இந்தியாவின் அழைப்பின் பேரில் கடற்படை இராணுவப் பயிற்சியில் பங்கேற்க வந்ததுடன், இந்திய ஜனாதிபதிக்கு மரியாதை செலுத்திய ஈரான் கடற்படை கப்பலில் பயணம் செய்த கடற்படை வீரர்களின் உயிரிழப்பு தொடர்பாக துக்கம் தெரிவித்திட இந்திய கடற்படைக்கு பொறுப்பு இருப்பதாக இந்தியாவின் முன்னாள் வெளிவிவகார செயலாளர் கன்வால் சிபால் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் குறிப்பிட்டதாவது, அமெரிக்கா இறுதி தருணத்தில் அந்த இராணுவப் பயிற்சியில் பங்கேற்பதைத் தவிர்த்திருப்பதற்கு, இந்தத் தாக்குதல் குறித்து முன்கூட்டியே தகவல் அல்லது தயாரிப்பு இருந்திருக்கலாம் என்பதையும் சுட்டிக்காட்டுகிறார்.
இந்தக் கருத்துகளை அவர் தனது X (முன்னாள் ட்விட்டர்) சமூக வலைதளக் கணக்கில் வெளியிட்ட பதிவின் மூலம் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் தெற்கு கடற்பரப்பில் விபத்துக்குள்ளான ஈரானிய கடற்படையின் ‘ஐ.ஆர்.ஐ.எஸ். டெனா’ (IRIS Dena) போர்க்கப்பலில் இருந்து விடுக்கப்பட்ட அவசர அழைப்பிற்கு அமைய, தாம் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக இந்திய கடற்படை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
கடந்த மார்ச் 4ஆம் திகதி அதிகாலை, காலி துறைமுகத்திற்கு மேற்கே சுமார் 20 கடல் மைல் தொலைவில், இலங்கையின் தேடுதல் மற்றும் மீட்பு வலயத்திற்குள் குறித்த போர்க்கப்பல் இடரை எதிர்கொண்டிருந்த வேளையில், கொழும்பிலுள்ள கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு நிலையத்திற்கு (MRCC) இந்த அவசர செய்தி கிடைக்கப்பெற்றுள்ளது.
இதனைத் தொடர்ந்து, அன்று காலை 10.00 மணியளவில் இந்திய கடற்படை தனது நீண்ட தூர கடல்சார் கண்காணிப்பு விமானத்தை தேடுதல் பணிகளுக்காக ஈடுபடுத்தியது. அத்துடன், அவசர தேவைக்காக வான்வழியாக விநியோகிக்கப்படக்கூடிய உயிர் காக்கும் படகுகளுடன் (Life rafts) மற்றுமொரு விமானமும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது.
அப்பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த இந்திய கடற்படைக் கப்பலான 'ஐ.என்.எஸ். தரங்கிணி' (INS Tarangini) மாலை 4.00 மணியளவில் விபத்து நிகழ்ந்த இடத்திற்குச் சென்றது. மேலும், காணாமல் போனவர்களைத் தேடும் பணிகளை வலுப்படுத்துவதற்காக 'ஐ.என்.எஸ். இக்ஷக்' (INS Ikshak) என்ற ஆய்வுக் கப்பலும் கொச்சியில் இருந்து விரைந்தது.
ஈரானிய கடற்படையின் குறித்த போர்க்கப்பல் பாரிய விபத்துக்குள்ளாகி கடலில் மூழ்கியதில் பல உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கை அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட மீட்பு நடவடிக்கைகளின் போது 32 மாலுமிகள் உயிருடன் மீட்கப்பட்டதோடு, பல உடல்களும் மீட்கப்பட்டுள்ளன.
மனிதாபிமான அடிப்படையிலான இந்த தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் இலங்கை அதிகாரிகளுடன் இணைந்து இந்திய கடற்படை தொடர்ந்து செயற்பட்டு வருவதாக அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.