மட்டக்களப்பு மாவட்டத்தில் முதன்முறையாக மனித புதைகுழி அகழ்வுக்கு நீதிமன்றம் அனுமதி

மட்டக்களப்பு மாவட்டத்தில் முதன்முறையாக மனித புதைகுழி அகழ்வுக்கு நீதிமன்றம் அனுமதி

தற்செயலாக எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்படாமல், விசாரணையை முன்னெடுப்பதற்கு நீதிமன்றம் தீர்மானித்துள்ள, இலங்கையின் முதல் மனிதப் புதைகுழியின் அகழ்வுப் பணிகளை ஆரம்பிப்பதற்கான திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

35 வருடங்களுக்கு முன்னர், சுமார் 150-ற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மட்டக்களப்பு, குருக்கள்மடத்தில் உள்ள மனிதப் புதைகுழியில் அகழ்வாய்வை ஆரம்பிக்க ரூ. 2.8 மில்லியன் தேவைப்படும் என்ற மதிப்பீட்டை கொழும்பு தலைமை சட்ட வைத்திய அதிகாரி செபடெம்பர் 23, 2025 அன்று களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார்.

மார்ச் 30 அன்று மனித புதைகுழியில் முதல் கட்ட அகழ்வாய்வை ஆரம்பிக்க நீதவான் உத்தரவிட்டுள்ளதாக, நேற்றைய தினம் (மார்ச் 09) களுவாஞ்சிக்குடி நீதவான் தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட பாதிக்கப்பட்டவர்கள் சார்பான சட்டத்தரணி ர் ராஷி முஹம்மது தெரிவித்தார்.

"ஏற்கனவே இந்த குறிப்பிட்ட அகழ்வுப் பணிக்காக ஒதுக்கப்பட்ட பணம் கிடைப்பதில் சில கால தாமதங்கள் ஏற்பட்டிருந்தன. கால நிலையும் சீர்கேடும் அகழ்வுக்கு ஒரு தடையாக காணப்பட்டது. ஒதுக்கீடு செய்யப்பட்ட பணமும் கிடைக்கப்பெற்று செலவழிப்பதற்கான அதிகாரமும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்திற்கு கிடைத்துள்ளது. எதிர்வரும் 30ஆம் திகதி அகழ்வுப் பணியை ஆரம்பிப்பதற்கான கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது. சட்ட வைத்திய அதிகாரி உள்ளிட்ட அகழ்வுடன் தொடர்புடைய அதிகாரிகளின் பரிந்துரைக்கு அமைய எதிர்வரும் 30ஆம் திகதியில் இருந்து முதல் கட்ட அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட தொடர்புடைய அதிகாரிகளுக்கு முன்னேற்பாடுகளை செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது."

நீதிமன்ற நடவடிக்கைகளுக்குப் பின்னர், நீதவான், காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலக அதிகாரிகள், சட்டத்தரணிகள், சட்ட வைத்திய அதிகாரி உள்ளிட்டவர்கள் மனித புதைகுழி காணப்படுவதாக குறிப்பிடப்படும் இடத்தை சென்று பார்வையிட்டுள்ளனர்.

இலங்கையில் எலும்புக்கூடுகள் தற்செயலாக கண்டுபிடிக்கப்படாமல் அகழ்வாய்வு ஆரம்பிக்கப்படவுள்ள முதல் மனித புதைகுழி இதுவாகும். முன்னதாக, மனித எலும்புகள் தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் வடக்கு, கொழும்பு, திருகோணமலை, மற்றும் மாத்தளை ஆகிய இடங்களில் இதுபோன்ற விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.

ஒகஸ்ட் 25, 2025 அன்று, களுவாஞ்சிக்குடி நீதிபதி ஜே.பி.ஏ. ரஞ்சித்குமார், மனித புதைகுழி அமைந்துள்ளதாகக் கூறப்படும் இடத்தில் அகழ்வாய்வை ஆரம்பிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அரச அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார்.

மூன்றரை தசாப்தங்களுக்கு முன்பு நடந்த இனப்படுகொலை தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

2014 சுற்றுலா நீதிமன்றம்

1990ஆம் ஆண்டு புனித ஹஜ் யாத்திரை முடித்து காத்தான்குடிக்குத் திரும்பிய முஸ்லிம்கள் குழு ஒன்று படுகொலை செய்து புதைக்கப்பட்டுள்ளதாக உள்ளூர்வாசி அப்துல் மஜீத் அப்துல் ரவூப் களுவாஞ்சிக்குடி பொலிஸில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் 2014ஆம் ஆண்டு களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதாக உள்ளூர் ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், இந்த வழக்கு ஜூலை 1, 2014 அன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, படுகொலை செய்து புதைக்கப்பட்டமைக்கான நியாயமான சந்தேகத்தின் அடிப்படையில் குறித்த பிரதேசத்தில் அகழ்வினை மேற்கொள்வதற்குத் தேவையான ஆரம்பகட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு நீதிபதி ஏ.எம். ரியால் உத்தரவிட்டார், எனினும் அந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அவர்கள் கூறுகின்றனர்.

11 வருடங்களின் பின்னர் களுவாஞ்சிக்குடி, நீதவான் நீதிமன்றத்தில் முறைப்பாட்டாளரான அப்துல் மஜீத் அப்துல் ரவூஃப் தனது சட்டத்தரணிகள் மூலம் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில், ஜூலை 11, 2025 அன்று இந்த வழக்கு திறந்த நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

Radio Logo
Puthiya Kural Radio
Voice of Tamil People – Toronto, Canada
வானொலி