செம்மணிப் மனிதப் புதைகுழியில் மீண்டும் அகழ்வாய்வு மேற்கொள்ள திகதி நிர்ணயம்!

செம்மணிப் மனிதப் புதைகுழியில் மீண்டும் அகழ்வாய்வு மேற்கொள்ள திகதி நிர்ணயம்!

பணிகள் ஆறு மாதங்களுக்கு முன்னர் இடைநிறுத்தப்பட்ட, இலங்கையின் இரண்டாவது பெரிய மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வாய்வுப் பணிகளைத் ஆரம்பிப்பதற்கு முன்மொழியப்பட்ட திகதியை நீதிமன்றம் அறிவித்துள்ளது.

செம்மணி சித்துப்பாத்தி இந்து மயான மனிதப் புதைகுழி வழக்கின் விசாரணை மார்ச் 16 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டிருந்தது, எனினும் ஒரு மனு ஊடாக நேற்றைய தினம் (மார்ச் 12)  விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு ஒத்திவைக்கப்பட்டபோது, யாழ்ப்பாண நீதிபதி செல்வநாயகம் லெனின்குமார், சட்ட வைத்திய அதிகாரி, தொல்லியல் அதிகாரிகள் மற்றும் சட்டத்தணிகளுடன் இணைந்து புதைகுழியைப் பார்வையிடச் சென்றிருந்தார்.

புதைகுழியை ஆய்வு செய்த பின்னர், சட்ட வைத்திய அதிகாரி மற்றும் தொல்லியல் அதிகாரிகளின் ஆலோசனையின் பேரில், அகழ்வாய்வு நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு முன்மொழியப்பட்ட திகதி ஏப்ரல் 20 என, நீதவான் அறிவித்ததாக பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக முன்னிலையான சட்டத்தரணி வி.எஸ். நிரஞ்சன் தெரிவிக்கின்றார்.

இது தொடர்பான தயார்நிலை மற்றும் முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்ய ஏப்ரல் 8 ஆம் திகதி வழக்கை மீண்டும் விசாரிக்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

அகழ்வாய்வு நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டதிலிருந்து ஆறு மாதங்களாக புதைகுழி பிரதேசம் புற்கள் வளர்ந்துள்ளமையாலும், மழைநீரால் சேதமடைந்திருப்பதாலும், வாரத்தில் இரண்டு நாட்கள் சட்ட வைத்திய அதிகாரியின் மேற்பார்வையின் கீழ் துப்புரவுப் பணிகளை மேற்கொள்ள நல்லூர் பிரதேச சபைக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளதாக சட்டத்தரணி வி.எஸ். நிரஞ்சன் குறிப்பிடுகின்றார்.

மேலும் இரண்டு மாத அகழ்வாய்வுக் பணிகளுக்காக 19 மில்லியன் ரூபாய் நிதி கோரப்பட்ட நிலையில், அந்த நேரத்தில் அந்தப் பகுதியில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக அகழ்வாய்வுப் பணிகளை இதுவரை ஆரம்பிக்க முடியவில்லை.

மேலும் 2025 ஆம் ஆண்டின் இறுதியில் பணத்தை மீள அனுப்ப வேண்டியிருந்தது.

இதற்கமைய, பெப்ரவரி 9, 2026 அன்று இடம்பெற்ற வழக்கு விசாரணையின் போது, யாழ்ப்பாண சட்ட வைத்தி அதிகாரி செல்லையா பிரணவன், மேலும் ஐம்பத்தாறு நாட்கள் அகழ்வாய்வுப் பணிகளுக்குத் தேவையான தொகையின் மதிப்பீட்டை மீண்டும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார்.

இந்த நிலையில், இதன் முன்னேற்றம் பற்றிய அறிக்கையை எதிர்வரும் வழக்கு விசாரணையின்போது நீதிமன்றில் முன்வைக்குமாறு சட்ட வைத்திய அதிகாரி மற்றும் காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகம் (OMP) ஆகியோருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

அத்தகைய அகழ்வாய்வு பணிகளுக்காக புதிதாகக் கோரப்பட்ட தொகை சுமார் 21 மில்லியன் ரூபாயென பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

நீதிமன்ற உத்தரவின் பேரில், தடயவியல் தொல்பொருள் ஆய்வாளர் பேராசிரியர் ராஜ் சோமதேவா மற்றும் யாழ்ப்பாண சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ், யாழ்ப்பாணத்தில் உள்ள செம்மணி சித்துப்பாத்தி இந்து மயான மனித புதைகுழியின் அகழ்வாய்வு முதன்முறையாக மே 15, 2025 அன்று ஆரம்பமானது.

முன்னர் அங்கீகரிக்கப்பட்ட நிதியுடன் 45 நாட்களுக்கு மேலாக மேற்கொள்ளப்பட்ட இரண்டாம் கட்ட அகழ்வாய்வு  செப்டெம்பர் 6, 2025 அன்று பிற்பகல் நிறைவடைந்த நேரத்தில், ஒரு குழந்தையின் எலும்பு உட்பட 240 மனித எலும்புகளில் ஒன்றைத் தவிர ஏனைய அனைத்தும் புதைகுழியிலிருந்து அகழ்ந்து எடுக்கப்பட்டன.

செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியிலிருந்து இதுவரை மீட்கப்பட்ட மனித எலும்புகளுடன், குழந்தை பால் போத்தல், பொம்மை, சிறுவர் காலணிகள் மற்றும்  பாடசாலை பை உள்ளிட்ட பிறபொருட்களும் அடங்கும்.

இலங்கையில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய மனிதப் புதைகுழி மன்னார் சதொச மனிதப் புதைகுழி ஆகும், அங்கு 28 சிறுவர்கள் உட்பட 376 மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

Radio Logo
Puthiya Kural Radio
Voice of Tamil People – Toronto, Canada
வானொலி