ஆப்கானிஸ்தான் தலைநகரில் உள்ள போதைப்பொருள் மறுவாழ்வு வைத்தியசாலை மீது நேற்று இரவு பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலில் குறைந்தது 400 பேர் கொல்லப்பட்டதாக ஆப்கானிஸ்தான் குற்றம் சாட்டியது.
கடந்த மாத இறுதியில் தொடங்கிய மோதலின் தீவிரமாக இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. மேலும் எல்லை தாண்டிய மோதல்கள் மற்றும் ஆப்கானிஸ்தானுக்குள் வான்வழித் தாக்குதல்கள் மீண்டும் மீண்டும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
சர்வதேச நாடுகள் இந்த விவகாரத்தில் தலையிட கோரிக்கை விடுக்கப்பட்டுள்ள போதிலும், இரு நாடுகளும் தங்களது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதால் ஆசிய பிராந்தியத்தில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன.
இந்தத் தாக்குதலுக்கு தலீபான் அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், பாகிஸ்தான் இக்குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது.
இதன்படி கிழக்கு ஆப்கானிஸ்தானில் நடத்தப்பட்ட தாக்குதல்கள் எந்த பொதுமக்களின் தளங்களையும் தாக்கவில்லை என்று கூறி, பாகிஸ்தான் குற்றச்சாட்டை நிராகரித்தது.
இதுதொடர்பாக ஆப்கானிஸ்தானின் துணை அரசாங்க செய்தித் தொடர்பாளர் ஹம்துல்லா பித்ரத் தனது எக்ஸ் வலைதளத்தில், “உள்ளூர் நேரப்படி இரவு 9.00 மணியளவில் காபூலில் உள்ள வைத்தியசாலை மீது வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டது. 2,000 படுக்கைகள் கொண்ட வசதியின் பெரும் பகுதிகள் அழிக்கப்பட்டது. இறப்பு எண்ணிக்கை இதுவரை 400 பேரை எட்டியுள்ளது, அதே நேரத்தில் சுமார் 250 பேர் காயமடைந்துள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
காபூலின் முக்கியப் பகுதிகளான ஷார்-இ-நாவ் மற்றும் வஜீர் அக்பர் கான் ஆகிய இடங்களில் இரவு நேரத்தில் மிகப்பெரிய வெடிச்சத்தங்கள் கேட்டதாகவும், அதைத் தொடர்ந்து மருத்துவமனை வளாகத்திலிருந்து கரும்புகை வெளியேறியதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
தலீபான் அரசின் தலைமை செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் இது குறித்து கூறுகையில், “பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் ஒருமுறை ஆப்கானிஸ்தானின் இறையாண்மையை மீறி தாக்குதல் நடத்தி உள்ளது. கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானோர் சிகிச்சையில் இருந்த நோயாளிகள். இந்த செயலை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். இத்தகைய செயலை, ஏற்றுக்கொள்ளப்பட்ட அனைத்துக் கொள்கைகளுக்கும் எதிரானது. இது ஒரு மனிதகுலத்திற்கு எதிரான குற்றச் செயல் என்று கருதுகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
ஆனால், இக்குற்றச்சாட்டுகளைத் திட்டவட்டமாக மறுத்துள்ள பாகிஸ்தான் தகவல் அமைச்சகம், தங்களது தாக்குதல்கள் காபூல் மற்றும் நங்கர்ஹார் பகுதிகளில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மற்றும் ராணுவ நிலைகளை மட்டுமே இலக்கு வைத்ததாக கூறியுள்ளது.
பாகிஸ்தானுக்கு எதிராகச் செயல்படும் தீவிரவாதிகளுக்கு ஆப்கானிஸ்தான் புகலிடம் அளிப்பதாகக் கூறி, இந்தத் துல்லியமான தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகப் பாகிஸ்தான் இந்த சம்பவத்தை நியாயப்படுத்தி உள்ளது.
இதனிடையே மறுவாழ்வு வைத்தியசாலை கடுமையாக சேதம் அடைந்துள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.