ஒரு போரின் சரி பிழைகளை மதிப்பிடுவது அல்லது அதன் முடிவுகளைக் கணிப்பது ஒரு பொழுதுபோக்காக இருக்கலாம். இருப்பினும், ஒரு நாட்டின் பலம் மற்றும் உலகளாவிய ரீதியில் அதன் அமைவிடம் குறித்த பகுப்பாய்வானது, பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் டொனால்ட் ட்ரம்ப் ஆகியோரால் கட்டவிழ்த்து விடப்பட்ட நிகழ்வுகளில் செல்வாக்குச் செலுத்தவோ அல்லது அவற்றை மாற்றியமைக்கவோ முடியாது என்பதைத் தெளிவுபடுத்துகிறது.
எம்மால் செய்யக்கூடியதெல்லாம், அந்நிகழ்வுகளைப் புரிந்துகொள்ள முயற்சிப்பதும், பல்வேறு சூழ்நிலைகளை முன்கூட்டியே கணித்து நமது பிரஜைகளுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதும் மாத்திரமேயாகும்.
உலகில் என்ன நடக்கின்றது மற்றும் அதற்குள் எமது இடம் என்ன என்பது குறித்து நாம் ஏன் விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதைக் கற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு நமக்குக் கிடைத்துள்ளது. இதற்குக் காரணம், உலகத்துடனான எமது ஒன்றோடொன்று பிணைக்கப்பட்ட தன்மையாகும். தொலைவிலுள்ள ஒரு போர் எமது அன்றாட நடவடிக்கைகளில் இடையூறுகளை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது.
ஹோமுஸ் நீரிணையில் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக, அடுத்த பயிர்ச்செய்கைப் போகத்தில் உரத் தட்டுப்பாடு மற்றும் உர விலையேற்றத்தை எதிர்பார்க்க முடியும். பொதுவாக எம்மிடமிருந்து தொலைவில் உள்ள விடயங்களுக்கு நாம் குறைந்த முக்கியத்துவத்தையே வழங்குகிறோம். அவற்றின் தாக்கம் மிகக் குறைவு என்றே நாம் கருதுகிறோம். எனினும், இந்த ஒன்றோடொன்று பிணைக்கப்பட்ட உலகளாவிய சூழலில், நாம் 'அண்மை' மற்றும் 'முக்கியத்துவம்' போன்ற பதங்களை மீண்டும் வரைவிலக்கணப்படுத்திக் கொள்ள வேண்டும்.
தற்போதைய போரின் மோதல் வலயம் செங்கடல் முதல் பாரசீக/அரேபிய வளைகுடா பிராந்தியம் ஊடாக ஆப்கானிஸ்தான் எல்லை வரை விரிவடைந்துள்ளது. சைப்பிரஸில் உள்ள பிரித்தானிய அரச விமானப்படை (RAF) தளம் மீதான ட்ரோன் தாக்குதல்கள் மற்றும் எமது கடல் எல்லைக்கு அருகில் போர்க்கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் என்பன இந்த எல்லைகள் மாறக்கூடியவை என்பதை உணர்த்துகின்றன. இது தற்போது பிரதானமாக ஒரு வான்வழிப் போராக இருப்பதால், ஒரு பாரிய வான்பரப்பு இதனால் பாதிக்கப்பட்டுள்ளது. லெபனானில் தரைப்போர் ஆரம்பமாகியுள்ளதுடன், கடற்போரும் மிக அருகிலேயே வந்துள்ளது.
இது ஒரு சமச்சீரற்ற போர் ஆகும். இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் அவர்களது அரேபிய நட்பு நாடுகளின் அதிநவீன, விலை உயர்ந்த ஆயுதங்களுக்கு எதிராக ஈரான் ஒப்பீட்டளவில் குறைந்த செலவிலான 'ஷாஹெட்' (Shahed) ரக ட்ரோன்களைக் கூட்டமாகப் பயன்படுத்துகிறது. குறைந்த செலவில் ஈரானினாலேயே உற்பத்தி செய்யப்படக்கூடிய வசதி இந்த ட்ரோன்களுக்கு உண்டு. இவை உக்ரைனுக்கு எதிரான போர்க்களத்தில் பரீட்சிக்கப்பட்ட ஆயுதங்களாகும்.
வளைகுடா நாடுகளால் கட்டியெழுப்பப்பட்ட விமான போக்குவரத்து மையங்கள் தற்காலிகமாகப் பயன்படுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. மேலும், அவற்றின் நற்பெயருக்கு ஏற்பட்ட பாதிப்பு நீண்டகாலம் நீடிக்கக்கூடும். இலங்கையர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் பயணத் திட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட 'சுப்பர் கனெக்டர்' - துபாயின் எமிரேட்ஸ், தோஹாவின் கட்டார் ஏர்வேஸ் மற்றும் அபூதாபியின் எட்டிஹாட்) ஆகிய மூன்று விமான சேவைகளும், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸை விட சற்றே அதிகமான பயணிகளை இலங்கைக்கு அழைத்து வந்தன. ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நான்கு பயணிகளில் ஒருவரை மாத்திரமே ஏற்றி வந்தது.
வளைகுடா விமான சேவைகளில் பயணச்சீட்டுப் பெற்ற பயணிகளுக்கு மிகக் குறைந்தளவான குறுகிய காலத் தீர்வுகளே உள்ளன. அந்த விமான நிறுவனங்களின் விமானங்கள் பல்வேறு விமான நிலையங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இது சுற்றுலாத்துறை மற்றும் அதைச் சார்ந்த வாழ்வாதாரங்களைப் பாதிக்கிறது.
ஐரோப்பிய மற்றும் ரஷ்ய சுற்றுலாப் பயணிகளில் 40 சதவீதத்திற்கும் அதிகமானோர் வளைகுடா பிராந்திய விமான சேவைகள் ஊடாகவே வருகின்றனர் என மதிப்பிடலாம். அதிர்ஷ்டவசமாக இந்திய மற்றும் ஏனைய ஆசிய சுற்றுலாப் பயணிகளுக்கு இதனால் பாதிப்பு ஏற்படவில்லை. எரிபொருள் விலை காரணமாக அந்தச் சுற்றுலாப் பயணிகளுக்குப் பாதிப்பு ஏற்படச் சிறிது காலம் எடுக்கும்.
பல ஆண்டுகளாக அமுலில் உள்ள பொருளாதாரத் தடைகள் காரணமாக ஈரானுடனான இலங்கையின் வர்த்தகம் வீழ்ச்சியடைந்துள்ளது. உதாரணமாக, பண்டமாற்று முறையாகத் தேயிலையைப் பயன்படுத்தி ஈரானிடமிருந்து பெறப்பட்ட மசகு எண்ணெய்க்கான நிலுவைப்பணம் படிப்படியாகச் செலுத்தப்பட்டு வருகிறது. அந்தச் செலுத்துதல்கள் இன்னும் முடிவடையவில்லை.
ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு மேலதிகமாக 25 சதவீத வரி விதிப்பதாக ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கையைப் புறக்கணிக்க அரசாங்கம் எடுத்த முடிவு சரியானது என்றே தோன்றுகிறது. பண்டமாற்று முறையில் ஏற்றுமதி செய்யப்படும் தேயிலையை (62.14 மில்லியன் அமெரிக்க டொலர்) தவிர்ந்தால், மொத்த ஏற்றுமதி அளவு 5 மில்லியன் டொலர் போன்ற மிகச் சிறிய தொகையாகும்.
இருப்பினும், போர் முனையிலுள்ள வளைகுடா நாடுகளுடன் இலங்கை கணிசமான வர்த்தகப் பரிமாற்றங்களை மேற்கொள்கிறது. 2024 ஆம் ஆண்டில் ஏற்றுமதிக்கான 7 ஆவது பெரிய நாடாக ஐக்கிய அரபு இராச்சியம் (334.63 மில்லியன் டொலர்) விளங்கியது. அங்கு 350,000 இலங்கையர்கள் பணிபுரிகின்றனர்.
ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் பெறுமதி 1,291 மில்லியன் டொலர்களாகும். சர்க்கரை, பேக்கரி பொருட்கள், கம்பி, மீன் உணவு போன்ற பொருட்கள் அங்கு உற்பத்தி செய்யப்படுவதை விட, ஐக்கிய அரபு இராச்சியம் ஊடாகவே இலங்கைக்குக் கொண்டு வரப்படுகின்றன.
சவூதி அரேபியாவிற்கான ஏற்றுமதி மூலம் இலங்கை 115.42 மில்லியன் டொலர்களை ஈட்டுகிறது, இதில் பெரும்பாலானவை தேயிலை (72 மில்லியன்) ஆகும். சவூதியில் 246,139 இலங்கையர்கள் வாழ்கின்றனர். ஏற்கனவே விலை உயர்ந்து வரும் பெட்ரோலியப் பொருட்களுக்கு மேலதிகமாக, உரத் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு குறித்தும் இலங்கை கவலைப்பட வேண்டியுள்ளது. நாம் சவூதி அரேபியா, ஜோர்தான், கட்டார் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளிலிருந்து அதிகளவில் உரங்களை இறக்குமதி செய்கிறோம்.
உலகளாவிய ரீதியில் கந்தகம் (44%), யூரியா (31%), அம்மோனியா (18%) மற்றும் பதப்படுத்தப்பட்ட பொஸ்பேட் (15%) ஆகியன ஹோமுஸ் நீரிணை ஊடாகவே கொண்டு செல்லப்படுகின்றன. தற்போது காப்புறுதி கட்டணங்கள் அதிகரிப்பு மற்றும் விநியோகஸ்தர்களால் பிரகடனப்படுத்தப்படும் 'தவிர்க்க முடியாதச் சூழ்நிலைகள்' (Force majeure) காரணமாக விநியோகத்திலும் விலையிலும் பெரும் பாதிப்புகள் ஏற்படும்.
நெதன்யாகுவும் ட்ரம்ப்பும் இந்தப் போரைத் தொடங்கியபோது உலகம் ஏற்கனவே ஒரு நிலையற்ற தன்மையிலேயே இருந்தது. ட்ரம்ப்பின் வரி வி கொள்கைகளால் ஏற்பட்ட நெருக்கடி, போரினால் மேலும் தீவிரமடைந்துள்ளது. ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு நிறுவனமும் தமது தேவைகளை பல்வகைப்படுத்துவதன் (Diversification) ஊடாக அமெரிக்காவின் நடவடிக்கைகளால் உருவான அபாயங்களை நிர்வகிக்க முயற்சிக்கின்றன.
உலக ஒழுங்கு சீர்குலைந்துள்ள நிலையில், தீர்வுக்கான வழிகளை யோசிப்பதே புத்திசாலித்தனமானது. இணையத்தின் (Internet) கட்டமைப்பு இதற்கு ஒரு சிறந்த உதாரணமாகும். இணையம் என்பது தோல்விகளைத் தவிர்த்து (Fail-safe) இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
உங்களது தீவு நாட்டை ஒரேயொரு கடலடி கேபிள் (Submarine cable) மூலம் மாத்திரம் உலகத்துடன் இணைத்தால் ஆபத்து அதிகம். பல கேபிள்கள் இருந்தாலும் அவை ஒரே இடத்திற்கு வந்து சேர்ந்தால் ஆபத்து இன்னும் குறையவில்லை. எனவே, தரவு மையங்கள் மற்றும் விநியோக வழிகளைப் பல்வகைப்படுத்துவது அவசியமாகும்.
வளைகுடா நாடுகளை அடிப்படையாகக் கொண்ட மூன்று பெரிய விமான நிலையங்கள் அருகருகே அமைந்திருப்பது ஒரு சிறந்த யோசனை அல்ல என்பது இப்போது நிரூபணமாகியுள்ளது. வளைகுடா விமான நிலையங்களுக்கு ஏற்பட்ட நற்பெயர் பாதிப்பானது, வேகமாக வளர்ந்து வரும் ஆசிய சந்தையில் மற்றவர்களுக்குப் புதிய வாய்ப்புகளை உருவாக்கக்கூடும்.