விதி மாத்திரமல்ல, வினையும் வலியது..!

விதி மாத்திரமல்ல, வினையும் வலியது..!

விதி மாத்திரமல்ல, வினையும் வலியது. பற்றினால் இலகுவில் விட்டு விடாது. தன் கைவரிசையை காட்டியே தீரும். அதன் பின்தான் ஓயும்.

இலங்கையில் யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் பல்லாயிரம் அப்பாவி தமிழர்களைக் கொன்றொழிக்கக் காரணமான யுத்த குற்றங்கள், மனித குலத்துக்கு எதிரான கொடூரங்கள், மனித உரிமை மீறல்கள் போன்ற விடயங்களில் ஈடுபட்ட தரப்புகள் பதில் கூறியேயாக வேண்டும்.

பொறுப்புக் கூறலை எதிர்கொண்டு, விளைவுகளைச் சந்தித்தேயாக வேண்டும். இலகுவில் தப்பிவிட முடியாது. காலம் செல்லலாம். வாய்ப்புகள் இழுபடலாம். ஆனால் என்றோ ஒரு நாள் உண்மைகள் வெளிப்பட்டு, தவறிழைத்தோர் நீதியின் முன் நிறுத்தப்பட்டேயாவார்கள்.

ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலில் இந்த விவகாரத்தை ஒட்டி இலங்கையின் நிலைமை

தொடர்ந்து சிக்கலுக்குரியதாகவே இருந்து வருகிறது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கவுன்ஸிலின் 61ஆவது கூட்டத்தொடர் தற்போது ஜெனிவாவில் நடைபெற்று வருகின்றது. கடந்த 23ஆம் திகதி ஆரம்பமான இந்த நீண்ட கூட்டத் தொடர் இம்மாதம் 31ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இலங்கை விவகாரம் தொடர்பான அறிக்கைகள் மற்றும் விவாதங்கள் எவையும் இந்தக் கூட்டத் தொடரில் இல்லை என்பதுதான் ஒழுங்கு. இலங்கை விவகாரம் இந்த அமர்வுக்கான நிகழ்ச்சி நிரலில் இல்லை.

ஏற்கனவே கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கவுன்ஸிலின் 60ஆவது கூட்டத்தொடரின் போது இலங்கை நிலைமை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. 'இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்' எனும் தீர்மானத்தை மேலும் இரு வருட காலத்துக்கு நடைமுறைப் படுத்துவதற்கு அப்போது முடிவு செய்யப்பட்டது.

அதன் பிரகாரம் இலங்கை விடயம் தொடர்பான ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கின் எழுத்துமூல அறிக்கை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவிருக்கும் 63 வது கூட்டத்தொடரிலும், விரிவான அறிக்கை அடுத்த ஆண்டு செப்டெம்பர் மாதம் நடைபெறவிருக்கும் 66 ஆவது

கூட்டத்தொடரிலும் சமர்ப்பிக்கப்படும்.

ஆகவே இம்முறை நடைபெற்று வரும் 61ஆவது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பில் அறிக்கைகள் எவையும் சமர்ப்பிக்கப்பட மாட்டா என்பதுடன் விவாதங்களும் இடம்பெறா என்றுதான் கூறப்பட்டது.

ஆனால், அப்படியிருக்கவும் தற்போது நடைபெறும் 61ஆவது கூட்டத்தொடரில், கவுன்ஸிலில் இலங்கை விடயத்தைக் கூட்டாகக் கையாளும் பிரித்தானியா,கனடா, மலாவி, மொண்டெனேக்ரோ மற்றும்

வடக்கு மெசிடோனியா ஆகியவை அடங்கிய இணை அநுரணைக்குழு சார்பில் விசேட அறிக்கை ஒன்று

சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றது.

அந்த நாடுகள் சார்பில் பிரித்தானியாவின் மனித உரிமைகள் தூதுவர் எலினோர் சாண்டர்ஸ் இந்த அறிக்கையை முன்வைத்திருக்கின்றார்.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை முழுமையாக நீக்க வேண்டும், முன்மொழியப்பட்டுள்ள 'பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டம்' சர்வதேச மனித உரிமைப் பொறுப்புகளுக்கு இணங்கியதாக இருக்க வேண்டும், இராணுவம் வசமுள்ள காணிகளை விடுவித்தல், நிலைமாறுகால நீதி, இனவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகள் மற்றும் முக்கியமான மனித உரிமைமீறல் வழக்குகள் குறித்தெல்லாம்அதில் விவரிக்கப்பட்டுள்ளது.

யுத்த காலக் கொடூரங்கள் இலங்கைக்கு தீராத பிணியாகப் பற்றித் தொடர்ந்து தொல்லை கொடுத்துக் கொண்டேயிருக்கும் என்றே தோன்றுகின்றது.

Radio Logo
Puthiya Kural Radio
Voice of Tamil People – Toronto, Canada
வானொலி