இலங்கை கடற்பரப்பிற்கு அருகே மூழ்கடிக்கப்பட்ட ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டவர்கள் மற்றும் தற்போது இலங்கையின் பாதுகாப்பில் உள்ள இரண்டாவது ஈரானியக் கப்பலின் பணியாளர்கள் ஆகியோரை மீண்டும் ஈரானுக்குத் திருப்பி அனுப்ப வேண்டாம் என அமெரிக்கா, இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து வருகின்றது.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உள்வாரித் தகவல் பரிமாற்றங்களை மேற்கோள்காட்டி ராய்ட்டர்ஸ் செய்திச் சேவை இன்று (வெள்ளிக்கிழமை) இதனைத் தெரிவித்துள்ளது.
கடந்த புதன்கிழமை, இலங்கையின் தென் மாகாணத்திலுள்ள காலி துறைமுகத்திலிருந்து சுமார் 19 கடல் மைல் தொலைவில் உள்ள இந்தியப் பெருங்கடல் பகுதியில், ஈரானுக்குச் சொந்தமான 'ஐ.ஆர்.ஐ.எஸ் டெனா' (IRIS Dena) என்ற போர்க்கப்பல் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலினால் தாக்கப்பட்டு மூழ்கடிக்கப்பட்டது. இந்தத் தாக்குதலில் பல டஜன் கணக்கான ஈரானிய மாலுமிகள் உயிரிழந்தனர்.
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் அமெரிக்காவினால் முன்னெடுக்கப்பட்ட இவ்வாறான முதலாவது நேரடித் தாக்குதல் இதுவென அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் வர்ணித்துள்ளார்.
இதேவேளை, இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயத்திற்குள் சிக்குண்டிருந்த ஈரானின் 'ஐ.ஆர்.ஐ.எஸ் பூஷெஹ்ர்' (IRIS Booshehr) என்ற மற்றுமொரு துணைப் போர்க்கப்பலில் இருந்த 208 பணியாளர்களைத் தரையிறக்கும் பணிகளை இலங்கை நேற்று ஆரம்பித்திருந்தது.
இது குறித்து கருத்து வெளியிட்டிருந்த ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, குறித்த பணியாளர்களைப் பொறுப்பேற்பது ஒரு "மனிதநேயக் கடமை" எனத் தெரிவித்திருந்தார்.
எனினும், கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் வர்த்தகப் பிரதிநிதி ஜேன் ஹொவெல், இலங்கை அரசாங்கத்திடம் விடுத்துள்ள விசேட கோரிக்கையில், பூஷெஹ்ர் கப்பல் பணியாளர்களையோ அல்லது டெனா கப்பலில் உயிர் பிழைத்த 32 பேரையோ ஈரானுக்குத் திருப்பி அனுப்பக் கூடாது என வலியுறுத்தியுள்ளார்.
"தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை ஈரான் தனது பரப்புரை (Propaganda) நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்துவதை இலங்கை அதிகாரிகள் தவிர்க்க வேண்டும்" என அந்த இரகசியத் தகவல் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த இரண்டாவது கப்பலான பூஷெஹ்ர், மோதல் காலம் முடியும் வரை இலங்கையின் பாதுகாப்பில் இருக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது. தற்போது இக்கப்பல் கிழக்குக் கரையோரத் துறைமுகமொன்றுக்கு அழைத்துச் செல்லப்படுவதுடன், அதன் பணியாளர்கள் கொழும்புக்கு அருகிலுள்ள கடற்படை முகாம் ஒன்றிற்கு மாற்றப்பட்டு வருகின்றனர்.
இதேவேளை, பலியான மாலுமிகளின் உடல்களைத் திருப்பி அனுப்புவதற்கு ஈரான் கோரிக்கை விடுத்துள்ள போதிலும், அதற்கான காலக்கெடு எதுவும் இதுவரை தீர்மானிக்கப்படவில்லை என ஊடகத்துறை பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனி தெரிவித்துள்ளார்.