'எங்களுக்கு தூக்கம் வரவில்லை: பயத்தால் தூங்க முடியவில்லை': ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு தப்பிச்செல்கின்றனர்!

'எங்களுக்கு தூக்கம் வரவில்லை: பயத்தால் தூங்க முடியவில்லை': ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு தப்பிச்செல்கின்றனர்!

பெய்ரூட் நகரின் தெற்கு பகுதிகளில் இஸ்ரேல் மேற்கொண்ட கடுமையான வான்வழித் தாக்குதல்களால் மக்கள் மத்தியில் கடும் அச்சமும் குழப்பமும் நிலவி வருகிறது.

வீடுகளை விட்டு வெளியேறுமாறு விடுக்கப்பட்ட இஸ்ரேலின் அவசர உத்தரவுகளைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளன.

லெபனான் நாட்டின் தெற்கு பகுதிகள் மற்றும் பெய்ரூட்டின் தெற்கு புறநகரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு, ஹெஸ்பொல்லா அமைப்புக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகள் காரணமாக வீடுகளை tிட்டு வெளியேறுமாறு இஸ்ரேல் அறிவித்துள்ளது. இவ்வாறு வழங்கப்பட்ட உத்தரவு அளவில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பெரியதாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

தங்குமிடங்களில் இடமின்றி தவித்த பல குடும்பங்கள் இரவு முழுவதும் வீதிகளிலும் அல்லது தங்களது வாகனங்களிலும் தங்கியிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில், பெய்ரூட்டின் டாஹியே (Dahieh) புறநகர் பகுதியில் இஸ்ரேல் இராணுவம் “பெரும் அளவிலான தாக்குதல்கள்” மேற்கொண்டதாக தெரிவித்துள்ளது.

அந்த தாக்குதல்களில் ஹெஸ்பொல்லா அமைப்பின் கட்டளை மையம் மற்றும் தாக்குதல்களுக்கு பயன்படுத்தப்பட்ட மனிதமற்ற விமானங்கள் (UAV) சேமிக்கப்பட்டிருந்த நிலையம் இலக்காக தாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

வீடுகளை விட்டு வெளியேறிய பொதுமக்கள் தங்கள் வீடுகள் தாக்குதலுக்கு உள்ளாகுமா, மீண்டும் எப்போது திரும்ப முடியும் என்ற அச்சத்தில் உள்ளனர்.

“குண்டு வெடிக்கும் சத்தங்களுக்கு நான் பழகி விட்டேன். வீடைவிட்டு செல்ல விரும்பவில்லை,” என்று தெற்கு பெய்ரூட்டில் இருந்து தப்பியோடிய மோனிரா ஹசன் கண்ணீருடன் கூறினார். அவர் தனது மகளுடன் மத்திய பெய்ரூட்டில் உள்ள பூங்காவில் தங்கியிருந்தார்.

“என்ன சொல்லுவது என்று தெரியவில்லை. நான் வீட்டிலேயே இருக்க விரும்பினேன்,” என அவர் கூறினார்.

இந்நிலை பலருக்கும் பழைய நினைவுகளை மீண்டும் எழுப்பியுள்ளது. இஸ்ரேல் ற்றும் ஹெஸ்பொல்லா இடையே நடந்த முந்தைய போரின் போது பலர் இதேபோல் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது. அந்தப் போரில் ஹெஸ்பொல்லா தலைமைத்துவத்தின் சிலர் கொல்லப்பட்டதுடன் பல போராளிகளும் உயிரிழந்தனர்; ஆயுதங்களும் அழிக்கப்பட்டன.

13 மாதங்கள் நீடித்த அந்தப் போர் 2024 நவம்பர் மாதத்தில் நிறுத்த ஒப்பந்தத்துடன் முடிவடைந்தாலும், அதன் பின்னரும் ஹெஸ்பொல்லா மீண்டும் இராணுவ திறனை உருவாக்க முயற்சிக்கிறது என்ற குற்றச்சாட்டில் இஸ்ரேல் லெபனானில் அடிக்கடி தாக்குதல்கள் மேற்கொண்டு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், இஸ்ரேலின் வலதுசாரி நிதி அமைச்சர் பெசலேல் ஸ்மோட்ரிக் (Bezalel Smotrich), டாஹியே பகுதி கான் யூனிஸ் நகரைப் போல அழிந்துவிடும் என்று எச்சரித்ததன் பின்னர் மக்கள் மத்தியில் அச்சம் மேலும் அதிகரித்துள்ளது. அந்த நகரம் காஸாபகுதியில் அமைந்துள்ளது மற்றும் முன்னர் நடைபெற்ற போரில் கடுமையாக சேதமடைந்தது.

பெய்ரூட்டின் பல பகுதிகளில் சிறுவர் குழந்தைகளுடன் தஞ்சம் புகுந்த குடும்பங்கள் மிகவும் கடினமான சூழ்நிலையில் வாழ்கின்றனர். இரண்டு மாத குழந்தையுடன் வந்திருந்த ஒரு பெண், அவசரமாக வெளியேறும் போது பாலைக் கொண்டு வர மறந்துவிட்டதாகவும், இரவில் குழந்தைகளை எவ்வாறு பாதுகாப்பாக வைத்திருக்கலாம் என்ற கவலையில் இருப்பதாகவும் தெரிவித்தார்.

அதேசமயம், நாட்டின் பல இடங்களில் அமைக்கப்பட்ட தற்காலிக தங்குமிடங்களில் சுமார் 96,000 பேர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெய்ரூட்டில் உள்ள தேசிய அரங்கில் (National Theatre) கூட மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு சில மெத்தைகள் மேடையை நோக்கி அமைக்கப்பட்ட பால்கனியில் பரப்பப்பட்டுள்ளன.

தெற்கு நகரமான Tyre இலிருந்து தப்பியோடிய 73 வயதான முகம்மது பய்தூன், தனது குடும்பத்தினருடன் அங்கு தங்கியுள்ளார்.

“இவர்கள் குறிப்பிட்ட இலக்கைச் சொல்லவில்லை. முழு பகுதிகளையே காலி செய்யச் சொல்கிறார்கள். எந்த இரக்கமும் இல்லை,” என்று அவர் கூறினார்.

“பல போர்களை நான் பார்த்திருக்கிறேன். ஆனால் இந்தப் போர் வேறுபட்டதாக உணரப்படுகிறது. இறுதியில் ஒரே ஒரு தரப்பே நிலைத்து நிற்கும் போல இருக்கிறது,” என்றும் அவர் தெரிவித்தார்.

இதற்கிடையில், டாஹியே பகுதியில் வசிக்கும் 14 வயதான டுனியா ஹஸபல்லா, “இந்த வாரம் மிகவும் பயங்கரமாக இருந்தது” என்று கூறினார்.

இஸ்ரேலின் வெளியேற்ற உத்தரவு வெளியானதும் அவரது குடும்பம் உடனடியாக வீடைவிட்டு வெளியேறி பெய்ரூட்டின் மத்திய பகுதிக்கு சென்றதாக அவர் கூறினார்.

“நேற்று இரவு எங்களுக்கு தூக்கம் வரவில்லை. பயத்தால் தூங்க முடியவில்லை. எங்கள் வீடு பாதுகாப்பாக இருக்கிறதா என்று தொடர்ந்து செய்திகளை பார்த்துக்கொண்டிருந்தோம்,” என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், பெய்ரூட்டில் தங்குமிடங்களில் பணிபுரியும் தன்னார்வலர்கள், தங்களிடம் உள்ள இடங்கள் ஏற்கனவே நிரம்பிவிட்டதாகவும், உணவு மற்றும் உதவிப்பொருட்கள் விரைவில் தீர்ந்துவிடும் அபாயம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், Nawaf Salam தலைமையிலான லெபனான் அரசு, மக்கள் பெருமளவில் இடம்பெயர்ந்துள்ளதால் “மனிதாபிமான பேரழிவு உருவாகும் அபாயம் உள்ளது” என்று எச்சரித்துள்ளது.

மேலும் Emmanuel Macron, நிலைமை மிகப்பெரிய ஆபத்தை உருவாக்கக்கூடும் எனக் கவலை வெளியிட்டுள்ளார்.

“இந்த நாடு மீண்டும் போருக்குள் இழுக்கப்படாமல் தடுக்க அனைத்தும் செய்யப்பட வேண்டும். ஹெஸ்பொல்லா உடனடியாக இஸ்ரேல்மீது தாக்குதலை நிறுத்த வேண்டும். அதேபோல் இஸ்ரேலும் லெபனான் நிலப்பரப்பில் பெரிய அளவிலான நடவடிக்கைகளைத் தவிர்க்க வேண்டும்,” என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், பெய்ரூட்டின் வீதிகளில் தஞ்சம் புகுந்த மக்கள் அடுத்ததாக என்ன நடைபெறும் என அச்சத்துடன் காத்திருக்கின்றனர்.

“லெபனானுக்கு இன்னொரு போர் தொடங்குவதற்கு இது மிகவும் விரைவான நேரம்,” என்று 14 வயதான டுனியா கூறினார்.

Radio Logo
Puthiya Kural Radio
Voice of Tamil People – Toronto, Canada
வானொலி