மொஜ்தாபா காமேனி குறித்து தகவல் அளித்தால் 10 மில்லியன் டொலர் சன்மானம்: அமெரிக்கா அறிவிப்பு!

மொஜ்தாபா காமேனி குறித்து தகவல் அளித்தால் 10 மில்லியன் டொலர் சன்மானம்: அமெரிக்கா அறிவிப்பு!

ஈரானின் புதிய உச்சத்தலைவர் ஆயதுல்லா மொஜ்தாபா காமேனி உள்ளிட்ட அந்த நாட்டின் உயர்மட்ட இராணுவ மற்றும் புலனாய்வு அதிகாரிகள் குறித்த தகவல்களை வழங்குவோருக்கு 10 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை சன்மானம் வழங்கப்படும் என அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் வௌியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பின்படி, ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவற்படையுடன் (IRGC) தொடர்புடைய 10 உயர்மட்ட அதிகாரிகளே இலக்கு வைக்கப்பட்டுள்ளனர்.

பிப்ரவரி 28ஆம் திகதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரானின் முன்னாள் உச்சத்தலைவர் அலி காமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அவரது மகன் மொஜ்தாபா காமேனி அப்பதவிக்கு வந்தார். தாக்குதலில் காயமடைந்ததாகக் கருதப்படும் அவர், இதுவரை மக்கள் முன்னிலையில் தோன்றவில்லை.

உச்சத்தலைவரைத் தவிர, அமெரிக்கா பின்வரும் அதிகாரிகள் குறித்த தகவல்களையும் கோரியுள்ளது:

அலி லாரிஜானி (பாதுகாப்புப் பொறுப்பதிகாரி)

இஸ்மாயில் காதிப் (புலனாய்வுத்துறை அமைச்சர்)

எஸ்கந்தர் மொமேனி (உள்நாட்டமைச்சர்)

உச்சத்தலைவரின் அலுவலகத்தைச் சேர்ந்த மேலும் இரு அதிகாரிகள்.

அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் பீட்டர் ஹெக்செத், ஈரானியத் தலைமைத்துவம் "பாதாள அறைகளுக்குள் பதுங்கியிருப்பதாக" (Cowering underground) தெரிவித்திருந்தார்.

இருப்பினும், அலி லாரிஜானி உள்ளிட்ட அதிகாரிகள் தெஹ்ரானில் நடைபெற்ற பேரணி ஒன்றில் அதிபர் மசூத் பெசெஷ்கியனுடன் கலந்துகொண்ட வீடியோக்களை ராய்ட்டர்ஸ் (Reuters) செய்தி நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

"உலகம் முழுவதும் பயங்கரவாதச் செயல்களைத் திட்டமிட்டு, ஒருங்கிணைத்து, நிறைவேற்றும் புரட்சிகர காவற்படையின் (IRGC) பல்வேறு பிரிவுகளை இந்த நபர்களே வழிநடத்துகின்றனர்" என அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் குற்றம் சுமத்தியுள்ளது.

அமெரிக்கப் பிரஜைகளைக் கொன்ற தாக்குதல்களுக்குப் பொறுப்பானவர்கள் எனக் கூறி, IRGC அமைப்பை அமெரிக்கா ஏற்கனவே 'வௌිநாட்டு பயங்கரவாத அமைப்பாக' பிரகடனப்படுத்தியுள்ளது.

அதேவேளை, 2020 இல் கொல்லப்பட்ட காசிம் சுலைமானியின் மரணத்திற்குப் பழிவாங்க அதிபர் ட்ரம்ப் உள்ளிட்ட அதிகாரிகளைக் கொல்ல ஈரான் சதி செய்வதாகவும் வாஷிங்டன் குற்றம் சுமத்தி வருகின்றது.

பயங்கரவாதத்திற்குத் தாம் ஆதரவளிப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை ஈரான் வழக்கம் போல் நிராகரித்துள்ளது. ஈரானின் மீதான பொருளாதாரத் தடைகள் மற்றும் அழுத்தங்களை நியாயப்படுத்துவதற்காகவே வாஷிங்டன் இத்தகைய அடிப்படையற்ற அரசியல் ரீதியான குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாக ஈரானிய அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.