முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் (CID) தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் தீர்ப்பு குறித்து, தாம் எவ்வித தனிப்பட்ட அக்கறையும் கொண்டிருக்கவில்லை என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் அண்மையில் நடைபெற்ற உயர்மட்டக் கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளதாக மூத்த ஊடகவியலாளர் சனத் பாலசூரிய தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
நீதிமன்றின் வரைவிலக்கணமே முக்கியம்:
இந்த வழக்கின் முடிவில் ரணில் விக்ரமசிங்க சிறை செல்வாரா அல்லது விடுதலையாவாரா என்பது தொடர்பில் தமக்கு விசேட ஆர்வம் இல்லை எனத் தெரிவித்துள்ள ஜனாதிபதி, இவ்வாறானதொரு விடயத்தில் ஜனாதிபதி ஒருவரின் பொது மற்றும் தனிப்பட்ட செயற்பாடுகள் குறித்து நீதிமன்றம் எவ்வாறான வரைவிலக்கணத்தை வழங்கப்போகின்றது என்பதைக் காண்பதிலேயே தாம் ஆர்வமாக உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
நீதி அமைச்சர், பொதுப்பாதுகாப்பு அமைச்சர், அமைச்சுக்களின் செயலாளர்கள், சட்டமா அதிபர் மற்றும் பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்துகொண்ட கூட்டத்திலேயே ஜனாதிபதி இந்த நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார்.
சட்டமா அதிபரின் சர்ச்சை கருத்து:
இதேவேளை, இந்தக் கூட்டத்தின் போது சட்டமா அதிபர் பாரிந்த ரணசிங்க (இளையவர்), லண்டனுக்கான முன்னாள் இலங்கை உயர்ஸ்தானிகர் சரோஜா சிறிசேன குறித்து வெளியிட்ட கருத்துக்கள் சபையில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளதாக சனத் பாலசூரிய சுட்டிக்காட்டியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் லண்டன் மற்றும் வூல்வர்ஹாம்டன் (Wolverhampton) விஜயம் தொடர்பான வழக்கின் முக்கிய சாட்சியாளராக சரோஜா சிறிசேன கருதப்படுகிறார். இந்த விஜயத்திற்கான அழைப்பு உத்தியோகபூர்வமானதல்ல என அவர் சாட்சியமளித்துள்ள நிலையில், அது குறித்துக் கருத்து வெளியிட்ட சட்டமா அதிபர், சரோஜா சிறிசேனவை மிகவும் தரம் குறைந்த சொற்பதங்களைப் பயன்படுத்தி (கிராமிய வழக்கில்) விளித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
விசாரணையில் அரசியல் அழுத்தம்:
ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான CID விசாரணைகளின் போது, முன்னாள் அரசியல் பிரமுகர்களான டிரான் அலஸ் மற்றும் ரோஹித போகொல்லாகம ஆகியோரிடமிருந்து சரோஜா சிறிசேனவிற்கு கடுமையான அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்ட போதிலும், அவர் உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளதாக ஊடகவியலாளர் சனத் பாலசூரிய தனது பதிவில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
சட்டமா அதிபரின் இத்தகைய தனிப்பட்ட ரீதியான விமர்சனங்கள் மற்றும் ஒருதலைப்பட்சமான நிலைப்பாடுகள், இந்த வழக்கின் நடுநிலைத்தன்மை குறித்து பாரிய கேள்விகளை எழுப்புவதாகவும் அந்தப் பதிவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.