ஈரான் மீதான தாக்குதல்கள் இன்று அதன் உச்சக்கட்டத்தை எட்டும் என அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் தெரிவித்துள்ளார்.
இதுவரை இல்லாத வகையில் இன்றைய தினம் மிகக் கடுமையான தாக்குதல்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் எச்சரித்துள்ள நிலையில், ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் பல இடங்களில் பாரிய வெடிப்புச் சத்தங்கள் கேட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இன்று பென்டகனில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், அமெரிக்காவின் இந்த அறிவிப்பு சர்வதேச ரீதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரான் மீதான போர் எவ்வளவு காலம் நீடிக்கும் என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, டிரம்ப்பின் ஊடகச் செயலாளர் பதிலளிக்கையில், ஈரானின் ஏவுகணைகள் மற்றும் கடற்படையை அழிப்பதற்கும், அதன் அணுசக்தி ஆற்றலை முடக்குவதற்கும், அவர்களின் ஆதரவுப் படைகளை (Proxies) ஒழிப்பதற்கும் ஆரம்பத்தில் நான்கு முதல் ஆறு வார கால அவகாசம் தீர்மானிக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
தற்போது இந்த நடவடிக்கைகள் திட்டமிட்ட காலத்திற்கு முன்னதாகவே வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட அவர், ஈரானிடமிருந்து "முழுமையான மற்றும் நிபந்தனையற்ற சரணாகதி" கிடைக்கும் வரை போர் முடிவுக்கு வராது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார். ஈரான் இனி நேரடி அச்சுறுத்தல் இல்லை என்பதை ஜனாதிபதி டிரம்ப் தீர்மானிக்கும் போதே போர் நிறுத்தப்படும் என்றும் லீவிட் (Leavitt) மேலும் குறிப்பிட்டார்.
தற்போது ஏற்பட்டுள்ள எண்ணெய் மற்றும் எரிவாயு விலை உயர்வு தற்காலிகமானது என்றும், நீண்ட கால அடிப்படையில் இந்த இராணுவ நடவடிக்கை எரிபொருள் விலையைக் குறைக்க வழிவகுக்கும் என்றும் லீவிட் தெரிவித்துள்ளார். ஹோர்முஸ் ஜலசந்தியை (Strait of Hormuz) திறந்த நிலையில் வைத்திருக்குமாறு டிரம்ப் விடுத்த உத்தரவைத் தொடர்ந்து, அமெரிக்க இராணுவம் மேலதிக திட்டங்களை வகுத்து வருவதாகவும் அவர் கூறினார். அந்தத் திட்டங்கள் என்னவென்பதை அவர் வெளிப்படுத்தாத போதிலும், "ஜனாதிபதி அவற்றைச் செயற்படுத்தத் தயங்கமாட்டார்" என அவர் எச்சரித்தார்.
மத்திய கிழக்கில் முன்னெடுக்கப்படும் 'ஒப்பரேஷன் எபிக் பியூரி' நடவடிக்கையின் வெற்றி குறித்துப் பேசிய வெள்ளை மாளிகை ஊடகச் செயலாளர் கரோலின் லீவிட், இந்த நடவடிக்கை ஆரம்பித்தது முதல் ஈரானின் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைத் தாக்குதல்கள் 90 சதவீதத்தாலும், ட்ரோன் தாக்குதல்கள் சுமார் 85 சதவீதத்தாலும் குறைந்துள்ளதாகத் தெரிவித்தார்.
மேலும், இதுவரை ஈரானின் 50-க்கும் மேற்பட்ட கடற்படைக் கப்பல்களை அமெரிக்கா அழித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். "பொதுமக்களை இலக்கு வைக்கும் மற்றும் உலகப் பொருளாதாரத்தைப் பிணையாக வைக்க முயற்சிக்கும் பயங்கரவாதிகளை அழிப்பது ஒரு சிறந்த விடயமாகும்" என அவர் இதன்போது தெரிவித்தார்.
அமெரிக்காவின் உயர்மட்ட ஜனநாயகக் கட்சியினர், "டொனால்ட் டிரம்ப்பின் போர்" என இதனை விமர்சித்துள்ளதோடு, சாதாரண அமெரிக்கர்களுக்கான விலைவாசி உயர்வுக்கு இதுவே காரணம் என கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
"டொனால்ட் டிரம்ப் நமது படைகளின் உயிர்களையும், அமெரிக்க மக்களின் பாதுகாப்பையும், உலகப் பொருளாதாரத்தின் ஸ்திரத்தன்மையையும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளார்" என செனட் சிறுபான்மைத் தலைவர் சக் ஷுமர் (Chuck Schumer) சாடியுள்ளார்.
இதேவேளை, அரசாங்கம் மக்களின் மளிகைப் பொருட்களின் விலையைக் குறைக்க ஒரு சதமேனும் செலவிடத் தயாராக இல்லை, ஆனால் உழைக்கும் மக்களின் எரிபொருள் விலையை உயர்த்தி வருவதாக ஹக்கீம் ஜெப்ரீஸ் (Hakeem Jeffries) குற்றம் சுமத்தியுள்ளார்.