இலங்கையில் ‘டிராபிக்கல் சைக்க்ளோன் டிட்வா’ காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக கூடுதலாக €1 மில்லியன் (ரூ. 370 மில்லியனுக்கு மேல்) மனிதாபிமான நிதி ஒதுக்கியுள்ளதாக இலங்கை மற்றும் மாலைத்தீவுகளுக்கான ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதித்துவம் அறிவித்துள்ளது.
இந்த நிதி, புயலால் தொடர்ந்தும் நிலவி வரும் மனிதாபிமான பாதிப்புகளை சமாளிக்கவும், நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டுவரும் நிவாரண நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கவும் பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதித்துவத்தின் தகவலின்படி, இந்த உதவி மனிதாபிமான கூட்டாளர் அமைப்புகள் ஊடாக வழங்கப்படவுள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு அத்தியாவசிய சேவைகள் வழங்குவதில் கவனம் செலுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டு நவம்பர் மாத இறுதியில் தீவை தாக்கிய ‘டிராபிக்கல் சைக்க்ளோன் டிட்வா’க்கு பின்னர், இலங்கை தொடர்ந்து மீட்பு மற்றும் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் நிலையில் இந்த புதிய நிதி உதவி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு, அனர்த்தம் ஏற்பட்டதையடுத்து குறுகிய காலத்திலேயே ஐரோப்பிய ஒன்றியம் தனது கூட்டாளர் அமைப்புகள் வழியாக €2.35 மில்லியன் அவசர மனிதாபிமான நிதியை ஒதுக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.