நடுக்கடலில் நரகவேதனை: ஈரானியப் பிரதிநிதிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் நடந்த உடற்கூற்றுப் பரிசோதனைகளில் வெளியான அதிர்ச்சியூட்டும் தகவல்கள்!

நடுக்கடலில் நரகவேதனை: ஈரானியப் பிரதிநிதிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் நடந்த உடற்கூற்றுப் பரிசோதனைகளில் வெளியான அதிர்ச்சியூட்டும் தகவல்கள்!

ஐ.ஆர்.ஐ.எஸ் டெனா கப்பல் மூழ்கடிக்கப்பட்டதன் பின்னணியில், இலங்கையின் வைத்தியர்கள் மற்றும் கடற்படையினர் மேற்கொண்ட இரகசிய மனிதாபிமான நடவடிக்கை குறித்த ஒரு பார்வை.

2026 மார்ச் முதல் வாரத்தில் இலங்கையின் தென்கடல் பகுதியில் அரங்கேறிய நிகழ்வு, வெறும் கடற்படை மோதல்களின் மற்றுமொரு அத்தியாயம் மட்டுமல்ல. இது, சர்வதேச அரசியலின் மோதல் களத்தில் இருந்து புவியியல் ரீதியாகத் தொலைவில் உள்ள ஒரு சிறிய தீவு நாட்டை, நவீன கடற்போர் விளைவித்த கோரமான மனிதப் பேரழிவை கையாள வேண்டிய இக்கட்டான நிலைக்குத் தள்ளிய ஒரு தருணமாகும்.

70-க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்ற இந்தியக் கடற்படைப் பயிற்சியை முடித்துவிட்டுத் திரும்பிக்கொண்டிருந்த ஈரானியப் போர்க் கப்பலான 'ஐ.ஆர்.ஐ.எஸ் டெனா' (IRIS Dena), தனது தாய்நாட்டை சென்றடையவில்லை. மாறாக, அமெரிக்காவின் நீர்மூழ்கிக் கப்பல் தாக்குதலினால் அது நடுக்கடலில் ஜலசமாதியானது.

இந்தத் தாக்குதலில் 140க்கும் மேற்பட்ட மாலுமிகள் கொல்லப்பட்டனர் அல்லது காணாமல் போயினர். இதனைத் தொடர்ந்து வந்த நாட்களில், இலங்கை தனது வரலாற்றிலேயே மிக நுணுக்கமான மனிதாபிமான மற்றும் சட்ட-மருத்துவ (Medico-legal) நடவடிக்கையொன்றை முன்னெடுத்தது.

தாக்குதல் நடந்து சுமார் மூன்று நாட்களாக, மீட்பு நடவடிக்கைகள் அதீத கட்டுப்பாட்டுடன் முன்னெடுக்கப்பட்டன. எவ்வித புகைப்படங்களோ, காணொளிகளோ அல்லது அடிப்படைத் தகவல்களோ பொதுவெளிக்கு கசியவிடப்படவில்லை. மீட்பு மற்றும் அடையாளங்காணும் முதற்கட்டப் பணிகள் முடியும் வரை இந்த மௌனம் காக்கப்பட்டது.

இது தற்செயலானது அல்ல; தூதரக ரீதியான சிக்கல்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் கண்ணியம் காக்கப்பட வேண்டும் என்ற நன்னெறி அடிப்படையிலேயே இந்தத் தகவல் முடக்கம் (Information Embargo) அதிகாரிகளால் கடைபிடிக்கப்பட்டது.

இன்றைய உலக ஊடகங்கள் உடனடித் தகவல்களுக்காகவும் காட்சிகளுக்காகவும் ஏங்கிக்கொண்டிருக்கும் வேளையில், எவ்வித ஆரவாரமுமின்றி உயிரிழந்தவர்களின் உடல்களைக் கையாள்வதில் இலங்கை அதிகாரிகள் காட்டிய நிதானம் ஒரு அரிதான முன்னுதாரணமாகப் பார்க்கப்படுகிறது.

உயிரிழப்புகளின் எண்ணிக்கை இலங்கையின் தடயவியல் மற்றும் மருத்துவக் கட்டமைப்பிற்கு ஒரு பாரிய சவாலாக அமைந்தது. நூற்றுக்கணக்கான மாலுமிகள் இருந்த அக்கப்பலில் உயிர் பிழைத்தவர்கள் மிகச்சிலரே. அவர்களும் வெடிப்புச் சம்பவத்தினால் ஏற்பட்ட கடுமையான அதிர்ச்சி மற்றும் கடலினுள் மூழ்கியதால் ஏற்பட்ட உடல் பாதிப்புகளுக்கு உள்ளாகியிருந்தனர்.

சுமார் 22 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட, மட்டுப்படுத்தப்பட்ட தடயவியல் வசதிகளைக் கொண்ட இலங்கை, 1980களின் பிற்பகுதியில் இந்திய அமைதிப்படை நிலைகொண்டிருந்த காலத்திற்குப் பிறகு, வெளிநாட்டு இராணுவத்தினரின் இவ்வளவு பெரிய அளவிலான உயிரிழப்புகளை எதிர்கொள்வது இதுவே முதல் முறையாகும்.

உயிரைப் பாதுகாத்தல் மற்றும் உயிரிழந்தவர்களின் உடல்களைச் சட்டரீதியான ஆவணப்படுத்தலுடன் கண்ணியமாகப் பாதுகாத்தல் ஆகிய இரு பெரும் பொறுப்புகளையும் இலங்கையின் வைத்தியர்களும், கடற்படையினரும் எவ்வித விளம்பரமுமின்றி அமைதியாக நிறைவேற்றி வருகின்றனர்.

ஈரானியப் போர்க்கப்பல் மீதான தாக்குதலைத் தொடர்ந்து, காயமடைந்தவர்களைக் காப்பற்றவும், உயிரிழந்தவர்களின் உடல்களைக் கண்ணியமாகப் பாதுகாக்கவும் இலங்கையின் தென் பிராந்திய வைத்திய நிபுணர்களும் கடற்படையினரும் முன்னெடுத்த அதிரடி மனிதாபிமான நடவடிக்கைகள் குறித்த திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

2026 மார்ச் 4ஆம் திகதி புதன்கிழமை காலை 9.30 மணியளவில், காலி கடற்பரப்பில் இருந்து 20 கடல் மைல் தொலைவில் பாரிய அசம்பாவிதம் ஒன்று நிகழ்ந்துள்ளதாகக் கடற்படைத் தலைமையகத்திலிருந்து காலி போதனா வைத்தியசாலைக்கு (தற்போது காலி புதிய தேசிய வைத்தியசாலை என அழைக்கப்படுகிறது) அவசரத் தகவல் வழங்கப்பட்டது.

பெருமளவிலான உயிரிழப்புகளும், காயமடைந்தவர்களும் கொண்டுவரப்படலாம் என்ற அந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து, வைத்தியசாலை நிர்வாகம் உடனடியாக 'அவசரகால நிலையை' (Emergency Protocol) அறிவித்தது.

ருஹுணு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் தடயவியல் மருத்துவத் துறையின் ஒத்துழைப்புடன், வைத்தியர்கள், தாதிகள் மற்றும் பிரேத அறை ஊழியர்கள் என அனைவரும் தயார் நிலையில் வைக்கப்பட்டனர்.

அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலின் தாக்குதலுக்குள்ளான 'டெனா' கப்பல் சிதைந்து போயிருந்த நிலையில், இலங்கை கடற்படையினர் அலைகளுக்கு மத்தியில் மீட்புப் பணிகளை ஆரம்பித்தனர். வெடிப்புச் சம்பவங்களால் ஏற்படும் பாதிப்புகள், கட்டமைப்புச் சிதைவுகளால் ஏற்படும் காயங்கள் மற்றும் நீரில் மூழ்கியதால் ஏற்பட்ட மூச்சுத்திணறல் எனப் பல்வேறு நிலைகளில் மாலுமிகள் மீட்கப்பட்டனர்.

கடற்படை மருத்துவக் குழுவினர் நடுக்கடலிலேயே முதலுதவி சிகிச்சைகளை (Triage) வழங்கினர். உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தவர்களைப் பிரித்தெடுத்து அவர்களுக்கு உயிர்காக்கும் சிகிச்சைகளை வழங்கிய அதேவேளை, உயிரிழந்தவர்களின் உடல்களையும் மீட்டெடுத்தனர்.

"கடந்த மூன்று நாட்களாக என்னால் கண் இமைக்கக்கூட முடியவில்லை" என மூத்த வைத்திய அதிகாரி ஒருவர் தனது அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார். நூற்றுக்கணக்கான வைத்தியர்கள், தடயவியல் வல்லுநர்கள், கடற்படை மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இடைவிடாது சுழற்சி முறையில் இந்தப் பணியில் ஈடுபட்டனர்.

பிற்பகல் வேளையில் காலி துறைமுகத்திற்கு முதல் தொகுதி மாலுமிகள் கொண்டு வரப்பட்டனர். இதன்போது, உயிரிழந்தவர்களை விடக் காயமடைந்தவர்களுக்கு முதலிடம் வழங்கப்பட வேண்டும் என்ற மருத்துவக் கோட்பாட்டின் அடிப்படையில் (Preservation of life over examination of death), காயமடைந்தவர்கள் உடனடியாக வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.

அதிர்ஷ்டவசமாக, நான்கு மாலுமிகள் எவ்வித காயமுமின்றி உயிர் தப்பியிருந்தாலும், ஏனையோர் மண்டையோட்டுப் பிளவு, உள் உறுப்புகள் பாதிப்பு மற்றும் எலும்பு முறிவுகளுடன் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு அவசர சத்திரசிகிச்சைகள் எவ்வித தாமதமுமின்றி மேற்கொள்ளப்பட்டன.

பொதுமக்களிடையே அச்சம் பரவாமல் இருக்கவும், சட்ட-மருத்துவ நடைமுறைகளைச் சரியாகப் பின்பற்றவும் உயிரிழந்தவர்களின் உடல்கள் தற்காலிகமாகத் துறைமுகப் பகுதியிலேயே வைக்கப்பட்டன. ஒவ்வொரு சடலமும் முறையாகப் பட்டியலிடப்பட்டு, சிதைவடைவதைத் தடுக்க குளிரூட்டப்பட்ட வசதிகள் தயார் செய்யப்பட்ட பின்னரே அவை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டன.

தற்போது வரை, இலங்கையின் மருத்துவக் குழுவினர் இந்த மனிதாபிமானப் பணியை சர்வதேசத் தரத்திற்கு அமைய மிகவும் நிதானமாகவும் அர்ப்பணிப்புடனும் கையாண்டு வருகின்றனர்.

ஈரானியப் போர்க்கப்பல் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உடல்களைப் பாதுகாப்பதில் காலி புதிய தேசிய வைத்தியசாலை (கராப்பிட்டிய) பாரிய உட்கட்டமைப்பு சவால்களை எதிர்கொண்டதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.

வைத்தியசாலையின் பிணவறை (Mortuary) சாதாரண மரணங்களைக் கையாளுவதற்கே வடிவமைக்கப்பட்டதாகும். அங்குள்ள 40 குளிரூட்டி அறைகளில், பராமரிப்புப் பணிகள் காரணமாக வெறும் 10 அறைகள் மாத்திரமே பயன்பாட்டில் இருந்தன. 80-க்கும் மேற்பட்ட சடலங்கள் ஒரே நேரத்தில் கொண்டுவரப்பட்ட நிலையில், அவற்றைப் பாதுகாப்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டது.

மார்ச் 4ஆம் திகதி இரவு முதல் தொகுதி சடலங்கள் கொண்டுவரப்பட்டபோது, அவற்றை இடுவதற்குத் தேவையான 'உடல் உறைகள்' (Body bags) வைத்தியசாலையிடம் இருக்கவில்லை. வைத்தியசாலையிடம் வெறும் இரண்டு உறைகளே இருந்தன. கடற்படையிடமும் மேலதிக கையிருப்பு இருக்கவில்லை.

இறுதியில், மருத்துவ பீடத்தின் தடயவியல் துறையிடம் இருந்த அமெரிக்கத் தயாரிப்பு உடல் உறைகள் சில கண்டுபிடிக்கப்பட்டுப் பயன்படுத்தப்பட்டன. எனினும், அவை போதுமானதாக இருக்கவில்லை.

பிணவறையில் இடவசதி இல்லாத காரணத்தினால், அருகிலிருந்த மனநலப் பிரிவு (Psychiatric ward) தற்காலிகமாகச் சடலங்களை வைக்கும் இடமாக மாற்றப்பட்டது. அங்கிருந்த ஜன்னல்கள் மற்றும் கதவுகள் அகற்றப்பட்டு, உடல்களை வரிசையாக அடுக்கி வைப்பதற்கு ஏதுவாக அந்தப் பகுதி தயார் செய்யப்பட்டது. ஒரு பாரிய அனர்த்தத்தின் போது நிலவும் யதார்த்தமான நெருக்கடியை இந்தச் சூழல் வெளிப்படுத்தியது.

சடலங்கள் அழுகுவதைத் தடுக்கத் தேவையான 'உலர் ஐஸ்' (Dry Ice) இலங்கையில் போதியளவு கையிருப்பில் இல்லை. வெளிநாட்டிலிருந்து அவற்றைத் தருவிக்கப் பல நாட்கள் எடுக்கும் என்பதால், அதிகாரிகள் மாற்று வழியைக் கையாண்டனர்.

காலி மீன்பிடித் துறைமுகத்தில் மீன்களைப் பாதுகாக்கப் பயன்படுத்தப்படும் சாதாரண ஐஸ் கட்டிகளைப் பயன்படுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டது. இதற்கான முதற்கட்டச் செலவான 25,000 ரூபாவை வைத்தியசாலை ஊழியர்களே தங்களுக்குள் திரட்டி வழங்கியமை நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த ஐஸ் கட்டிகள் சிறு துண்டுகளாக உடைக்கப்பட்டு, உடல் உறைகளுக்கு இடையே வைக்கப்பட்டுச் சடலங்கள் அழுகாமல் பாதுகாக்கப்பட்டன. உருகும் ஐஸ் கட்டிகளுக்கு மத்தியில், மங்கலான வெளிச்சத்தில் அந்தத் தற்காலிக மண்டபம் ஒரு சோகமான சூழலை வெளிப்படுத்தியது.

சட்டச் சிக்கல்களுக்கு மத்தியில் ஆரம்பமான உடற்கூற்றுப் பரிசோதனைகள்: ஈரானிய மாலுமிகளின் மரணத்தில் வெளிப்பட்ட கொடூர உண்மைகள்

மார்ச் 5ஆம் திகதி காலை முதல், ஈரானிய மாலுமிகளின் மரணம் குறித்த சட்ட ரீதியான மற்றும் மருத்துவ ரீதியான விசாரணைகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டன.

இலங்கைச் சட்டத்தின்படி, வன்முறை அல்லது சந்தேகத்திற்கிடமான மரணங்கள் ஏற்பட்டால் உடற்கூற்றுப் பரிசோதனை (Autopsy) செய்யப்படுவது கட்டாயமாகும். உயிரிழந்தவர்கள் வெளிநாட்டு இராணுவத்தினர் என்ற போதிலும், இந்தச் சட்ட நடைமுறையிலிருந்து விலக்கு அளிக்க முடியாது என இலங்கை அதிகாரிகள் உறுதியாகத் தெரிவித்தனர்.

எனினும், இஸ்லாமிய மத மரபுகளில் உடலைச் சிதைக்கும் உடற்கூற்றுப் பரிசோதனைகள் பொதுவாகத் தவிர்க்கப்படுவதால், ஈரானியப் பிரதிநிதிகள் ஆரம்பத்தில் இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதங்கள் ஏற்பட்டன.

எவ்வாறாயினும், எதிர்கால சர்வதேச சட்ட நடவடிக்கைகளுக்கு மரணத்திற்கான சரியான காரணத்தை ஆவணப்படுத்துவது அவசியம் என்பதால், காலி நீதவானின் அனுமதியுடன் பரிசோதனைகள் ஆரம்பிக்கப்பட்டன.

மார்ச் 5ஆம் திகதி மாலை வேளையில் ஆரம்பமான இந்தப் பணிகளை, ருஹுணு பல்கலைக்கழகத்தின் தடயவியல் மருத்துவத் துறைப் பேராசிரியரும், இலங்கை சட்ட மருத்துவக் கல்லூரியின் தலைவருமான பேராசிரியர் கிளிஃபோர்ட் பெரேரா தலைமையிலான குழுவினர் முன்னெடுத்தனர்.

இவர்களுடன் பேராசிரியர்களான அஜித் ரத்னவீர, ஜானகி வருஷஹென்னடி மற்றும் தடயவியல் மருத்துவப் பயிற்சி வைத்தியர்கள் பலரும் இணைந்துகொண்டனர்.

இந்த மாபெரும் நடவடிக்கையில் மூன்று முக்கிய பிரிவுகள் களமிறக்கப்பட்டன:

மருத்துவக் குழு: 15 வைத்தியர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள்.

பொலிஸ் குழு: தடய அறிவியல் அதிகாரிகள் (SOCO) மற்றும் கைரேகை நிபுணர்கள் உட்பட சுமார் 40 அதிகாரிகள்.

கடற்படை மற்றும் நிர்வாகம்: சடலங்களைக் கொண்டு வருதல் மற்றும் ஏனைய வசதிகளைச் செய்தல்.

ஒட்டுமொத்தமாக நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் காலி நீதவானின் மேற்பார்வையின் கீழ் ஒருங்கிணைக்கப்பட்டு இந்தப் பணியில் ஈடுபட்டனர்.

மூன்று குழுக்களாகப் பிரிக்கப்பட்ட வைத்தியர்கள், ஒரே நேரத்தில் தலா மூன்று உடல்களைப் பரிசோதனை செய்தனர். இந்தப் பரிசோதனைகளின் போது மாலுமிகளின் மரணம் குறித்த கொடூரமான உண்மைகள் வெளிவந்தன:

வெடிப்பு அதிர்ச்சி: கப்பலுக்குள் ஏற்பட்ட பாரிய வெடிப்பினால் மாலுமிகளின் மண்டையோடுகள் மற்றும் கழுத்து எலும்புகள் உடைந்திருந்தன.

உள் உறுப்பு பாதிப்பு: மார்பு மற்றும் வயிற்றுப் பகுதிகளில் பாரிய இரத்தக் கசிவுகள் காணப்பட்டன.

நீரில் மூழ்கி மரணம்: பல மாலுமிகள் வெடிப்புச் சம்பவத்தின் போது உடனடியாக உயிரிழக்கவில்லை என்பது கண்டறியப்பட்டது. அவர்களின் நுரையீரலில் நுரை கலந்த நீர் காணப்பட்டமை, அவர்கள் காயங்களுடன் கடலில் விழுந்து, பின்னர் நீரில் மூழ்கியே உயிரிழந்துள்ளனர் என்பதை உறுதிப்படுத்தியது.

ஒவ்வொரு காயமும், ஒவ்வொரு எலும்பு முறிவும் மிகவும் துல்லியமாக ஆவணப்படுத்தப்பட்டது. இவ்வளவு பாரிய அளவிலான உயிரிழப்புகளை, மட்டுப்படுத்தப்பட்ட வசதிகளுக்கு மத்தியிலும் இலங்கை மருத்துவக் குழுவினர் கையாண்ட விதம் சர்வதேச மட்டத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஈரானியப் போர்க்கப்பல் மீதான தாக்குதலில் உயிரிழந்த மாலுமிகளின் உடல்களைக் கையாளும் பாரிய சவாலை, இலங்கை மருத்துவ மற்றும் தடயவியல் துறையினர் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளனர்.

மார்ச் 5ஆம் திகதி இரவு முழுவதும் உறக்கமின்றிச் செயற்பட்ட மருத்துவக் குழுவினர், மார்ச் 6ஆம் திகதி அதிகாலை 4.45 மணியளவில் 84ஆவது உடற்கூற்றுப் பரிசோதனையை நிறைவு செய்தனர். எவ்வித ஓய்வுமின்றி, சுழற்சி முறையில் செயற்பட்ட 100க்கும் மேற்பட்ட பணியாளர்களின் அர்ப்பணிப்பு இதில் அளப்பரியது.

மரணங்களுக்கான முக்கிய காரணங்களாக, கப்பல் சிதைந்தபோது ஏற்பட்ட பாரிய காயங்கள் மற்றும் அதன் பின்னரான நீரில் மூழ்கியமை (Drowning) ஆகியவையே தடயவியல் நிபுணர்களால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

வைத்தியசாலையின் பிணவறை வசதி போதாமையினால் ஏற்பட்ட நெருக்கடிக்குத் தீர்வாக, தலா 40 அடி நீளம் கொண்ட இரண்டு குளிரூட்டப்பட்ட கொள்கலன்கள் (Refrigerated Containers) கொண்டுவரப்பட்டன.

சுமார் 35 இலட்சம் ரூபா பெறுமதியான ஒரு கொள்கலனை அரசாங்கம் வழங்கிய அதேவேளை, மற்றையதை காலியில் உள்ள முஸ்லிம் சமூகத்தினர் மனிதாபிமான அடிப்படையில் நன்கொடையாக வழங்கினர். ஐஸ் கட்டிகளுக்கு மத்தியில் வைக்கப்பட்டிருந்த சடலங்கள், பின்னர் இந்தக் குளிரூட்டப்பட்ட அலகுகளுக்குள் பாதுகாப்பாக மாற்றப்பட்டன.

இந்தச் சம்பவம் குறித்து கருத்துத் தெரிவித்த ருஹுணு பல்கலைக்கழக பேராசிரியர் கிளிஃபோர்ட் பெரேரா, நாட்டின் அனர்த்த முகாமைத்துவக் கட்டமைப்பில் உள்ள பலவீனங்களைச் சுட்டிக்காட்டினார்.

"அனர்த்த முகாமைத்துவப் பிரிவுகள் காகித அளவில் மட்டுமே உள்ளன. பல அலகுகள் அலுவலக நேரங்களில் மட்டுமே இயங்குகின்றன. இரவு நேரங்களில் அல்லது விடுமுறை நாட்களில் ஒரு அனர்த்தம் நிகழும்போது, தனித்தனியாக அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு அழைக்க வேண்டிய நிலையே இன்றும் நீடிக்கிறது," என அவர் கவலையுடன் தெரிவித்தார்.

2004 சுனாமிப் பேரழிவின் கசப்பான பாடங்களுக்குப் பின்னரும், ஒரு பாரிய அனர்த்தத்தை எதிர்கொள்வதற்கான தயார்நிலையில் இன்னும் பாரிய இடைவெளிகள் இருப்பதை இந்தச் சம்பவம் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

இந்த முழு நடவடிக்கையிலும் மிக முக்கியமான அம்சம் யாதெனில், உயிரிழந்தவர்கள் இலங்கை பிரஜைகள் அல்லர். அவர்கள் உலக அரசியலில் சிக்கலான உறவுகளைக் கொண்ட ஒரு நாட்டைச் சேர்ந்தவர்கள். இருந்தபோதிலும், இலங்கை அதிகாரிகள் அவர்களை வெறும் 'இராணுவ வீரர்களாக' பார்க்காமல், கௌரவமான முறையில் கையாளப்பட வேண்டிய 'மனிதர்களாக' கருதிச் செயற்பட்டனர்.

தமது தேசத்திற்குச் சம்பந்தமில்லாத ஒரு போரின் கோர விளைவுகளை, இலங்கையின் வைத்தியர்களும் தடயவியல் வல்லுநர்களும் மருத்துவ அறத்துடனும், மனிதாபிமானத்துடனும் கையாண்டு முடித்துள்ளனர்.

யுத்தம் ஓய்ந்த பின்னர் நிலவும் ஒரு மிகக் கொடூரமான யதார்த்தத்தை—அதாவது, வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் அந்த மௌனமான சடலங்களை—மீட்புப் பணியாளர்கள் எதிர்கொண்டனர்.

அரசியல் மேடைகளில் முழங்கப்படும் வீர வசனங்களைப் போல, இவர்களது பணி பகட்டான ஒன்றாகத் தெரியாமல் இருக்கலாம். ஆனால், அது மிகவும் நேர்த்தியான, களைப்பூட்டுகின்ற மற்றும் பல சந்தர்ப்பங்களில் மனதை உலுக்கக்கூடிய ஒரு பணியாகும்.

எதிரியோ, நண்பனோ அல்லது முன்பின் தெரியாத அந்நியனோ—யுத்தக் களத்தில் கொல்லப்பட்ட ஒவ்வொரு மாலுமியும் உரிய முறையில் பரிசோதிக்கப்பட்டு, அவர்களது விபரங்கள் ஆவணப்படுத்தப்பட்டு, கௌரவமான முறையில் அவர்கள் பாதுகாக்கப்படுவதை இந்தப் பணியாளர்கள் உறுதி செய்தனர்.

போரின் வெற்றிச் செய்திகளுக்குப் பின்னால் மறைந்து போகும் இத்தகைய மனிதாபிமானப் பணிகள், காலியின் கடற்கரையோரத்தில் அமைதியாக அரங்கேறின.

Radio Logo
Puthiya Kural Radio
Voice of Tamil People – Toronto, Canada
வானொலி