மத்திய கிழக்கில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், ஈராக்கில் உள்ள எண்ணெய் சேமிப்பு முனையங்கள் மற்றும் டாங்கிகள் மீது இனந்தெரியாத ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. அதேவேளை, போரை நிறுத்துவதற்கு ஈரான் மூன்று முக்கிய நிபந்தனைகளை முன்வைத்துள்ளது.
ஈராக்கின் முக்கிய எண்ணெய் விநியோக மையங்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல்களில், அமெரிக்காவிற்கு எண்ணெய் விநியோகம் செய்யும் பல டாங்கிகள் தீக்கிரையாகியுள்ளன.
இத்தாக்குதலுக்கு இதுவரை எவரும் உரிமை கோராத போதிலும், இது ஈரானிய ஆதரவு ஆயுதக் குழுக்களின் கைவரிசையாக இருக்கலாம் என அமெரிக்கப் பாதுகாப்புத் தலைமையகமான பென்டகன் சந்தேகம் வெளியிட்டுள்ளது.
அமைதிக்கு ஈரான் விதித்துள்ள 3 நிபந்தனைகள்
சர்வதேச நாடுகளின் அழுத்தங்களுக்கு மத்தியில், போரை முடிவுக்குக் கொண்டுவரத் தான் தயார் என அறிவித்துள்ள ஈரான், அதற்காகப் பின்வரும் மூன்று நிபந்தனைகளை விதித்துள்ளது:
01 தாக்குதல்களை உடனடியாக நிறுத்துதல்:
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது முன்னெடுத்து வரும் 'ஒப்பரேஷன் எபிக் பியூரி' (Operation Epic Fury) உள்ளிட்ட அனைத்து இராணுவ நடவடிக்கைகளும் நிபந்தனையின்றி உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
02 பொருளாதாரத் தடைகளை நீக்குதல்:
ஈரானின் எண்ணெய் மற்றும் வங்கித் துறைகள் மீது விதிக்கப்பட்டுள்ள அனைத்து சர்வதேசப் பொருளாதாரத் தடைகளும் (Sanctions) முழுமையாக நீக்கப்பட வேண்டும்.
03 இராணுவப் படைகள் வௌியேற்றம்:
ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) மற்றும் பாரசீக வளைகுடா பிராந்தியத்திலிருந்து அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் போர்க்கப்பல்கள் மற்றும் இராணுவப் படைகள் முற்றாக வௌியேற வேண்டும்.
அமெரிக்காவின் எதிர்வினை
ஈரானின் இந்த நிபந்தனைகளை அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் நிராகரித்துள்ளது. "ஈரான் தனது அணுசக்தித் திட்டங்களைக் கைவிட்டு, பயங்கரவாத அமைப்புகளுக்கான ஆதரவை நிறுத்தும் வரை எந்தவொரு சமரசத்திற்கும் இடமில்லை" என வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதற்கிடையில், எண்ணெய் டாங்கிகள் மீதான தாக்குதலால் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்படும் என்ற அச்சத்தில் எரிபொருள் விலைகள் மீண்டும் ஏறுமுகத்தில் காணப்படுகின்றன.