யாழ்ப்பாணம் பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் பலியான சிறுவன்: பொலிஸ் மா அதிபருக்கு நீதிமன்றம் உத்தரவு!

யாழ்ப்பாணம் பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் பலியான சிறுவன்: பொலிஸ் மா அதிபருக்கு நீதிமன்றம் உத்தரவு!

ஒரு மாதத்திற்கு முன்னர் 17 வயது சிறுவன் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டமை தொடர்பாக ஊர்காவல்துறை பொலிஸார் நடத்தும் விசாரணையில் திருப்தி அடையாத நீதிமன்றம், விசாரணையை குற்றப் புலனாய்வு பிரிவிடம் ஒப்படைக்குமாறு பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர் சார்பில் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட விடயங்களை கருத்தில் கொண்ட பின்னர், தற்போது நடைபெற்று வரும் விசாரணைகள் குறித்து தனது ஆழ்ந்த அதிருப்தியை வெளிப்படுத்திய நீதவான் நளினி சுபாஸ்கரன், விசாரணையை குற்றப் புலனாய்வு பிரிவிடம் ஒப்படைக்குமாறு பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவிட்டதாக, பெப்ரவரி 10 ஆம் திகதி பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட சித்தங்கேணியைச் சேர்ந்த அல்பினோ அயூப்ராஜ் அருள் பயாஸ் சார்பாக நீதிமன்றத்தில் முன்னிலையான பேராசிரியர், சட்டத்தரணி குமாரவடிவேல் குருபரன் இன்று (மார்ச் 12) தெரிவித்தார்.

சிறுவனின் கொலைக்கு காரணமான பொலிஸ் அதிகாரிகளைக் கண்டித்தும், அவர்களை கைது செய்யக் கோரியும் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் குடிமை சமூக ஆர்வலர்கள் மார்ச் 10, 2026 அன்று அல்லைப்பிட்டி பொலிஸ் நிலையம் முன் ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக போராட்டம் நடத்தினர்.

கொலை நடந்து ஒரு மாதமாகியும், கொலை செய்த அதிகாரிகளின் பெயர்கள் பி அறிக்கையில் குறிப்பிடப்படாததும், துப்பாக்கித் தோட்டாவைக் கூட பொலிஸார் இதுவரை மீட்காமையும், விசாரணை எவ்வளவு மோசமாக நடைபெறுகிறது என்பதை எடுத்துக்காட்டுவதாக, ஆறு பேர் கொண்ட சட்டக் குழு நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.

மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவின் பொறுப்பபதிகாரி, பெப்ரவரி 10, 2026 அன்று நீதிமன்றத்தில் ஒரு அறிக்கையை சமர்ப்பித்துள்ளதாகவும், அதில் பொலிஸ் கான்ஸ்டபிள் மாரசிங்க மற்றும் சல்மானின் துப்பாக்கிகளிலிருந்து துப்பாக்கிச் சூடுகள் நடத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், எனினும், இரு சந்தேகநபர்களை கைது செய்யாமை குறித்து பாதிக்கப்பட்டவரின் சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் கேள்வி எழுப்பியதாகவும் சட்டத்தரணி குமாரவடிவேல் குருபரன் குறிப்பிட்டார்.

தற்காப்புக்காக துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்ததாகக் கூறிய சட்டத்தரணி, துப்பாக்கிச் சூடு தற்காப்புக்காக நடத்தப்பட்டிருந்தாலும், முதலில் அவர்களைக் கைது செய்து அவர்களின் விளக்கத்தின் அடிப்படையிலேயே பிணை வழங்க முடியுமென நீதிமன்றில் சுட்டிக்காட்டியதாக குறிப்பிடுகின்றார்.

அதன்படி, அருள் பயாஸ் கொலையில் சம்பந்தப்பட்ட இரண்டு பொலிஸ் அதிகாரிகளையும் சந்தேகநபர்களாகக் குறிப்பிட்டு கைது செய்யுமாறு பாதிக்கப்பட்டவரின் சட்டத்தரணிகள் விடுத்த கோரிக்கையை பரிசீலித்த நீதிபதி, குறித்த தீர்மானத்தை அறிவித்ததாக பேராசிரியர் குமாரவடிவேல் குருபரன் குறிப்பிட்டார்.

இன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது பதினைந்து முதல் இருபது பொலிஸ் அதிகாரிகள் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்ததாக அவர் குறிப்பிடுகின்றார்.

அல்லைப்பிட்டி சந்திக்கு அருகில் சந்தேகத்துக்கிடமான வேன் ஒன்றை நிறுத்துமாறு பொலிசார் சமிக்ஞை காட்டியபோது, அந்த வேன் நிறுத்தப்படாமல் சென்றதால் பொலிசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் குறித்த வேனில் பயணித்த 19 வயதுடைய இளைஞர் காயமடைந்து யாழ்ப்பாண வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக பொலிஸ் ஊடகப் பிரிவு பெப்ரவரி 10ஆம் திகதி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால், உயிரிழந்த சித்தங்கேணியைச் சேர்ந்த அல்பினோ அயுப்ராஜ் அருள் பயாஸ் 2008 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 09 ஆம் திகதி பிறந்தவர் என அவரது பிறப்புச் சான்றிதழிலும் பிரேதப் பரிசோதனை அறிக்கையிலும் குறிப்பிடப்பட்டிருந்தது.

விசேட சட்ட வைத்திய அதிகாரி ருத்ரபசுபதி மயோதரன் நீதவான் எம்.என்.என். ஹுசைனுக்கு அனுப்பிய பிரேதப் பரிசோதனை அறிக்கையில், பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 17 வயது அல்பினோ அருள் பயாஸின் மரணத்திற்கான காரணம் ‘துப்பாக்கியிலிருந்து வெளியேறிய தோட்டாவினால் மூளை சிதைவடைந்தமை’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Radio Logo
Puthiya Kural Radio
Voice of Tamil People – Toronto, Canada
வானொலி