மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழல் பெரும் போராக மாறியுள்ளது. ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கப் படைகள் செவ்வாய்க்கிழமை தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்களை மேற்கொண்டன.
இதற்குப் பதிலடியாக வளைகுடா பிராந்தியத்தின் பல்வேறு பகுதிகளில் ஈரான் தாக்குதல்களை நடத்தியுள்ளதோடு, லெபனான் வரை மோதல் பரவியுள்ளது.
இந்தச் சூழல் உலகளாவிய சந்தைகளை நிலைகுலைய வைத்துள்ளதுடன், கச்சா எண்ணெய் விலையை உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது.
போர் தொடங்கி நான்கு நாட்களாகியுள்ள நிலையில், ஈரானின் கடற்படை மற்றும் வான்படை இலக்குகள் பலவற்றைத் தாக்கி அழித்துவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானின் அணுசக்தி திட்டங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் முடங்கியதைத் தொடர்ந்து, அந்நாடு தாக்குதல் நடத்தக்கூடும் என்ற அச்சத்திலேயே இந்த இராணுவ நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர் நியாயப்படுத்தியுள்ளார்.
ஈரானின் முக்கிய இலக்குகளுக்குப் பதிலடியாக, சவூதி அரேபியாவிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் மீது ஈரானிய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தியுள்ளன. ஏற்கனவே குவைத்திலும் இதுபோன்ற தாக்குதல்கள் பதிவாகியுள்ளன.
இதனைத் தொடர்ந்து, லெபனான் உட்பட மத்திய கிழக்கிலுள்ள தமது தூதரகங்களை அமெரிக்கா தற்காலிகமாக மூடியுள்ளதுடன், அவசியமற்ற அரசுப் பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை உடனடியாக வெளியேறுமாறும் உத்தரவிட்டுள்ளது.
ஈரானின் உயர்மட்டத் தலைவர்களை இலக்கு வைத்து இந்தத் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. குறிப்பாக, கடந்த சனிக்கிழமை ஆரம்பிக்கப்பட்ட தாக்குதல்களிலேயே ஈரானின் உச்சகட்டத் தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈரானின் புதிய தலைமைத்துவத்தைத் தெரிவுசெய்யும் பணியில் இருந்த நிபுணர்கள் சபை (Assembly of Experts) கூடியிருந்த கட்டடமும், குவாம் நகரத்தில் வான்வழித் தாக்குதல் மூலம் தரைமட்டமாக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கின் எரிசக்தி விநியோகத்தில் ஏற்பட்டுள்ள இடையூறுகள், தொற்றுநோய்க்குப் பிந்தைய பணவீக்கத்தை மீண்டும் தூண்டிவிடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.
செவ்வாய்க்கிழமை கச்சா எண்ணெய் விலை சுமார் 8% உயர்ந்து, பீப்பாய் ஒன்று 83 அமெரிக்க டொலர்களைத் தாண்டியது. இது கடந்த ஜூலை 2024க்குப் பிந்தைய மிக உயர்ந்த விலையாகும். ஐரோப்பாவின் மொத்த இயற்கை எரிவாயு விலையும் 40% வரை அதிகரித்துள்ளது.
இந்தத் தாக்குதல் எந்தவித தூண்டுதலுமின்றி நடத்தப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ள ஈரான், தனது பொருளாதார மையங்களை இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா தாக்கினால், பிராந்தியத்திலுள்ள அனைத்து பொருளாதார மையங்களையும் அழிப்போம் என எச்சரித்துள்ளது. ஈரானின் இந்தத் தாக்குதல்களால் இதுவரை 787 பேர் உயிரிழந்துள்ளதாகச் செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, லெபனானிலும் மோதல்கள் தீவிரமடைந்துள்ளன. ஹெஸ்பொல்லா அமைப்பினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதை அடுத்து, இஸ்ரேல் லெபனானின் தெற்குப் பகுதியில் வான்வழித் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளது. பெய்ரூட் நகர் முழுவதும் கரும்புகை சூழ்ந்துள்ளதுடன், அங்கு டசின் கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஜெர்மன் சான்ஸ்லர் பிரீட்ரிக் மெர்ஸுடன் (Friedrich Merz) ஆலோசனை நடத்துவதற்கு முன்னதாக, தற்போதைய சூழல் மிகவும் ஆபத்தானது என்பதால் ஈரானிய மக்களை வீதிகளில் இறங்கிப் போராட்டம் நடத்துவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் தீவிரமடைந்துள்ள நிலையில், உலகளாவிய பங்குச்சந்தைகள் வீழ்ச்சியடைந்துள்ளன. அத்துடன் கச்சா எண்ணெய் விலையும் முன்னெப்போதும் இல்லாத வகையில் உயர்ந்துள்ளது. இது தொடர்பான முக்கிய விபரங்கள் பின்வருமாறு:
ஈரான் மீதான ட்ரம்ப்பின் கருத்து:
ஈரானின் இராணுவக் கட்டமைப்புகள் பெரும்பாலும் "தகர்க்கப்பட்டுவிட்டதாக" அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானின் புதிய தலைமைத்துவத்தை இலக்கு வைத்து இன்றும் தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டதாக அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
ஈரான் தாக்குதல்களுக்கு பின் வித்கொப்; தூதரக தொடர்புகள் நிறுத்தம்
அமெரிக்கா–ஈரான் இடையிலான அணு பேச்சுவார்த்தைகளை அண்மைக் காலங்களில் முன்னிலை வகித்த Steve Witkoff, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரானில் மேற்கொண்ட தாக்குதல்களுக்கு பின்னர் ஈரான் தரப்பினருடன் எந்தவிதத் தூதரக தொடர்புகளையும் மேற்கொள்ளவில்லை என Donald Trump நிர்வாகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
“இது ஒரு இராணுவ நடவடிக்கை. அது தனது பாதையைத் தொடர்ந்து செல்ல வேண்டும்,” என அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
கடந்த சில மாதங்களாக அமெரிக்கா–ஈரான் அணு உடன்படிக்கைக்கான பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்த வித்கொப், தாக்குதல்கள் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து (“since this thing went kinetic”) ஈரான் வெளியுறவு அமைச்சர் Abbas Araghchi அவர்களுடன் தொடர்பு கொள்ளவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு முழுவதும் இரு தரப்பினருக்கும் இடையே பலமுறை உரையாடல்கள் இடம்பெற்றிருந்த நிலையில், தற்போது எந்த தொடர்பும் இல்லாதது குறிப்பிடத்தக்கதாக பார்க்கப்படுகிறது.
மேலும், ஈரானின் உயர்மட்ட தேசிய பாதுகாப்பு அதிகாரி Ali Larijani அவர்களுடன் வித்கொப் தொடர்பு கொண்டதாக வெளிவந்த தகவல்களையும் அந்த அதிகாரி மறுத்துள்ளார். வித்கொப் அவருடன் ஒருபோதும் உரையாடவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையில், கடந்த சில நாட்களில் சுமார் ஒரு டஜன் நாடுகள் அமெரிக்க நிர்வாகத்தை அணுகி, போர் நிலையிலான அமெரிக்காவின் முயற்சிகளுக்கு உதவ தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
எனினும், அந்த தொடர்புகளில் ஈரான் தரப்புடன் நேரடி அல்லது மறைமுக பேச்சுவார்த்தைகள் எதுவும் இடம்பெறவில்லை என வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஈரான் உயர் தளபதி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அறிவிப்பு
இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள், தெஹ்ரானில் நடத்தப்பட்ட வான் தாக்குதலில் ஈரானின் குத்ஸ் படையின் (Quds Force) லெபனான் பிரிவு தற்காலிக தளபதி கொல்லப்பட்டதாக அறிவித்துள்ளன.
Israel Defense Forces (IDF) வெளியிட்ட அறிக்கையில், Daoud Ali Zadeh என்பவர் தாக்குதலில் கொல்லப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இவர் குத்ஸ் படையின் லெபனான் பிரிவின் “தற்காலிக தளபதி” மற்றும் லெபனானுக்குப் பொறுப்பான “உயர்மட்ட” ஈரான் அதிகாரி என விவரிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு முன்னர் அந்தப் பொறுப்பை வகித்த Hassan Mahdavi, IDF தாக்குதலில் முன்பே கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கூற்றை சுயாதீனமாக உறுதிப்படுத்த இயலவில்லை என்றும், இதுவரை ஈரான் தரப்பில் இருந்து எந்த உத்தியோகபூர்வ பதிலும் வெளியாகவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.
ஹெஸ்பொல்லாவுக்கு ஆதரவு
IDF தகவலின்படி, சய்தே தலைமையிலான லெபனான் பிரிவு, Hezbollah இயக்கத்தின் இராணுவ வலுவூட்டலுக்கு ஆதரவளித்து வந்ததாக கூறப்பட்டுள்ளது. மேலும், Islamic Revolutionary Guard Corps (IRGC) உயர்மட்டத் தலைமையும் ஹெஸ்பொல்லா தலைமையும் இடையிலான தொடர்பு பாலமாக செயல்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இஸ்ரேல் கடந்த திங்கட்கிழமை முதல் லெபனானில் ஈரான் ஆதரவு கொண்ட இலக்குகளை தொடர்ந்து தாக்கி வருவதாகவும் அறியப்படுகிறது.
24 மணி நேர எச்சரிக்கை
தாக்குதலைத் தொடர்ந்து, இஸ்ரேல் இராணுவ பேச்சாளர் Avichay Adraee, “லெபனானில் உள்ள ஈரான் ஆட்சியின் மீதமுள்ள பிரதிநிதிகள் 24 மணி நேரத்திற்குள் அங்கிருந்து விலக வேண்டும்” என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
“அதன் பின்னர், லெபனானில் உள்ள எந்த இடமும் ஈரான் ஆட்சி பணியாளர்களுக்கு பாதுகாப்பான தஞ்சமாக கருதப்படாது. அவர்கள் எங்கு இருந்தாலும் IDF முழு வலிமையுடன் தாக்கும்,” என அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், மத்திய கிழக்கில் பதற்றம் மேலும் தீவிரமடைந்துள்ளதுடன், பிராந்திய பாதுகாப்பு நிலைமை குறித்து சர்வதேச அச்சமும் அதிகரித்துள்ளது.
ஈரான் போர்நிலை குறித்து டிரம்ப் முதல் பொதுக் கருத்து – முக்கிய அம்சங்கள்
ஈரானுடன் நடைபெற்று வரும் போர்நிலை தொடர்பாக Donald Trump செவ்வாய்க்கிழமை ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். மோதல் தொடங்கிய பின்னர் அவர் பொதுவெளியில் செய்தியாளர்களை சந்தித்த முதல் சந்தர்ப்பமாக இது அமைந்தது.
வெள்ளை இல்லத்தின் ஓவல் அலுவலகத்தில் Friedrich Merz உடன் நடைபெற்ற சந்திப்பின் போது, இருவரும் மூடப்பட்ட ஊடகக் கூட்டத்திற்கு முன் செய்தியாளர்களுடன் உரையாடினர்.
“இஸ்ரேல் என்னைத் தள்ளவில்லை”
ஈரானைத் தாக்குவதற்கான இஸ்ரேலின் திட்டங்கள் தன்னைத் தாக்குதலுக்குத் தூண்டியதாக முன்வைக்கப்பட்ட கருத்தை டிரம்ப் மறுத்தார். “அவர்களே என்னைத் தள்ளவில்லை; மாறாக நான்தான் அவர்களைத் தள்ளியிருக்கலாம்,” என அவர் குறிப்பிட்டார்.
அமெரிக்க இராணுவ நடவடிக்கைக்குப் பிறகு ஈரானின் “கிட்டத்தட்ட அனைத்தும் அழிக்கப்பட்டுவிட்டது” என்றும், “கடற்படை இல்லை, விமானப்படை இல்லை, வான்வழி கண்காணிப்பு இல்லை, ரேடார் இல்லை” எனவும் அவர் தெரிவித்தார்.
அமெரிக்கர்களுக்கு வெளியேற்றத் திட்டமில்லை
சனிக்கிழமை இடம்பெற்ற தாக்குதல்களுக்கு முன் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்கர்களுக்கான வெளியேற்றத் திட்டம் எதுவும் இல்லையெனவும், இராணுவ நடவடிக்கை மிக விரைவாக முன்னெடுக்கப்பட்டதால் முன்கூட்டியே ஏற்பாடுகள் செய்ய முடியவில்லை எனவும் டிரம்ப் கூறினார்.
ஈரானின் பதிலடி “ஆச்சரியம்”
அமெரிக்கா–இஸ்ரேல் தாக்குதல்களுக்கு பதிலடியாக ஈரான் தனது அண்டை நாடுகளைத் தாக்கியது தமக்கு ஆச்சரியமளித்ததாகவும், இலக்காகிய நாடுகளுக்கும் அது எதிர்பாராத ஒன்றாக இருந்திருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஆயுத உற்பத்தி விரைவாக்கம்
அமெரிக்காவுக்கு சில வகை ஆயுதங்களில் “கிட்டத்தட்ட தீராத கையிருப்பு” இருப்பதாக டிரம்ப் தெரிவித்தார். மேலும், பாதுகாப்பு உற்பத்தியாளர்கள் அவசர அதிகாரங்களின் கீழ் ஆயுத உற்பத்தியை விரைவுபடுத்தி வருவதாகவும் அவர் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இங்கிலாந்து குறித்து கடும் விமர்சனம்
United Kingdom மீது டிரம்ப் கடும் விமர்சனம் முன்வைத்து, சாகோஸ் தீவுகளின் (Chagos Islands) அதிகாரத்தை கைவிட்ட விவகாரம் குறித்து “மிகவும் ஒத்துழைக்காத நாடு” என குறிப்பிட்டார். சாகோஸ் தீவுகளில் அமெரிக்கா–இங்கிலாந்து கூட்டு இராணுவத் தளம் அமைந்துள்ளது.
“இப்போதைக்கு போராட்டம் வேண்டாம்”
ஈரானியர்கள் தற்போது போராட்டங்களில் ஈடுபட வேண்டாம் எனவும், “அங்கு நிலைமை மிகவும் ஆபத்தானது; பல குண்டுகள் வீசப்படுகின்றன,” எனவும் அவர் எச்சரித்தார்.
“மிக மோசமான நிலைமை” குறித்து கருத்து
இவ்வாரம் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட Ali Hosseini Khamenei குறித்து குறிப்பிட்டு, “முந்தையவரைப் போலவே மோசமான ஒருவர் ஆட்சியைப் பிடித்தால் அதுவே ஈரானுக்கு மிக மோசமான நிலைமை ஆகும்,” என டிரம்ப் தெரிவித்தார்.
இந்நிலையில், மத்திய கிழக்கில் போர்நிலை மேலும் விரிவடையும் அபாயம் நிலவுவதாக சர்வதேச அரசியல் வட்டாரங்கள் கவலை வெளியிடுகின்றன.