வடக்கில் நிலவும் வறுமை, சமூகப்-பொருளாதார சவால்கள் குறித்து நோர்வே பிரதிநிதிகளுக்கு விளக்கம்!

வடக்கில் நிலவும் வறுமை, சமூகப்-பொருளாதார சவால்கள் குறித்து நோர்வே பிரதிநிதிகளுக்கு விளக்கம்!

வட மாகாண அபிவிருத்திப் பணிகள் மற்றும் நவீன தொழில்நுட்பத்தின் ஊடாக இலங்கையின் கடற்றொழில் துறையை மேம்படுத்துவது தொடர்பாக, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் நோர்வே நாட்டின் பிரதி வெளிவிவகார அமைச்சர் அண்ட்ரியாஸ் மோட்ஸ்ஃபெல்ட் கிராவிக் (Hon. Andreas Motzfeldt Kravik) ஆகியோருக்கிடையில் விசேட இருதரப்பு கலந்துரையாடல் இன்று (04) கடற்றொழில் அமைச்சில் நடைபெற்றது.

இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், 15 வருடங்களுக்கும் மேலாக யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட மக்களுடன் நெருக்கமாகப் பணியாற்றும் மக்கள் பிரதிநிதி என்ற வகையில், வட பகுதி மக்களுக்கும் நோர்வே நாட்டிற்கும் இடையிலான விசேட நட்புறவையும், இலங்கையின் சமாதானச் செயற்பாட்டிற்கு நோர்வே அரசாங்கம் வழங்கிய பங்களிப்பையிம் நன்றியுடன் நினைவு கூர்ந்தார்.

76 வருடங்களின் பின்னர் வட பகுதி மக்கள் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மீது வைத்துள்ள நம்பிக்கையின் அடிப்படையில், இப்பிரதேசத்தின் உட்கட்டமைப்பு அபிவிருத்திக்கு அரசாங்கம் முன்னுரிமை அளித்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

வட மாகாணத்தில் நிலவும் வறுமை மற்றும் சமூகப்-பொருளாதார சவால்கள் குறித்து அமைச்சர் இங்கு நோர்வே பிரதிநிதிகளுக்கு விரிவாக விளக்கமளித்தார்.

போரினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் நுண்நிதிக் கடன் (Micro-finance) பொறி காரணமாக 60% இற்கும் அதிகமான மக்கள் எதிர்நோக்கும் கடும் கஷ்டங்கள் குறித்து அவர் விசேடமாக வலியுறுத்தினார்.

இம்மக்களை வறுமையிலிருந்து மீட்பதற்காக அரசாங்கம் பல்வேறு நிகழ்ச்சித்திட்டங்களை ஆரம்பித்துள்ளதாகவும் மேலும் புதிய கைத்தொழில் வலயங்களை ஸ்தாபித்தல், பலாலி விமான நிலையத்தை விஸ்தரித்தல், மயிலிட்டி மீன்பிடித் துறைமுக அபிவிருத்தி மற்றும் பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை போன்ற பாரிய அபிவிருத்தித் திட்டங்களையும் அரசாங்கம் ஏற்கனவே ஆரம்பித்துள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், எதிர்கால சந்ததியினருக்காக வட மாகாணத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் ஒன்றும் உள்ளக விளையாட்டு அரங்கம் (Indoor Stadium) ஒன்றும் நிர்மாணிக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் இங்கு விசேடமாகக் குறிப்பிட்டார்.

கடற்றொழில் துறை குறித்துக் கருத்துத் தெரிவித்த அமைச்சர், கடந்த வருடம் மீன் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி வருமானம் அதிகரித்துள்ளதாகக் கூறினார். நீர்வாழ் உயிரின வளர்ப்பு (Aquaculture) அபிவிருத்திக்கு நோர்வே அரசாங்கத்தின் தொழில்நுட்ப ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இங்கு கருத்துத் தெரிவித்த நோர்வே பிரதி வெளிவிவகார அமைச்சர்,

இலங்கையின் நிலைபேறான கடற்றொழில் நடைமுறைகளை (Sustainable Fishing Practices) பாராட்டியதுடன், ஒரு கடற்றொழில் தேசம் (Fisheries Nation) என்ற வகையில் இலங்கைக்குத் தேவையான தொழில்நுட்ப உதவியை வழங்க நோர்வே அரசாங்கம் தயாராக உள்ளதெனத் தெரிவித்தார்.

எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள் நோர்வே நாட்டிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதோடு, அவ்விஜயத்தைத் தான் மிகவும் ஆவலுடன் எதிர்பார்ப்பதாக நோர்வே பிரதி வெளிவிவகார அமைச்சர் இங்கு குறிப்பிட்டார்.

அவ்விஜயத்தின் போது அந்நாட்டின் துறைசார் நிபுணர்களைச் சந்தித்து தொழில்நுட்ப அறிவு மற்றும் நிபுணத்துவத்தைப் பகிர்ந்துகொள்ளவும், இரு நாடுகளுக்கும் இடையிலான கடற்றொழில் ஒத்துழைப்பை புதிய பாதையில் இட்டுச் செல்லவும் எதிர்பார்ப்பதாக அமைச்சர் மேலும் வலியுறுத்தினார்.

சமுத்திர மாசடைதல் மற்றும் பிளாஸ்டிக் கழிவு முகாமைத்துவம் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. மீன்பிடித் துறைமுகங்களில் 15 வருடங்களுக்கும் மேலாகக் குவிந்துள்ள பயன்படுத்தப்படாத பைபர் கிளாஸ் படகுகளை மீள்சுழற்சி செய்யும் திட்டம் (Fiberglass Recycling Project) குறித்து அமைச்சின் செயலாளர் கலாநிதி பி.கே. கோலித கமல் ஜினதாச அவர்கள் நோர்வே தூதுக்குழுவினருக்கு விளக்கமளித்தார்.

இக்கலந்துரையாடலில் இலங்கைக்கான நோர்வேத் தூதுவர் மே-எலின் ஸ்டெனர் (H.E. May-Elin Stener), நோர்வே வெளிவிவகார அமைச்சின் சிரேஷ்ட ஆலோசகர்களான திருமதி மரியன் மர்வோல் (Ms. Mariann Murvoll) மற்றும் ஹொம்மா லதீஃப் (Ms. Homma Latif) உள்ளிட்ட தூதுக்குழுவினரும் கலந்துகொண்டனர்.

Radio Logo
Puthiya Kural Radio
Voice of Tamil People – Toronto, Canada
வானொலி