'ஈரானியக் கடற்படையினர் தொடர்பில் இறுதி முடிவெடுக்கும் அதிகாரம் இலங்கை வசம்: இறைமைக்கு மதிப்பளிப்பதாக அமெரிக்கா அறிவிப்பு!'

'ஈரானியக் கடற்படையினர் தொடர்பில் இறுதி முடிவெடுக்கும் அதிகாரம் இலங்கை வசம்: இறைமைக்கு மதிப்பளிப்பதாக அமெரிக்கா அறிவிப்பு!'

ஈரானியக் கப்பல்கள் தொடர்பான நிலைமைகளைக் கையாள்வதில் இலங்கையின் இறைமைக்கு (Sovereignty) வொஷிங்டன் மதிப்பளிப்பதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், 'IRIS Bushehr' கப்பல், அதன் பணியாளர்கள் மற்றும் மீட்கப்பட்ட ஈரானியக் கடற்படையினர் தொடர்பிலான இறுதித் தீர்மானத்தை எடுக்கும் அதிகாரம் இலங்கையின் உள்நாட்டுச் சட்டங்கள் மற்றும் சர்வதேச சட்டக் கடப்பாடுகளுக்கு இணங்க குள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இலங்கையின் தெற்குக் கடற்பரப்பில் வைத்துத் தாக்கி மூழ்கடிக்கப்பட்ட ஈரானியப் போர்க்கப்பலான 'IRIS Dena', தாக்குதல் நடத்தப்பட்ட போது ஆயுதங்கள் அற்ற நிலையில் இருந்ததாக ஈரான் முன்வைத்த கோரிக்கையை அமெரிக்காவின் இந்தோ-பசிபிக் கட்டளைப் பணியகம் (U.S. Indo-Pacific Command) நிராகரித்துள்ளது.

தனது உத்தியோகபூர்வ சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், குறித்த போர்க்கப்பல் ஆயுதங்கள் அற்ற நிலையில் இருந்ததாக ஈரான் கூறுவது "முற்றிலும் பொய்யானது" என அமெரிக்க கட்டளைப் பணியகம் தெரிவித்துள்ளது.

ஆயுத மோதல்கள் தொடர்பான சர்வதேச சட்டத்தின் (Law of Armed Conflict) கீழ், செல்லுபடியாகும் இராணுவ இலக்குகளுக்கு எதிராக பலத்தைப் பிரயோகிப்பதற்கு அனுமதி உண்டு எனத் தெரிவித்துள்ள அமெரிக்கப் தரப்பு, இந்த இராணுவ நடவடிக்கை அமெரிக்கப் படைகளாலேயே திட்டமிடப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளது.

மேலும், இச்சம்பவத்தைத் தொடர்ந்து காயமடைந்த மற்றும் தப்பிப்பிழைத்த கடற்படையினருக்கு ஆயுத மோதல்கள் சட்டத்தின் விதிகளுக்கு அமைய, இலங்கை உயிர் காக்கும் உதவிகளை வழங்கியதாகவும் அமெரிக்க இந்தோ-பசிபிக் கட்டளைப் பணியகம் சுட்டிக்காட்டியுள்ளது.

அமெரிக்காவினால் உரிமை கோரப்பட்ட இந்தத் தாக்குதலில், ஈரானிய கடற்படைக் கப்பலான 'IRIS Dena' இந்த வார முற்பகுதியில் காலி கடற்பரப்பிற்கு அப்பால் மூழ்கியது.

சம்பவத்தையடுத்து, இலங்கை கடற்படையினர் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளை முன்னெடுத்து பல கடற்படையினரை மீட்டெடுத்ததுடன், அவர்கள் சிகிச்சைக்காக காலியில் உள்ள கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இந்தத் தாக்குதலில் சுமார் 100 ஈரானிய கடற்படையினர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும், தாக்குதலுக்குள்ளான IRIS Dena கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று குணமடைந்த 22 கடற்படையினர் கொக்கல விமானப்படைத் தளத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த மார்ச் 4ஆம் திகதி காலி துறைமுகத்திலிருந்து சுமார் 40 கடல் மைல் தொலைவில் விபத்துக்குள்ளான ஈரானிய கடற்படைக்குச் சொந்தமான இக்கப்பலில் இருந்த 35 பேரை இலங்கை கடற்படையின் மீட்புக்குழுவினர் கரைக்கு அழைத்து வந்திருந்தனர்.

அவர்கள் சிகிச்சைக்காக காலி, கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் 10 பேர் தொடர்ந்தும் அங்கு தங்கி சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

IRIS Dena கப்பல் மீதான தாக்குதலில் உயிரிழந்த 84 ஈரானிய கடற்படையினரின் சடலங்கள் மீதான மரண பரிசோதனைகள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் காலி தேசிய வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்டன. இதேவேளை, வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் ஈரானிய கடற்படையினரில் 8 பேர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவின் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 'மிலான் 2026' (MILAN 2026) கூட்டு கடற்படைப் பயிற்சியில் பங்கேற்பதற்காகச் சென்றிருந்த ஈரானிய கடற்படைக்குச் சொந்தமான மூன்று கப்பல்களில் ஒன்றான 'IRIS Bushehr' போர்க்கப்பல், அண்மையில் பாணந்துறைக்கு அப்பாலுள்ள இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயத்திற்குள் (EEZ) வருகை தந்திருந்தது.

அதற்கமைய, கடந்த மார்ச் 5ஆம் திகதி இரவு அக்கப்பலின் ஊழியர்கள் உள்ளிட்ட 204 கடற்படையினரை இலங்கை கடற்படையினர் கொழும்பு துறைமுகத்திற்கு அழைத்து வந்தனர். அவர்களுள் 53 அதிகாரிகள், 54 கெடட் (Cadet) அதிகாரிகள், 48 சிரேஷ்ட கடற்படையினர் மற்றும் 23 கடற்படையினர் உள்ளடங்கியிருந்தனர். இவ்வாறு கரைக்கு அழைத்து வரப்பட்ட கடற்படையினர் வெலிசர கடற்படைத் தளத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

Radio Logo
Puthiya Kural Radio
Voice of Tamil People – Toronto, Canada
வானொலி