ஹார்முஸ் பாதுகாப்பு: நாடுகளின் 'ஆர்வம் இல்லாத' போக்கைக் கடுமையாகச் சாடினார் ட்ரம்ப்!

ஹார்முஸ் பாதுகாப்பு: நாடுகளின் 'ஆர்வம் இல்லாத' போக்கைக் கடுமையாகச் சாடினார் ட்ரம்ப்!

ஹார்முஸ் நீரிணையில் (Strait of Hormuz) சுதந்திரமான கப்பல் போக்குவரத்தை உறுதிப்படுத்துவதற்காக சர்வதேச கடற்படைக் கூட்டணியை அமைக்கும் அமெரிக்காவின் முயற்சிக்கு ஏனைய நாடுகள் காட்டும் 'ஆர்வமின்மை' குறித்து அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.

மத்திய கிழக்கில் ஈரானுக்கு எதிரான போர் தீவிரமடைந்துள்ள நிலையில், உலகின் மிக முக்கியமான எண்ணெய் விநியோகப் பாதையான ஹார்முஸ் நீரிணையைப் பாதுகாப்பதில் சம்பந்தப்பட்ட நாடுகள் போதிய 'உற்சாகம்' காட்டவில்லை என அவர் சாடியுள்ளார்.

நேட்டோவுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

இது குறித்து தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ஹார்முஸ் நீரிணை ஊடாகத் தமது எரிபொருள் தேவையின் பெரும்பகுதியை பூர்த்தி செய்துகொள்ளும் நாடுகள், அதன் பாதுகாப்பிற்குப் பங்களிக்காமல் அமெரிக்காவை மாத்திரம் நம்பியிருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது எனத் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, நேட்டோ (NATO) உறுப்பு நாடுகள் இந்த விடயத்தில் விரைவான தீர்மானங்களை எடுக்கத் தவறினால், அந்த அமைப்பின் எதிர்காலம் 'மிகவும் மோசமானதாக' அமையும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

ஏன் இந்த அதிருப்தி?

நிதி மற்றும் இராணுவச் சுமை: அமெரிக்கா மாத்திரம் இந்தப் பிராந்தியத்தில் பாரிய நிதியையும் இராணுவ வளங்களையும் செலவிடுவதை ட்ரம்ப் நீண்டகாலமாக விமர்சித்து வருகின்றார்.

ஐரோப்பாவின் தயக்கம்: ஜேர்மனி மற்றும் இத்தாலி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள், ஈரானுக்கு எதிரான போரில் நேரடியாக இராணுவ ரீதியாகப் பங்கெடுக்கத் தயக்கம் காட்டி வரும் நிலையில் ட்ரம்ப்பின் இந்தச் சாடல் வெளியாகியுள்ளது.

எண்ணெய் விலை உயர்வு: நீரிணை மூடப்பட்டுள்ளதால் சர்வதேசச் சந்தையில் மசகு எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 100 டொலர்களைத் தாண்டியுள்ள போதிலும், நாடுகள் இராணுவக் கூட்டணியில் இணையப் பின்வாங்குவதையே ட்ரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஈரானியப் படைகளின் ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களால் ஹார்முஸ் நீரிணை தற்காலிகமாக செயலிழந்துள்ள நிலையில், இதனை மீண்டும் திறக்க ஐரோப்பிய ஒன்றியம் தனது சொந்தத் திட்டங்களை ஆராய்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.