லெபனான் மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகளைத் தனது நாட்டின் தலைநகரான பாரிஸில் நடத்துவதற்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்தித் தரத் தான் தயாராக இருப்பதாக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரோன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து 'X' தளத்தில் பதிவிட்டுள்ள அவர், வெள்ளிக்கிழமை அன்று லெபனான் அதிபர், பிரதமர் மற்றும் பாராளுமன்ற சபாநாயகர் ஆகியோருடன் தான் கலந்துரையாடியதாகக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது இஸ்ரேலுடன் "நேரடிப் பேச்சுவார்த்தைகளில்" ஈடுபடுவதற்கு அவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இஸ்ரேலுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு
"பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்து போர் நிறுத்தத்தை எட்டுவதற்கும், நிரந்தரத் தீர்வொன்றைக் காண்பதற்கும் இஸ்ரேல் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்" என மெக்ரோன் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், லெபனான் அதிகாரிகள் தமது உறுதிமொழிகளை நிறைவேற்றி, அந்த நாட்டின் இறைமையைப் பாதுகாப்பதற்கு இது வழிவகுக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
லெபனான் மீது இஸ்ரேல் மேற்கொண்டு வரும் தரைவழி மற்றும் வான்வழித் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், பிரான்ஸின் இந்த மத்தியஸ்த முயற்சி சர்வதேச மட்டத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
வரலாற்று ரீதியாக லெபனானுடன் நெருக்கமான உறவைக் கொண்டுள்ள பிரான்ஸ், பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்டத் தொடர்ச்சியாக அழுத்தம் கொடுத்து வருகின்றது.
இதேவேளை, ஈரானின் புதிய உயர்மட்டத் தலைவரை இலக்கு வைத்தால், அமெரிக்கா 'கடுமையான பழிவாங்கலுக்கு' முகம் கொடுக்க நேரிடும் என ரஷ்யாவிற்கான ஈரானிய தூதுவர் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவின் ஸ்புட்னிக் ஊடக நிறுவனத்திற்கு வழங்கிய நேர்காணலின் போது, ஈரானிய தூதுவர் காசெம் ஜலாலி, தஹ்ரானின் புதிய உயர்மட்டத் தலைவரான மொஜ்தபா காமெனியை படுகொலை செய்ய முயற்சிக்க வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மொஜ்தபாவின் தந்தையான அலி காமெனி படுகொலை செய்யப்பட்டதன் பின்னர், ஈரானிய மக்கள் "இரத்தத்திற்கு இரத்தம் பழிவாங்குவதை" எதிர்பார்ப்பதாக ஜலாலி மேலும் தெரிவித்துள்ளார்.