இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இறந்துவிட்டதாக அல்லது காயமடைந்துள்ளதாக ஈரானிய அரச ஊடகங்கள் பரப்பிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அவர் தான் நலமுடன் இருக்கும் வீடியோ ஒன்றை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.
ஜெருசலேமின் புறநகர்ப் பகுதியில் உள்ள சிற்றுண்டிச்சாலை (Cafe) ஒன்றில் தனது உதவியாளருடன் காபி அருந்தியபடி உரையாடும் இந்த வீடியோவை நெதன்யாகு தனது டெலிகிராம் (Telegram) கணக்கில் பதிவிட்டுள்ளார்.
வீடியோவில் அவரது உதவியாளர் ஈரானிய வதந்திகள் குறித்துக் கேட்டபோது, நெதன்யாகு ஹீப்ரு மொழியில் ஒரு சிலேடை வார்த்தையைப் பயன்படுத்திப் பதிலளித்தார். ஹீப்ரு மொழியில் 'இறப்பு' என்பதைக் குறிக்கும் சொல், பேச்சுவழக்கில் 'ஒன்றின் மீது அதிக விருப்பம் கொள்வது' (Crazy about) என்பதையும் குறிக்கும்.
"நான் காபி மீது பைத்தியமாக இருக்கிறேன். அதுமட்டுமல்ல, நான் எனது மக்கள் மீதும் அதிக அன்பு (Crazy) கொண்டிருக்கிறேன்" என அவர் சிரித்துக்கொண்டே அந்த வீடியோவில் பதிலளித்துள்ளார்.
குறித்த வீடியோ எடுக்கப்பட்ட இடத்தை ராய்ட்டர்ஸ் (Reuters) செய்தி நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. அந்தச் சிற்றுண்டிச்சாலையின் உட்புறத் தோற்றம் மற்றும் ஞாயிற்றுக்கிழமை அவர்கள் வெளியிட்ட ஏனைய புகைப்படங்களை ஒப்பிட்டுப் பார்த்ததில், இந்த வீடியோ தற்போதைய போர்ச் சூழலில் எடுக்கப்பட்டது என்பது உறுதியாகியுள்ளது.
பெப்ரவரி 28 அன்று போர் தொடங்கியதிலிருந்து, நெதன்யாகு ஏவுகணைத் தாக்குதலுக்குள்ளான நகரங்கள் மற்றும் இராணுவ முகாம்களுக்கு விஜயம் செய்துள்ள போதிலும், பாதுகாப்பு காரணங்களுக்காக ஊடகங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
தற்போது இஸ்ரேலில் பொதுக் கூட்டங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், பாடசாலைகளும் மூடப்பட்டுள்ளன. மக்கள் பாதுகாப்பு அறைகளுக்கு (Safe Rooms) அருகிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.