கனடாவில் ஈரானிய அரசு எதிர்ப்பாளர் படுகொலை: இருவர் மீது கொலைக் குற்றச்சாட்டு!

கனடாவில் ஈரானிய அரசு எதிர்ப்பாளர் படுகொலை: இருவர் மீது கொலைக் குற்றச்சாட்டு!

கனடாவில் வசித்து வந்த ஈரானிய ஆட்சி விமர்சகர் மசூத் மஸ்ஜூதி (45) படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக இருவர் மீது முதல் நிலை கொலைக் குற்றம் (First-degree murder) சுமத்தப்பட்டுள்ளதாக கனடிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிரிட்டிஷ் கொலம்பியாவின் மிஷன் (Mission) பகுதியில் கடந்த வாரம் மஸ்ஜூதியின் உடல் எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டன. கடந்த பெப்ரவரி மாத தொடக்கத்தில் இருந்து அவர் காணாமல் போயிருந்த நிலையில், இந்தத் துயரச் செய்தி வெளியாகியுள்ளது.

இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக மெஹ்தி அஹ்மத்சாதே ரசாவி (48) மற்றும் அரெசு சுல்தானி (45) ஆகிய இருவர் மீது பொலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இவர்கள் இருவரும் இன்று (திங்கட்கிழமை) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

ராயல் கனடிய மவுண்டட் பொலிஸ் (RCMP) வெளியிட்டுள்ள தகவல்களின்படி: உயிரிழந்த மஸ்ஜூதிக்கும், குற்றம் சுமத்தப்பட்ட இருவருக்கும் இடையே சமூக வலைத்தளங்களில் நீண்டகாலமாக கருத்து முரண்பாடுகள் இருந்து வந்துள்ளன.

இவர்கள் மூவரும் ஒருவருக்கு ஒருவர் நன்கு அறிமுகமானவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், கொலையின் பின்னணியில் அரசியல் நோக்கம் உள்ளதா என்பது குறித்து மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

முன்னாள் பல்கலைக்கழக கணித விரிவுரையாளரான மஸ்ஜூதி, ஈரானிய அரசாங்கத்தின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்து வந்தவர். 'சட்டம் மற்றும் தேசிய இறையாண்மையை மீட்பதற்கான ஈரான் முன்னணி' (Iran Front for the Revival of Law and National Sovereignty) என்ற அரசு எதிர்ப்பு அமைப்பின் சபை உறுப்பினராகவும் அவர் பணியாற்றினார்.

ஈரானிய சமூகங்களுக்குள் ஊடுருவியுள்ள அந்நாட்டு உளவுச் வலைப்பின்னல்களை அம்பலப்படுத்துவதில் அவர் பல ஆண்டுகளாகத் தீவிரமாகச் செயற்பட்டு வந்ததாக அவரது அமைப்பு தெரிவித்துள்ளது.

மஸ்ஜூதியின் மறைவு கனடாவில் வாழும் ஈரானிய சமூகத்தினர் மத்தியில் பெரும் கவலையையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இது ஒரு திட்டமிடப்பட்ட அரசியல் படுகொலை என அவரது அமைப்பு குற்றம் சுமத்தியுள்ள போதிலும், பொலிஸார் இது ஒரு "இலக்கு வைக்கப்பட்ட சம்பவம்" (Targeted incident) என்று மாத்திரமே தற்போதைக்கு வர்ணித்துள்ளனர்.