உலகளாவிய ரீதியில் நிலவும் பதற்றமான சூழலைத் தொடர்ந்து, இலங்கையிலுள்ள வெளிநாட்டு இராஜதந்திர தூதரகங்கள் மற்றும் வெளிநாட்டவர்களுடன் தொடர்புடைய இடங்களின் பாதுகாப்பை இலங்கை பொலிஸார் பலப்படுத்தியுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மார்ச் 3 ஆம் திகதி விடுக்கப்பட்ட அறிக்கையில், பொது அமைதிக்கும் தேசிய பாதுகாப்பிற்கும் குந்தகம் விளைவிக்கும் எந்தவொரு சம்பவத்தையும் தடுப்பதற்காக, விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செயல்படுத்துமாறு அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் பொலிஸ் மா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார்.
இதன்படி, தூதரகங்கள், உயர்ஸ்தானிகராலயங்கள் மற்றும் அவற்றின் உத்தியோகபூர்வ குடியிருப்புகள், அத்துடன் அது சார்ந்த ஏனைய இடங்களுக்குமான பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மறு அறிவித்தல் வரை அமுலில் இருக்கும் என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த அறிவுறுத்தல்கள், தற்போது இலங்கையில் தங்கியுள்ள வெளிநாட்டவர்களின் பாதுகாப்பு, அவர்களது குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள், சுற்றுலாத் தலங்கள், ஹோட்டல்கள், வதிவிடக் கட்டடங்கள் மற்றும் மத வழிபாட்டுத் தலங்கள் போன்றவற்றிற்கும் பொருந்தும்.
தனிநபர்களின் பாதுகாப்பு மற்றும் சொத்துக்களைப் பாதுகாப்பதை உறுதி செய்வதற்காக 24 மணிநேர பாதுகாப்புத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தேவைப்படின், இந்த பாதுகாப்பு நடவடிக்கைகளைச் செயல்படுத்துவதற்கு முப்படைகளின் உதவியையும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.