மத்திய கிழக்கு வரலாற்றிலேயே மிகவும் சக்திவாய்ந்த குண்டுவீச்சுத் தாக்குதல் ஒன்றை ஈரானின் 'மகுட வைரம்' என அழைக்கப்படும் கார்க் தீவு (Kharg Island) மீது அமெரிக்க மத்திய கட்டளைப்பீடம் (CENTCOM) நடத்தியுள்ளதாக அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
தனது 'Truth Social' சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள அவர், கார்க் தீவில் உள்ள அனைத்து இராணுவ இலக்குகளும் (Military Targets) முற்றாக நிர்மூலமாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
எண்ணெய் உள்கட்டமைப்புகள் தப்பின
இந்தத் தாக்குதல் குறித்து அதிபர் ட்ரம்ப் மேலும் விளக்குகையில்:
"தீவில் உள்ள எண்ணெய் உள்கட்டமைப்புகளை (Oil Infrastructure) அழிக்க வேண்டாம் என நான் தற்போது தீர்மானித்துள்ளேன். இருப்பினும், ஹார்முஸ் நீரிணை ஊடாகச் செல்லும் கப்பல்களின் சுதந்திரமான மற்றும் பாதுகாப்பான பயணத்திற்கு ஈரானோ அல்லது வேறு எவராவதோ இடையூறு விளைவித்தால், எனது இந்தத் தீர்மானத்தை நான் உடனடியாக மறுபரிசீலனை செய்வேன்."
ஈரானுக்கு விடுக்கப்பட்ட இறுதி எச்சரிக்கை
ஈரானியத் தலைமைத்துவத்தை நோக்கிய தனது செய்தியில், ஈரான் உடனடியாக ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு சரணடைய வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார். "தமது நாட்டில் எஞ்சியிருப்பவற்றையாவது காப்பாற்றிக்கொள்ள அவர்கள் முன்வர வேண்டும், தற்போது அங்கு மிஞ்சியிருப்பது மிகக் குறைவே" என அவர் எள்ளிநகையாடியுள்ளார்.
கார்க் தீவு என்பது ஈரானின் கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் 90 சதவீதத்திற்கும் அதிகமான பங்கைக் கொண்டுள்ள மிக முக்கியமான இடமாகும். இங்குள்ள இராணுவ நிலைகள் அழிக்கப்பட்டிருப்பது ஈரானின் தற்காப்புத் திறனைப் பெருமளவில் பலவீனப்படுத்தியுள்ளதாக இராணுவ ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.