எரிபொருள் தட்டுப்பாட்டை எதிர்கொள்வதற்கு, எரிபொருள் நிரப்பு நிலையங்களில் விநியோகிக்கப்படும் அளவைக் குறைப்பதற்கோ அல்லது QR குறியீட்டைப் பயன்படுத்துவதற்கோ மட்டும் மட்டுப்படுத்தப்படாமல், அரசாங்கம் விரிவான சமூக-பொருளாதாரத் திட்டமொன்றை முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இலங்கையின் மின் உற்பத்தியில் 20 சதவீதத்திற்கும் அதிகமான பகுதிக்கு எரிபொருள் பயன்படுத்தப்படுவதால், எரிபொருள் சிக்கனம் என்பது போக்குவரத்துத் துறையை மட்டும் சார்ந்தது அல்ல என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 15) காலை 6 மணி முதல் QR குறியீட்டு முறை நடைமுறைக்கு வரும் என அரசாங்கம் அறிவித்திருந்த போதிலும், நள்ளிரவு வரை அது முழுமையாகச் செயற்படவில்லை.
பொதுமக்கள் பதிவு செய்ய வேண்டிய இணையத்தளம் சரியாக இயங்காததால், வழமை போன்றே பெற்றோல் மற்றும் டீசல் விற்பனை செய்யப்பட்டது. இன்றைய தினம் (மார்ச் 16) முதல் QR முறையைக் கட்டாயமாக்க பொலிஸாரின் உதவியைப் பெற்றுக்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதற்கிடையில், அரச சேவைகளை வீட்டிலிருந்து 'ஒன்லைன்' ஊடாக முன்னெடுக்க முடியுமா என்பது குறித்து ஆராயுமாறு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.
தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வாராந்த ஒதுக்கீட்டின்படி: மோட்டார் சைக்கிள்: 05 லீற்றர், முச்சக்கர வண்டி: 15 லீற்றர், கார்: 15 லீற்றர்.
தினசரி வாடகை சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டி சாரதிகள் வழமையாக 30-35 லீற்றர் எரிபொருளைப் பயன்படுத்தும் நிலையில், அரசாங்கம் அதனை 50 சதவீதத்திற்கும் மேலாகக் குறைத்துள்ளது.
அதேபோல், குடும்பத் தேவைகளுக்காகவும் பிள்ளைகளைப் பாடசாலைக்கு அழைத்துச் செல்லவும் மோட்டார் சைக்கிள்களைப் பயன்படுத்துவோருக்கு 5 லீட்டர் என்பது எவ்வகையிலும் போதுமானதல்ல.
இத்தகைய கடுமையான வெட்டுக்கள் மக்களின் இயல்பு வாழ்க்கையை முடக்கி, பாரிய மக்கள் போராட்டங்களுக்கு வழிவகுக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
வெறும் கட்டுப்பாடுகளை மட்டும் விதிக்காமல், எரிபொருள் மற்றும் மின்சாரப் பயன்பாட்டைக் குறைக்க பின்வரும் ஆக்கபூர்வமான திட்டங்களை அரசாங்கம் உடனடியாக நடைமுறைப்படுத்தினால், இருக்கும் இக்கட்டான நிலையிலிருந்து மீளலாம்.
வாராந்த வேலை நாட்களை 04 நாட்களாகக் குறைத்தல் மற்றும் ஒரு நாளைக்கு 06 மணிநேர வேலை நேரத்தை அறிமுகப்படுத்துதல். இதன் மூலம் அலுவலக மின்சாரப் பயன்பாடு மற்றும் போக்குவரத்துச் செலவைக் குறைக்கலாம்.
அரச அலுவலகங்களை திங்கள் முதல் வியாழன் வரை காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை மாத்திரம் திறத்தல். மேலதிக நேரக் கடமைகளை (OT) தற்காலிகமாக நிறுத்துதல்.
ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்கு காலை 8.30 முதல் மதியம் 12.00 மணி வரையும், இரண்டாம் நிலை மாணவர்களுக்கு மாலை 3.00 மணி வரையும் பாடசாலை நேரத்தை மாற்றியமைத்தல்.
மாவட்டங்களுக்கு வெளியே இருந்து நீண்டதூரம் பயணிக்கும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, தற்காலிகமாகத் தமது வசிப்பிடத்திற்கு அருகிலுள்ள பாடசாலைகளுடன் இணைந்துகொள்ள வசதி செய்தல்.
தனியார் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் தமது ஊழியர்களுக்குப் பொதுப் போக்குவரத்து வசதிகளை (Staff Bus) ஏற்பாடு செய்ய வேண்டும்.
சுப்பர் மார்க்கெட் உள்ளிட்ட வர்த்தக நிலையங்களை காலை 9.00 முதல் இரவு 8.00 மணி வரை மாத்திரம் திறக்க அனுமதித்தல்.
ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) மூடப்பட்டுள்ளதால் ஏற்பட்டுள்ள சர்வதேச நெருக்கடியைச் சமாளிக்க, அரசாங்கம் அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கிய சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவை உடனடியாகக் கூட்டி, ஒரு தேசியக் கொள்கையை வகுக்க வேண்டும். இத்திட்டங்களை அரசாங்கம் நினைத்தால் ஒரே வாரத்திற்குள் நடைமுறைப்படுத்த முடியும்.