இங்கிலாந்தின் சவுதாம்ப்டன் (Southampton) பகுதியில் உள்ள புகலிடக்கோரிக்கையாளர்களுக்கான ஹோட்டல் ஒன்றில், ஊழியர்கள் இருவரைத் தாக்கி, அவர்கள் முன்னிலையில் நிர்வாணத்தைக் காட்டியதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட இலங்கைத் தமிழர் ஒருவரை நீதிமன்றம் குற்றவாளியாகத் தீர்ப்பளித்துள்ளது.
38 வயதான சுகீர்த்தன் தங்கராசா எனும் நபருக்கு எதிராகவே போர்ட்ஸ்மவுத் கிரவுன் (Portsmouth Crown Court) நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது.
சம்பவத்தின் பின்னணி:
கடந்த 2025 ஆகஸ்ட் 15 ஆம் திகதி சவுதாம்ப்டனில் உள்ள 'ஹைஃபீல்ட் ஹவுஸ்' (Highfield House) ஹோட்டலில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. விசாரணையின் போது சந்தேகநபருக்கு நீதிமன்றத்தினால் தமிழ் மொழிபெயர்ப்பாளர் ஒருவரின் உதவியும் வழங்கப்பட்டிருந்தது.
வழக்கைத் தாக்கல் செய்த அரச சட்டத்தரணி ஜாக் ஃபர்னஸ் நீதிமன்றத்தில் தெரிவிக்கையில்:
"தங்கராசா தனது கைபேசி (Mobile Phone) வேலை செய்யாத காரணத்தினால் ஆத்திரமடைந்து, ஹோட்டலின் வரவேற்பு உத்தியோகத்தர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதன்போது, 'நான் இலங்கையைச் சேர்ந்தவன். இந்தியா மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த உங்களைப் போன்ற சிறிய மனிதர்கள் எனக்கு மரியாதை கொடுக்க வேண்டும்' எனக்கூறி ஊழியர்களைத் திட்டியுள்ளார்."
நிர்வாணப் பிரகடனம் மற்றும் தாக்குதல்:
வாக்குவாதம் முற்றிய நிலையில், அவர் தனது ஆடைகளைக் களைந்து நிர்வாணத்தைக் காட்டியதுடன், அதனைத் தடுக்க முயன்ற இரு ஊழியர்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளார். ஊழியர்களைத் தாக்கியதை அவர் ஏற்கனவே ஒப்புக்கொண்டிருந்தார்.
சம்பவ இடத்திலிருந்த பாதுகாப்பு கமெரா (CCTV) காட்சிகள் மூலம் இக்குற்றச்சாட்டுகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. தான் நிர்வாணத்தைக் காட்டியதை ஏற்றுக்கொண்ட போதிலும், அது ஒருவரை அச்சுறுத்தும் நோக்கத்தில் (Intent to cause alarm or distress) செய்யப்படவில்லை என அவர் வாதிட்டார்.
எனினும், அனைத்து சாட்சியங்களையும் ஆராய்ந்த ஜூரி சபை (Jury), அவர் குற்றவாளி எனத் தீர்ப்பளித்தது. இவ்வழக்கு தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.