பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி உயிரிழந்த ஜெப்ரி எப்ஸ்டீனுக்குச் சொந்தமான நியூ மெக்சிகோவிலுள்ள பிரம்மாண்டமான 'ஸோரோ' (Zorro Ranch) பண்ணையில் அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகள் இந்த வாரம் பாரிய தேடுதல் நடவடிக்கையொன்றை ஆரம்பித்துள்ளனர்.
அமெரிக்க நீதியமைச்சினால் அண்மையில் வெளியிடப்பட்ட ஆவணங்களில் இப்பண்ணை தொடர்பான பல திடுக்கிடும் தகவல்கள் உள்ளடக்கப்பட்டிருந்த நிலையில், இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நியூ மெக்சிகோ நீதியமைச்சினால் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, திங்கட்கிழமை காலை முதல் இப்பண்ணையில் தேடுதல் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 2019 ஆம் ஆண்டு உயிரிழந்த எப்ஸ்டீன், இப்பண்ணையை வைத்திருந்த காலப்பகுதியில் அங்கு இடம்பெற்றதாகக் கூறப்படும் சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்த குற்றவியல் விசாரணையின் ஒரு பகுதியாகவே இது அமைந்துள்ளது.
கடந்த ஜனவரி மாதம் நீதியமைச்சினால் வெளியிடப்பட்ட பல மில்லியன் ஆவணங்களுக்கிடையில், 2019 ஆம் ஆண்டு உள்ளூர் வானொலி அறிவிப்பாளர் ஒருவருக்கு வந்த மின்னஞ்சல் ஒன்று பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அதில், "ஸோரோ பண்ணைக்கு வெளியிலுள்ள குன்றுப் பகுதியில், எப்ஸ்டீன் மற்றும் மேடம் ஜி (Madam G) ஆகியோரின் உத்தரவின் பேரில் இரண்டு வெளிநாட்டு யுவதிகள் புதைக்கப்பட்டுள்ளனர்" என்ற தகவல் இடம்பெற்றுள்ளது.
இந்தத் தகவல் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என்ற போதிலும், நியூ மெக்சிகோ சட்டமா அதிபர் ரால் டோரஸ் (Raul Torrez) இது தொடர்பான விசாரணைகளை மீண்டும் ஆரம்பிக்க உத்தரவிட்டுள்ளார். 2019 இல் மத்திய அரசால் மூடப்பட்ட இந்த வழக்கினை தற்போது மாநில அதிகாரிகள் பொறுப்பேற்றுள்ளனர்.
இப்பண்ணை தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கென நியூ மெக்சிகோ பிரதிநிதிகள் சபை கடந்த மாதம் இருதரப்பு 'உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு' ஒன்றை அமைத்துள்ளது.
இந்த ஆணைக்குழுவிற்கு எவரையும் சாட்சியமளிக்க அழைப்பதற்கும், பிடியாணை (Subpoena) பிறப்பிப்பதற்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
தற்போது இந்தப் பண்ணையானது டெக்சாஸ் மாநிலத்தின் முன்னாள் செனட்டர் டான் ஹஃபைன்ஸ் (Don Huffines) என்பவரின் குடும்பத்தினருக்குச் சொந்தமானது என்பதும், அவர்கள் இந்தத் தேடுதல் நடவடிக்கைக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கி வருவதும் குறிப்பிடத்தக்கது.