ஈரானின் முக்கிய சிவில் மற்றும் பொருளாதார உட்கட்டமைப்பு வசதிகளை இலக்கு வைத்து அமெரிக்கா அல்லது இஸ்ரேல் தாக்குதல்களை முன்னெடுக்குமானால், அதற்குப் பதிலாக 'கண்ணுக்குக் கண்' (Eye for an eye) என்ற அடிப்படையில் மிகக் கடுமையான பதில் தாக்குதல்கள் தொடுக்கப்படும் என ஈரான் சூளுரைத்துள்ளது.
எதிரி நாடுகளின் எந்தவொரு ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்கும் சம அளவிலான அல்லது அதைவிடப் பாரிய அளவிலான அழிவுகளை ஏற்படுத்தத் தாம் தயாராக இருப்பதாக ஈரானிய இராணுவத் தரப்பு தெரிவித்துள்ளது.
குறிப்பாக, எரிசக்தி நிலையங்கள் மற்றும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் தாக்கப்பட்டால், மத்திய கிழக்கிலுள்ள அமெரிக்கத் தளங்கள் மற்றும் இஸ்ரேலிய இலக்குகள் மீது இடைவிடாத தாக்குதல்கள் நடத்தப்படும் என அந்த நாடு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஈரான் மீதான இராணுவ நடவடிக்கை எரிபொருள் விலையைக் குறைக்கும்: வெள்ளை மாளிகை அறிவிப்பு
எண்ணெய் மற்றும் எரிவாயு விலைகளில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு வெறும் "தற்காலிகமானது" எனும் டிரம்ப் நிர்வாகத்தின் நிலைப்பாட்டை வெள்ளை மாளிகை ஊடகப்பேச்சாளர் கரோலின் லீவிட் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.
செவ்வாய்க்கிழமை கருத்து வெளியிட்ட அவர், அமெரிக்கர்களுக்கான எரிசக்தி விலைகள் குறையும் என்றும், அது போர் ஆரம்பிப்பதற்கு முன்னைய விலைகளை விடவும் குறைவான மட்டத்தை எட்ட வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார்.
"இந்த இராணுவ நடவடிக்கையானது இறுதியில் எண்ணெய் மற்றும் எரிவாயு விலைகளைக் குறைப்பதற்கே வழிவகுக்கும்" என அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
ஈரான் போர்: செலவுகள் மற்றும் இலக்குகள் குறித்து ஜனநாயகக் கட்சியினர் கேள்வி
செனட் சபை ஆயுதப்படைக் குழுவிற்கான இரகசிய இராணுவ புலனாய்வு சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. இதன்போது, போருக்கான ஆதரவு அரசியல் கட்சிகளுக்கு இடையே பிளவுபட்டுள்ளதைக் காண முடிந்தது.
குழுவிலிருந்து வெளியேறிய குடியரசுக் கட்சி செனட்டர் லின்சி கிரஹாம் போருக்கு தனது ஆதரவை வெளிப்படுத்திய அதேவேளை, ஜனநாயகக் கட்சியினர் கடும் அதிருப்தியை வெளியிட்டனர்.
போருக்கான செலவு, அதன் கால அளவு, இறுதி இலக்குகள் மற்றும் தரைப்படை வீரர்கள் (Boots on the ground) களமிறக்கப்படுவார்களா? போன்ற முக்கிய கேள்விகளுக்கு உரிய பதில்கள் வழங்கப்படவில்லை என அவர்கள் குற்றம் சுமத்தினர்.
"நாங்கள் கேட்டவை கவலையளிப்பது மட்டுமல்ல, அதிர்ச்சியளிக்கக் கூடியவை" என நெவாடா மாநில ஜனநாயகக் கட்சி செனட்டர் ஜாக்கி ரோசன் தெரிவித்தார்.
ஹோர்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படவில்லை: வெள்ளை மாளிகை மறுப்பு
ஹோர்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) ஊடாகச் சென்ற எண்ணெய் கப்பல் ஒன்றுக்கு அமெரிக்க கடற்படை பாதுகாப்பு வழங்கியதாக எரிசக்தி செயலாளர் கிறிஸ் ரைட் வெளியிட்ட தகவலை வெள்ளை மாளிகை உத்தியோகபூர்வமாக மறுத்துள்ளது.
ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய கரோலின் லீவிட், அமெரிக்க கடற்படை இதுவரை எந்தவொரு கப்பலுக்கும் அவ்வாறு பாதுகாப்பு வழங்கவில்லை எனத் தெளிவுபடுத்தினார். இதனைத் தொடர்ந்து, கிறிஸ் ரைட் தனது 'X' தளத்தில் வெளியிட்டிருந்த பதிவை நீக்கியுள்ளார்.
ஹோர்முஸ் ஜலசந்தி முடக்கப்பட்டால் ஏற்படும் பாதிப்புகள்: ஐநா ஆய்வு அறிக்கை
ஈரான் மீதான அமெரிக்க - இஸ்ரேல் யுத்தத்தினால் ஹோர்முஸ் ஜலசந்தி மூடப்பட்டால் உலகளாவிய ரீதியில் ஏற்படக்கூடிய தாக்கங்கள் குறித்து ஐநா வர்த்தக மற்றும் அபிவிருத்தி சபை (UNCTAD) ஆய்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:
கப்பல் கட்டண உயர்வு: எண்ணெய் தாங்கிகளுக்கான வாடகைக் கட்டணம் மற்றும் போர் இடர் காப்புறுதி (War risk insurance) கட்டணங்கள் சடுதியாக அதிகரித்துள்ளன.
உணவுப் பாதுகாப்பு அச்சுறுத்தல்: உலகளாவிய கடல்வழி உர வர்த்தகத்தில் மூன்றில் ஒரு பங்கு (சுமார் 16 மில்லியன் தொன்) இந்த ஜலசந்தி ஊடாகவே நடைபெறுகிறது. இதன் முடக்கம் ஏழை நாடுகளின் விவசாயத்தைப் பாதிக்கும்.
பொருளாதார நெருக்கடி: ஏற்கனவே கடன் சுமையில் உள்ள வளரும் நாடுகள், இந்த விலை ஏற்றத்தினால் பாரிய பொருளாதார அதிர்வுகளைச் சந்திக்க நேரிடும்.
"கடல்சார் வர்த்தகப் பாதைகளைப் பாதுகாப்பது சர்வதேச சட்டங்களின்படி அவசியமானது" என ஐநா ஊடகப்பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக் வலியுறுத்தியுள்ளார்.