இலங்கை அருகே ஈரானியக் கப்பல் அழிப்பு: அமெரிக்க இராணுவத்தைச் சாடிய ட்ரம்ப்!

இலங்கை அருகே ஈரானியக் கப்பல் அழிப்பு: அமெரிக்க இராணுவத்தைச் சாடிய ட்ரம்ப்!

இலங்கை கடற்பரப்பிற்கு அப்பால் ஈரானியப் போர்க்கப்பலை மூழ்கடிக்க எடுத்த தீர்மானம் குறித்து தாம் கேள்வி எழுப்பியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

கென்டக்கி (Kentucky) மாகாணத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். குறித்த போர்க்கப்பலைக் கைப்பற்றுவதற்குப் பதிலாக, அதனை ஏன் அழித்தீர்கள் எனத் தான் இராணுவ அதிகாரிகளிடம் வினவியதாக அவர் குறிப்பிட்டார்.

"நான் கேட்டேன், ஏன் நாம் அவர்களைக் கொன்றோம்? ஏன் நம்மால் அவர்களைக் கைது செய்து, அந்தக் கப்பலை எமது கடற்படைப் பயன்பாட்டிற்கு எடுக்க முடியாமல் போனது?" என ட்ரம்ப் அங்கு கேள்வி எழுப்பியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இருப்பினும், கப்பலைக் கைப்பற்றுவதை விட அதனை மூழ்கடிப்பதே சிறந்தது எனத் தனது ஜெனரல் ஒருவர் தனக்குக் கூறியதாகத் தெரிவித்த ட்ரம்ப், அந்த அதிகாரி அதனை "ஐயா, அது மிகவும் வேடிக்கையாக (Fun) இருக்கும்" என வர்ணித்ததாகவும் குறிப்பிட்டார்.

கடந்த வாரம் இலங்கை அருகே சர்வதேசக் கடற்பரப்பில் வைத்து அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலினால் ஏவப்பட்ட டொர்பிடோ (Torpedo) தாக்குதலில் ஈரானிய கடற்படைக்குச் சொந்தமான 'பிரிகேட்' (Frigate) ரக ஐ.ஆர்.ஐ.எஸ் டெனா (IRIS Dena) கப்பல் மூழ்கடிக்கப்பட்டது. இத்தாக்கதலில் 104 மாலுமிகள் கொல்லப்பட்டதுடன் 32 பேர் காயமடைந்தனர்.

இதேவேளை, ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதல்கள் இன்னும் நிறைவடையவில்லை என அதிபர் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். வெள்ளை மாளிகைக்கு முன்னால் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

வரலாற்றில் எந்தவொரு நாட்டிற்கும் நடத்தப்படாத அளவிலான மிகக் கொடூரமான தாக்குதல்களை அமெரிக்கா ஈரான் மீது நடத்தியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

ஈரான் தற்போது தனது கடற்படை, விமானப்படை, விமான எதிர்ப்பு ஏவுகணைகள் மற்றும் ராடார் கட்டமைப்புக்கள் அனைத்தையும் இழந்து நிற்பதுடன், அந்நாட்டின் முக்கிய தலைவர்களையும் இழந்துள்ளதாக ட்ரம்ப் மேலும் தெரிவித்தார்.