மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் சீரடைந்து, நிலைமை வழமைக்குத் திரும்பும் வரை இலங்கையில் எரிபொருள் விநியோகம் QR குறியீட்டு முறையின் கீழேயே முன்னெடுக்கப்படும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) அறிவித்துள்ளது.
பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் மேலாண்மை பணிப்பாளர் மயூரு நெத்திகுமார நேற்று (15) விடுத்துள்ள அறிவிப்பில், இந்த முறைமை நீண்ட காலத்திற்கு நடைமுறையில் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
எரிபொருள் ஒதுக்கீடு (Quota) மாற்றம்: QR குறியீட்டு முறை தொடர்ந்தாலும், தற்போது வழங்கப்பட்டுள்ள எரிபொருள் லீட்டர் அளவானது (Quota) வரும் நாட்களில் அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் ஏப்ரல் மாத இறுதி வரை நாட்டுக்குத் தேவையான எரிபொருள் கையிருப்பில் உள்ளது.
எரிபொருளைப் பதுக்குதல், தேவையற்ற முறையில் அதிகளவு கொள்வனவு செய்தல் மற்றும் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி குழப்பம் விளைவிப்பதைத் தடுப்பதற்காகவே நேற்று (15) முதல் மீண்டும் QR முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
QR குறியீட்டு முறையூடாக எரிபொருள் விநியோகத்தை முன்னெடுப்பதன் மூலம், நாட்டின் எரிபொருள் பாதுகாப்பை (Fuel Security) உறுதிப்படுத்த முடியும் என பணிப்பாளர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.