத் திரும்ப நாட்டு மக்களின் காதிலும் சர்வதேசத்தின் காதிலும் பூச்சுற்றிக்கொண்டிருக்கிறார்கள்.
சிங்களத்தின் அந்தப் பூச்சுற்றல் அஞ்சல் ஓட்டத்தில் இப்போது அஞ்சல் கோல் தற்போதைய நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்காரவின் கைகளில் உள்ளது. அதனால்தான் அவரும் அதே பூச்சுற்றல் பல்லவியைப் பாடுகிறார்.
முறையான நீதி விசாரணை என்பது சர்வதேச நியமங்களுக்கு அமைவாக நடைபெற வேண்டும். குற்றச்சாட்டுக்கு உள்ளாகும் தரப்பே குற்றங்களை விசாரிக்கும் தரப்பாகவும் இருக்கும் கேலிக்கூத்து பொருத்தமற்றது.
இலங்கைப் படைகளுக்கு எதிராக விசாரணை நடத்த இடமளியோம் என்று மிக உறுதியான பேரினவாத மேலாதிக்க நிலைப்பாட்டில் இருந்து கொண்டு, சட்டத்தின் அடிப்படையில் முறையான விசாரணை என்று நீதி அமைச்சர் கயிறு விடுவது முழு உலகையும் ஏமாற்றும் தந்திரமாகும்.