பாஸ்கார் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பில் கோட்டை நீதவான் நீதிமன்றில் நிலுவையிலுள்ள வழக்கொன்றின் மூன்றாவது சந்தேகநபராக, அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே பெயரிடப்பட்டுள்ளார். குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) இன்று (05) இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, பாஸ்கார் தாக்குதல்களுடன் தொடர்புடைய பயங்கரவாதச் செயற்பாடுகளுக்கு உதவியளித்தமை மற்றும் உடந்தையாக இருந்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ் கடந்த பெப்ரவரி மாதம் 25ஆம் திகதி பேலியகொட பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) தற்காலிக ஏற்பாடுகளின் கீழ், இவரை 90 நாட்கள் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்வதற்கு பாதுகாப்பு அமைச்சரிடம் இருந்து குற்றப்புலனாய்வுத் திணைக்களம் முன்னதாக அனுமதி பெற்றிருந்தது.
இதனிடையே, போதுமான சான்றுகள் இன்றித் தனது கட்சிக்காரர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்து சுரேஷ் சலேயின் சட்டத்தரணிகள் நேற்று (04) நீதிமன்றில் நகர்த்தல் மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்தனர். இந்தத் தடுப்புக்காவல் உத்தரவை மேல் நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்துவதற்காக, வழக்கு தொடர்பான சான்றிதழ் பெற்ற பிரதிகளை வழங்குமாறும், அவரைச் சந்திப்பதற்கு மேலதிக நேரத்தை ஒதுக்குமாறும் அவர்கள் கோரியிருந்தனர்.
எனினும், சுரேஷ் சலேயின் கைது மற்றும் தடுப்புக்காவல் குறித்து குற்றப்புலனாய்வுத் திணைக்களம் அதுவரை நீதிமன்றிற்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்காத காரணத்தினால், மேலதிக கோரிக்கைகளை நீதவான் நிராகரித்திருந்தார்.
இந்த நிலையில், இன்று நீதிமன்றில் விடயங்களை முன்வைத்த குற்றப்புலனாய்வுத் திணைக்களம், வவுணதீவு பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பான விசாரணைகளைத் திசைதிருப்பியமை மற்றும் சாய்ந்தமருது வீட்டில் இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவங்கள் தொடர்பான 35882/24 இலக்க வழக்கின் மூன்றாவது சந்தேகநபராக சுரேஷ் சலே பெயரிடப்பட்டுள்ளதாக அறிவித்தது.
தற்போது தடுப்புக்காவலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வரும் சந்தேகநபரை, பொருத்தமான ஒரு தினத்தில் நேரில் வந்து பார்வையிடுமாறு குற்றப்புலனாய்வு அதிகாரிகள் நீதவானிடம் கோரிக்கை விடுத்தனர். இதற்கமைய, விரைவில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு விஜயம் செய்து சந்தேகநபரை அவதானிப்பதாக நீதவான் இதன்போது அறிவித்தார்.