அமெரிக்கா–இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போரின் தாக்கத்தால் உலக சந்தையில் எரிபொருள் விலைகள் திங்கள்கிழமை சுமார் 8 சதவீதம் வரை உயர்ந்துள்ளன. அமர்வின் ஆரம்பத்தில் 2022ஆம் ஆண்டுக்குப் பிறகு காணப்பட்ட மிக உயர்ந்த நிலையை எட்டிய பின்னர், பின்னர் சிலளவு குறைந்து நிலைபெற்றதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரென்ட் (Brent) எண்ணெய் பியூச்சர்ஸ் ஒரு பீப்பாய்க்கு 7.21 அமெரிக்க டொலர் (7.8%) உயர்ந்து 99.90 டொலராகவும், அதேவேளை வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியேட் (WTI) கச்சா எண்ணெய் 4.50 டொலர் (5%) உயர்ந்து ஒரு பீப்பாய்க்கு 95.40 டொலராகவும் பதிவாகியுள்ளது.
பெப்ரவரி 28ஆம் திகதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரானை குண்டுவீச்சு செய்ததிலிருந்து, Brent எண்ணெய் விலை 65% வரை உயர்ந்துள்ளதுடன் WTI 78% வரை அதிகரித்துள்ளது.
இந்நிலையில், ஈரானில் கடும்போக்கு ஆதரவாளர்கள் புதிய உச்சத் தலைவராக மொஜ்தபா காமெனெய் பொறுப்பேற்றதை ஆதரித்து திங்கள்கிழமை பெரும் சக்தி வெளிப்பாட்டை மேற்கொண்டனர். இதனால் மத்திய கிழக்குப் போருக்கு விரைவான முடிவு கிடைக்கும் என்ற நம்பிக்கைகள் குறைந்து, உலக சந்தைகளில் பதற்றம் அதிகரித்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மறுபுறம், மூலோபாய எரிபொருளட கையிருப்புகளில் இருந்து எண்ணெய் வெளியிடப்படலாம் என்ற எதிர்பார்ப்பு, அதிகரிக்கும் எரிசக்தி விலைகள் பணவீக்கத்தை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம், மேலும் சந்தையில் லாபம் எடுத்தல் போன்ற காரணங்களால் விலைகள் உச்சத்திலிருந்து சிலளவு குறைந்ததாகவும் கூறப்படுகிறது.
சவூதி அராம்கோ உற்பத்தி குறைப்பு
சவூதி அரேபியாவின் அரச எரிபொருள் நிறுவனம் அராம்கோ, தனது இரண்டு எண்ணெய் களங்களில் உற்பத்தியை குறைக்கத் தொடங்கியுள்ளது. இதற்கு முன்னதாகவே ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஈராக், குவைட் மற்றும் கட்டார் ஆகிய நாடுகளும் வழங்கலைக் குறைத்துள்ளன.
இந்நிலையில் உலகின் முக்கியமான கடல் வழிகளில் ஒன்றான ஹோர்முஸ் நீரிணை பெரும்பாலும் மூடப்பட்ட நிலையில் உள்ளது. உலக எரிபொருள் மற்றும் திரவ இயற்கை எரிவாயு (LNG) வர்த்தகத்தின் சுமார் ஐந்தில் ஒரு பகுதி இந்தப் பாதையிலேயே கடந்து செல்கிறது.
எனினும் கிரேக்க நிறுவனம் இயக்கும் ஒரு எண்ணெய் கப்பல் சவுதி கச்சா எரிபொருள் சரக்குடன் ஹோர்முஸ் நீரிணையை கடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் சில வர்த்தக கப்பல்கள் இன்னும் இந்த முக்கிய வழித்தடத்தை பயன்படுத்த முயற்சித்து வருவதாகக் கூறப்படுகிறது.
தரவு ஆய்வு நிறுவனம் Kpler தெரிவிப்பதாவது, ஹோர்முஸ் நீரிணை செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டாலும், வளைகுடா நாடுகளின் எரிபொருள் ஏற்றுமதி முழுமையான திறனுக்கு திரும்ப 6 முதல் 7 வாரங்கள் வரை ஆகலாம் என்பதாகும்.
அமெரிக்கா அவசர நடவடிக்கைகள் பரிசீலனை
எரிபொருள் விலையை கட்டுப்படுத்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பல்வேறு நடவடிக்கைகளை பரிசீலிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் மூலோபாய எரிபொருள் கையிருப்புகளில் இருந்து வெளியீடு செய்வது, அமெரிக்க எண்ணெய் ஏற்றுமதியை கட்டுப்படுத்துவது, எண்ணெய் பியூச்சர்ஸ் சந்தையில் தலையீடு செய்வது போன்ற விருப்பங்களும் அடங்கும்.
ஆயினும், ஹோர்முஸ் நீரிணை நீண்ட காலம் மூடப்பட்டிருந்தால் ஏற்படக்கூடிய வழங்கல் தடையை ஒப்பிடுகையில் இத்தகைய நடவடிக்கைகள் மிகக் குறைந்த தாக்கமே ஏற்படுத்தும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இந்நிலையில், ஈரான் போரின் தாக்கம் காரணமாக உலகளாவிய அளவில் நுகர்வோரும் தொழில்களும் அடுத்த சில வாரங்கள் அல்லது மாதங்களில் அதிக எரிபொருள் விலைகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை உருவாகலாம் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.