ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் முன்னெடுத்து வரும் இராணுவத் தாக்குதல்களுக்கு மத்தியில், முஸ்லிம் நாடுகள் தமது உத்தியோகபூர்வ நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்த வேண்டும் என ஈரானின் தேசிய பாதுகாப்புச் சபையின் செயலாளர் அலி லரிஜானி (Ali Larijani) தெரிவித்துள்ளார்.
ஈரானிய மக்கள் தமது பலமான தேசிய எதிர்ப்பின் மூலம் ஆக்கிரமிப்பாளர்களை ஒரு மூலோபாய நெருக்கடிக்குள் தள்ளியுள்ள நிலையில், "நீங்கள் எந்தப் பக்கத்தில் இருக்கிறீர்கள்?" என லரிஜானி முஸ்லிம் அரசாங்கங்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
யுத்தம் ஆரம்பமானது முதல் பல இஸ்லாமிய நாடுகள் ஈரானுக்கு மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட ஆதரவையே வழங்கி வருவதாக அவர் விமர்சித்துள்ளார். ஒரு சில நாடுகளைத் தவிர, ஏனைய நாடுகள் வெறும் அரசியல் அறிக்கைகளை வெளியிடுவதோடு மாத்திரம் தமது ஆதரவை மட்டுப்படுத்திக்கொண்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
முஸ்லிம் நாடுகளின் நிலப்பரப்பில் அமைந்துள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் குறித்து அவர் காரசாரமான கேள்விகளை எழுப்பினார்:
"தமது நாடுகளில் உள்ள அமெரிக்கத் தளங்களை ஈரானுக்கு எதிரான தாக்குதல்களுக்குப் பயன்படுத்த அனுமதித்துவிட்டு, அந்தத் தளங்களை ஈரான் தாக்கும்போது அதனை விமர்சிப்பது எந்த வகையில் நியாயம்?"
"தமது மண்ணில் உள்ள அமெரிக்கத் தளங்கள் ஈரானைத் தாக்கும்போது, ஈரான் கைகளைக் கட்டிக்கொண்டு வேடிக்கை பார்க்க வேண்டுமா?" என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
முஸ்லிம் நாடுகளின் அரசாங்கங்கள் எவ்வித ஒளிவுமறைவுமின்றித் தமது நிலைப்பாட்டைத் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என ஈரானிய பாதுகாப்புச் சபையின் செயலாளர் வலியுறுத்தியுள்ளதாக 'பாலஸ்தீன குரோனிக்கிள்' (Palestine Chronicle) செய்தி வெளியிட்டுள்ளது.