இரண்டாவது திருத்த மசோதாக்களுக்கு 50 சதவிகித மாநிலங்களின் ஒப்புதலை பெற வேண்டும் என்று கூறப்படுகிறது.
ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்திற்காக மூன்று மசோதாக்களை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு அளித்த அறிக்கைக்கு மத்திய அமைச்சரவை இந்த மாத தொடக்கத்தில் ஒப்புதல் அளித்தது. ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்த 18 அரசியல் சாசன திருத்தங்களை மேற்கொள்ள இந்தக் குழு பரிந்துரைத்துள்ளது.
இந்தக் குழுவின் பரிந்துரைகளை செயல்படுத்துவதற்காக மூன்று மசோதாக்களை நாடாளுமன்றத்தில் வரும் குளிர்கால கூட்டத்தொடரிலோ அல்லது பட்ஜெட் கூட்டத்தொடரிலோ கொண்டு வர மத்திய அரசு பரிசீலித்து வருவதாகக் கூறப்படுகிறது.
இதில், நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வகை செய்யும் முதலாவது திருத்த மசோதா மற்றும் பொது வாக்காளர் பட்டியலை தயாரிப்பது தொடர்பாக அரசியலமைப்பு விதிகளை திருத்த வழிவகை செய்யும் இரண்டாவது திருத்த மசோதாக்களுக்கு 50 சதவீதம் மாநிலங்களின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்று கூறப்படுகிறது.
மேலும், மக்களவையில் இந்த மசோதாக்களை நிறைவேற்ற 362 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படும் சூழலில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 292 உறுப்பினர்களின் ஆதரவு மட்டும் உள்ளது. இதனால், ஒரே நாடு ஒரே தேர்தல் திட்ட மசோதாக்களை நிறைவேற்றுவது மத்திய அரசுக்கு சவாலாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.