டுபாய் விமான நிலையம் மீது ட்ரோன் தாக்குதல்; விமான சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்!

டுபாய் விமான நிலையம் மீது ட்ரோன் தாக்குதல்; விமான சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்!

டுபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு (Dubai International Airport) அருகாமையில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலைத் தொடர்ந்து, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கிருந்தான அனைத்து விமான சேவைகளும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.

விமான நிலையப் பகுதிக்கு அருகே நடத்தப்பட்ட இந்த ட்ரோன் தாக்குதலால் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாகவே பயணிகள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலால் எவருக்கும் உயிரிழப்புகளோ அல்லது காயங்களோ ஏற்படவில்லை என்பதை சர்வதேச ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. தற்போது குறித்த பகுதியில் பரவியுள்ள தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான பணிகளில் தீயணைப்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ள பயணிகள், தமது விமானப் பயணங்கள் குறித்த மேலதிக விபரங்களைப் பெற்றுக்கொள்ள அந்தந்த விமான சேவை நிறுவனங்களுடன் (Airlines) தொடர்புகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் நிலவி வரும் சூழலில், ஐக்கிய அரபு அமீரகத்தின் ஃபுஜைரா துறைமுகத்தைத் தொடர்ந்து டுபாய் விமான நிலையமும் இலக்கு வைக்கப்பட்டுள்ளமை பிராந்தியத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.