இலங்கைக் கடற்பரப்பில் ஈரானின் போர்க்கப்பல் மூழ்கடிக்கப்பட்டதாக பென்டகன் அறிவிப்பு!

இலங்கைக் கடற்பரப்பில் ஈரானின் போர்க்கப்பல் மூழ்கடிக்கப்பட்டதாக பென்டகன் அறிவிப்பு!

இந்தியப் பெருங்கடலில் ஈரான் போர்க்கப்பல் ஒன்று டார்பிடோ தாக்குதலால் மூழ்கடிக்கப்பட்டதாக அமெரிக்காவின் பாதுகாப்புச் செயலாளர் Pete Hegseth தெரிவித்துள்ளார்.

பென்டகனில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

“உண்மையில் நேற்று, இந்தியப் பெருங்கடலில், சர்வதேச கடற்பரப்பில் தாங்கள் பாதுகாப்பாக இருப்பதாக நினைத்திருந்த ஒரு ஈரான் போர்க்கப்பலை அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் டார்பிடோ மூலம் மூழ்கடித்தது.

இது அமைதியான மரணம். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு எதிரி கப்பல் ஒன்றை டார்பிடோ தாக்குதலால் மூழ்கடித்த முதல் சம்பவம் இதுவாகும்,” என அவர் தெரிவித்துள்ளார்.

எனினும், தாக்குதலுக்கு உள்ளான கப்பலின் பெயர் அல்லது வகை குறித்து அவர் விளக்கமளிக்கவில்லை.

‘நீர்மூழ்கிக் கப்பல் தாக்குதல் என்ற தகவல்கள் முழுமையாக நிராகரிக்கப்படுகின்றன’ – கடற்படை

இலங்கைக்கு அண்மைய கடற்பரப்பில் ஈரான் கப்பல் மீது நீர்மூழ்கிக் கப்பல் தாக்குதல் நடத்தப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் இன்று நண்பகலில் செய்தி வெளியிட்டிருந்தன.

இது தொடர்பாக இன்று (மார்ச் 4) மாலை நடைபெற்ற விசேட ஊடகச் சந்திப்பில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த இலங்கை கடற்படை ஊடகப் பேச்சாளர் கமாண்டர் புத்திக சம்பத், “ஈரான் கப்பல் மீது நீர்மூழ்கிக் கப்பல் தாக்குதல் நடத்தப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் வெளியிடும் தகவல்கள் அனைத்தும் முழுமையாக நிராகரிக்கப்படுகின்றன” என்று தெரிவித்தார்.

கப்பலில் இருந்தவர்களின் துல்லியமான எண்ணிக்கையை உடனடியாக உறுதிப்படுத்த முடியாது என்றும், உயிர் தப்பியவர்களிடமிருந்து பெறப்படும் தகவல்களின் அடிப்படையில் சரியான விபரங்கள் பின்னர் வெளிப்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கேள்வி:

வெளிநாட்டு ஊடகங்கள் பல, கடற்படை இதனை நீர்மூழ்கிக் கப்பல் தாக்குதல் என தெரிவித்ததாக செய்தி வெளியிட்டுள்ளன. இதற்கு உங்கள் பதில் என்ன?

கடற்படை ஊடகப் பேச்சாளர்:

அத்தகைய அனைத்து தகவல்களையும் இலங்கை கடற்படை என்ற வகையில் முழுமையாக நிராகரிக்கிறோம்.

மேலும், சம்பவம் எவ்வாறு இடம்பெற்றது என்பதைத் தெளிவுபடுத்த நிபுணர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினரால் விரிவான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியம் என கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

Radio Logo
Puthiya Kural Radio
Voice of Tamil People – Toronto, Canada
வானொலி