ஈரானின் புதிய உச்சத்தலைவராக நியமிக்கப்பட்டுள்ள மொஜ்தாபா காமேனி உயிருடன் இருப்பதாகத் தான் கருதுவதாகவும், இருப்பினும் அவர் தாக்குதல்களால் 'பாதிக்கப்பட்டுள்ளார்' அல்லது 'காயமடைந்துள்ளார்' என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதலின் முதல் நாளிலேயே, ஈரானின் முன்னாள் உச்சத்தலைவர் (அலி காமேனி) கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அவரது மகன் மொஜ்தாபா காமேனி அந்தப் பதவிக்குத் தெரிவு செய்யப்பட்டார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை மதகுருமார் சபையினால் உச்சத்தலைவராகத் தெரிவு செய்யப்பட்ட மொஜ்தாபா காமேனி, இதுவரை மக்கள் முன்னிலையில் தோன்றவில்லை. அவரது முதலாவது உத்தியோகபூர்வ கருத்துக்கள் கூட கடந்த வியாழக்கிழமை தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் ஒருவராலேயே வாசிக்கப்பட்டன.
புதிய தலைவர் "யுத்த காயங்களுக்கு" உள்ளாகியுள்ளதாக ஈரானிய அரசுத் தொலைக்காட்சி வர்ணித்திருந்தது. இது குறித்து ராய்ட்டர்ஸ் (Reuters) செய்தி நிறுவனத்திற்கு கருத்துத் தெரிவித்த ஈரானிய அதிகாரி ஒருவர், "தலைவர் லேசான காயங்களுக்கு உள்ளாகியுள்ளார், எனினும் அவர் தொடர்ந்து பணியாற்றி வருகின்றார்" எனத் தெரிவித்திருந்தார்.
ஃபொக்ஸ் நியூஸ் (Fox News) ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில், "அவர் உயிருடன் இருக்கிறாரா?" என்ற கேள்விக்கு அதிபர் ட்ரம்ப் இவ்வாறு பதிலளித்தார்:
"அவர் அநேகமாக உயிருடன் இருப்பார் என்றே நான் நினைக்கிறேன். அவர் சேதமடைந்துள்ளார் (Damaged), ஆனால் ஏதோ ஒரு வடிவில் அவர் உயிருடன் இருக்கிறார் என்பது எனது எண்ணம்."
புதிய தலைவர் வெளியிட்டுள்ள தனது முதலாவது அறிக்கையில், ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் என உறுதிபடத் தெரிவித்துள்ளார். அத்துடன், அண்டை நாடுகள் தமது எல்லைக்குள் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்களை உடனடியாக மூட வேண்டும் என்றும், தவறினால் ஈரான் அந்த நாடுகளை இலக்கு வைத்துத் தாக்குதல் நடத்தும் என்றும் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த பிப்ரவரி 28ஆம் திகதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீதான தாக்குதல்களை ஆரம்பித்தன. இதற்குப் பதிலடியாக இஸ்ரேல் மற்றும் அமெரிக்கத் தளங்களைக் கொண்டுள்ள வளைகுடா நாடுகள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி வருகின்றது.
இரண்டு வாரங்களை நெருங்கும் இந்தப் போரில் இதுவரை பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளதுடன், உலக நிதிச் சந்தை பாரிய வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. இருப்பினும், அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய மூன்று நாடுகளின் தலைவர்களும் விட்டுக் கொடுக்கப் போவதில்லை எனத் தெரிவித்து போரைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.